ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2018

தவமிருந்தோ வரம் வாங்கியோ குருநாதரிடம் சக்தி பெறவில்லை – “அடியும்… உதையும்… திட்டும் வாங்கித்தான்…!” குருநாதரின் உண்மை நிலைகளை உணர்ந்தேன்


நீங்கள் நினைக்கலாம்…! குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு நிறையச் சக்திகளைக் கொடுத்தார். எல்லாவற்றையும் காட்டினார். உங்களுக்குள் அதைப்  பதிவு செய்தார். எங்களுக்கு எங்கே ஐயா நீங்கள் (ஞானகுரு) காட்டுகின்றீர்கள்..? எப்படிப் பதிவு செய்கிறீர்கள்…! என்று நிறையப் பேர் கேட்கலாம்.

ஒரு மனிதன் சுவற்றின் அந்தப் பக்கமாக நின்று கொண்டு திட்டிக் கொண்டிருக்கின்றான் என்றால் நாம் என்ன செய்கின்றோம்…? உடனே அதைக் கூர்ந்து கவனிக்கின்றோம். ஆ…! அது என்ன…?  நம்மை பற்றித் தான் குறையாகப் பேசுகிறார்களா…! என்று கூர்ந்து கவனித்தால் என்ன ஆகிறது…!

இவர்கள் திட்டியதெல்லாம் இங்கே நமக்குள் பதிவாகிறது. பதிவானதும் என்ன செய்கிறோம்..? உஹூம்…ஹூம்…! அவ்வளவு தூரத்திற்கு ஆகி விட்டதா…? என்று அதை முழுதாக ஏற்று அந்த உணர்வையே தியானிக்க ஆரம்பித்து விடுகின்றோம்.

அடுத்தாற்போல் அவனோடு சண்டைக்குப் போவதற்கும்… அவனை எப்படி… என்ன செய்வது…? என்னை இப்படிப் பேசிவிட்டானே…! அவனுக்கு என்னென்ன வழிகளில் நாம் இடைஞ்சல் செய்யலாம்…? என்ற இந்த மாதிரியான சாதாரண நிலைகளில் தான் இருக்கிறோம்.

இதற்குக் காரணம் என்ன…? என்றால்
1.நமக்குள் இருக்கும் காந்தப் புலனை எதன் மேல் நாம் கவனத்தைச் செலுத்துகின்றோமோ
2.அந்த உணர்வலைகள் அதற்குள் (நமக்குள்) பதிவாகிறது.
3.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…! (இது மிகவும் முக்கியம்)

அதைப் போல குருநாதர் அவர் பித்தனைப் போன்று வெளியே காட்சி தந்ததாலும் அவர் பல பல முறைகளில் பல எண்ணங்களை எனக்குள் சொல்லும் போது அதை “ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் தான்…!” நான் (ஞானகுரு) இருந்தேன். அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை.

இப்பொழுது நான் பேசும் போது நீங்கள் புரியவில்லை… புரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா…?
1.நீங்கள் சொல்கிறீர்கள் சாமி… எனக்கு ஒன்றுமே புரியவில்லை,
2.நீங்கள் சொல்வதைத் திருப்பிச் சொல்ல முடியவில்லையே சாமி..! என்று (சிலர்) சொல்கிறீர்கள் அல்லவா…!

இதைப் போல தான் குருநாதர் (உடலுடன் இருக்கும்போது) எனக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது அதை நான் செவிகளில் கேட்டாலும்
1.அவர் ஒரு நிமிடத்தில் கன்னடத்தில் பேசுவார்
2.அடுத்த நிமிடம் மலையாளத்தில் பேசுவார்
3.அதற்கடுத்த நிமிடம் தமிழில் பேசுவார்
4.அடுத்துத் தெலுங்கில் பேசுவார்.
5.இந்த உலகத்தில் எத்தனை பாஷைகள் உண்டோ அத்தனை பாஷையிலும் ஒவ்வொரு வார்த்தையைச் சொல்வார்…!
6.அப்புறம் நான் எங்கே புரிந்து கொள்வது….?

அப்படி எல்லாம் சொல்லிவிட்டு நான் (குருநாதர்) சொல்வதெல்லாம் “தெரிகிறதாடா…?” என்று பல முறை என்னிடம் கேட்பார்.
1.தெரிகிறது… என்று சொன்னால் “அதைச் சொல்…!” என்பார் குருநாதர்.
2.தெரியவில்லை என்றால் “ஏன் தெரியவில்லை…?” என்று கேட்பார்.
3.எப்படிப் பார்த்தாலும் அந்த இரண்டுக்கும் நான் விடை சொல்ல வேண்டும்.

இப்படித்தான் என்னைச் சிக்கலில் மாட்ட வைத்து பல இம்சைகளைக் கொடுத்தார். ஒவ்வொன்றுக்கும் அடி கொடுப்பார். அப்படிக் கொடுத்து
1.பல பல முறைகளில் என் கவனத்தை அவர் பால் திருப்பச் செய்து
2.குருநாதர் என்ன சொல்கிறார்…? என்று உற்றுக் கவனிக்கச் செய்து
3.அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான்
4.அவர் சொல் வாக்கினைப் பதியச் செய்கின்றார்.

அப்படிப் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மையை நான் அவரைக் கூர்ந்து பார்த்து
1.அடுத்தாற்போல் அடித்து விடுவாரோ…!
2.நம்மை எப்படியாவது பிடித்துவிடுவாரோ…! என்ற இந்த எண்ணத்தைக் கொண்டு தான்
3.”அவர் சொல்லுக்குள்” என் எண்ணத்தைச் செலுத்தும் போது
4.அவரின் ஆற்றல்மிக்க நிலையை எனக்குள் பதிவு செய்கிறார்.

ஏனென்றால் அந்த மெய் ஞானி அவருடைய வழியில் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் இப்படித்தான் கொடுக்கின்றார்.
1.நான் ஜெபமிருந்து வரம் வாங்கி அவரிடம் வாங்கவில்லை.
2.நான் ஜெபமிருந்து தவமிருந்து வரமிருந்து அதை எடுத்ததில்லை.

அவர் உணர்வின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்ததைத் தான் அவர் சென்ற வழிகளிலேயே அதன் பின்னாடி நான் பின்பற்றும் போது தான் இந்த ஆற்றலின் சக்தியை நான் உணர முடிகின்றது. அந்த ஆற்றலின் சக்தியை உங்களுடனும் நான் பரிமாறிக் கொள்ள முடிகின்றது,

விண்ணுலகத்தின் தன்மையும் மண்ணுலகத்தின் தன்மையும் மண்ணுலகத்தில் விளைந்த சக்திகள் மனித (நம்) உடலுக்குள் உயிரால் இயக்கப்பட்டு மனிதனுக்குள் அது எவ்வாறு விளைந்தது…? என்பதைத் தெளிவாக உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அவர் அதை உணர்த்தினாலும் அந்த உணர்த்திய வழிகளிலே நான் அவரைப் (அவர் சொன்னதைப்) பின்பற்றுவதற்கு எத்தனையோ நிலைகளைக் கையாண்டார்.

நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.