கேள்வி:-
வணக்கம் ஐயா., எனக்கு அதிகாலை சரியாக 3.00 மணிக்கு விழிப்பு வருகிறது. நிறைய நாள் கவனித்துள்ளேன், 3அல்லது 2.55,,3.05 போன்ற துல்லிய நேரம் விழிப்பு வரக் காரணம் புரியவில்லை. இது உடலில் சுவாச மாற்ற காரணமா அல்லது வேறு எதுவென்று புரியவில்லை..விளக்கம் கூறுங்கள் ஐயா...
பதில்:-
உங்களுக்கு மூன்று மணிக்கு முழிப்பு வருகிறது என்றால் அதற்குக் காரணம் உங்கள் உடலில் வளர்த்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அலைகள் தான். (சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்)
ஒரு தாய்ப் பறவை உணவைச் சேகரித்து எடுத்து வந்து தன் குஞ்சுகளுக்குப் பசியாற்றுவது போல் எந்தெந்த உயிரான்மாக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வித்தாகப் பதிவாகியுள்ளதோ அந்த வித்தை வளர்க்கும் விதமாக ஞானகுரு அவர்கள் (அவர் உடலுடன் இருந்த காலத்தில்) அந்த நேரத்தில் தான் விழித்திருந்து பல பல சக்திகளை ஊட்டும் நேரம்.
அந்த நேரத்தில் தட்டியெழுப்பத்தான் செய்யும். படுக்கையில் இருந்த மாதிரியே அப்படியே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிவிட்டுக் கண்ணின் நினைவை நம் பூமியின் வடக்குத் திசையில் துருவத்தின் வழியாகக் கொண்டு சென்று அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
அப்படியே தூக்கம் வந்தாலும் தூங்கிக் கொள்ளலாம். இல்லை வரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்கள் குடும்பத்திலுள்ளோர் நண்பர்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணித் தியானிக்கலாம்.
அதற்கப்புறமும் தூக்கம் வரவில்லை என்றால் மேலே சொன்ன தியானத்தை அப்படியே ஒரு நோட்டிலோ அல்லது உங்கள் ஃபோனிலோ கம்ப்யூட்டரிலோ பதிவு செய்யுங்கள்.
இந்தப் பழக்கம் வளர வளர உங்கள் வாழ்க்கை என்றுமே துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்கும். அதாவது அகஸ்தியர் வாழும் இடம் உங்கள் இருப்பிடமாகும்.
உங்கள் சொல் செயல் பேச்சு மூச்சு வலிமை பெறும். மற்றவர்களையும் நல்லதாக்கும்.