ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2018

சில குழந்தைகள் பிறந்ததிலிருந்து "நச்சு...நச்சு என்று அழுகின்றது...!" – ஏன்...?


உதாரணமாக ரோட்டில் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை ஒரு கர்ப்பிணி கூர்மையாகக் கவனித்தால் போதும்.

உற்று பார்த்து... அடப் பாவிகளா...! இப்படியே நச்சு...நச்சென்று சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்...! என்று அந்தக் கர்ப்பிணி எண்ணினால் அவர்கள் உடலிலிருந்து வெளி வந்த சண்டை போடும் உணர்வுளை அந்தத் தாய் கவர்ந்து அதைச் சுவாசிக்க நேர்கின்றது.

தாய் நுகர்ந்த அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள்ளும் நுகரப்பட்டுப் பதிவாகி விடுகின்றது.

கர்ப்பிணி அதை வேடிக்கையாகப் பார்த்திருந்தாலும் சரி... அல்லது நியாயத்தைப் பேசுவது போன்ற நிலையாக இருந்தாலும் சரி... கூர்மையாகக் கவனித்த அந்த உணர்வின் சக்திகளைக் கர்ப்பிணியின் கண் கவர்கின்றது.

அவர்கள் சண்டையிட்ட வெறித் தன்மையான விகாரமான சொற்களின் சொற்றொடரின் நிலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பப்டும் போது
1.கண் அவர்களைப் படம் எடுத்து
2.அந்த உணர்வலைகள் ஈர்க்கப்பட்டுத் தன் உடலிற்குள் செலுத்தப்படும் போது
3.கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இந்த உணர்வு வினையாகச் சேர்க்கப்பட்டு விடுகின்றது,

அந்தக் குழந்தை பிறந்த பின் என்ன செய்கிறது...? பிறந்த சிறிது நாள்களிலேயே நச்சு...நச்சு என்று அழுகத் தொடங்கும். உடனே  “சனியன் இப்படியே அழுது தொலைக்கிறதே...!” என்று அந்தத் தாய் வெறுப்பாக எண்ணும்.

அப்போது அதே சமயத்தில் மற்றவர்கள் வந்து “குழந்தை அழுகிறதே... என்னம்மா செய்கிறாய்...? கொஞ்சம் என்ன என்று பார் அம்மா...!” என்று சொன்னால்
1.குழந்தையின் தாய்க்குச் “சுருக்...!” என்று கோபம் வரும்.
2.அவ்வளவு தான்... அங்கே சண்டை வந்து விடும்.
3.ஏனென்றால் கருவிலிருக்கும் பொழுது அந்தக் கர்ப்பிணி கூர்மையாகச் சண்டையைப் பார்த்தது. (சண்டையைப் பார்ப்பது என்றால் டி.வி.யிலோ கம்ப்யூட்டரிலே பத்திரிக்கையிலோ எதிலே பார்த்தாலும் அந்த நிலை தான்)
4.அதே சண்டை இங்கேயும் வந்து விடுகின்றது.

கருவில் இருக்கப்படும் போது இப்படி வேடிக்கை பார்த்த குழந்தையின் நிலைகளில் சில வீடுகளில் நீங்கள் பார்க்கலாம். சனியன்...! இது பிறந்ததிலிருந்து தான்... எனக்குப் பல தொல்லைகள் வந்தது...! என்று சில தாய்மார்கள் சொல்வார்கள்.

ஆனால் தாய்... தான் சண்டையையோ மற்ற அசம்பாவிதங்களையோ  வேடிக்கை பார்த்ததாலேதான் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அது சேர்ந்தது என்று நினைப்பதில்லை.

ஏனென்றால் உற்றுப் பார்த்துச் சுவாசிக்கும் பொழுது உணர்வின் காந்தங்கள் எப்படி இயக்குகின்றது...? என்ற நிலையைத்தான் “கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான்...!” என்று அன்றைய ஞானிகள் காவியங்களாக வடித்து நாம் அறிந்து கொள்ளும்படி செய்தார்கள்.

ஒவ்வொரு நொடியிலும் கண்களால் பதிவு செய்த உணர்வுகள் உடலுக்குள் சேர்ந்த பின் மீண்டும் அது எப்படி நம்மை இயக்குகின்றது...? அதை நாம் எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்...? என்ற நிலைகளை மெய் ஞானிகள் எத்தனையோ காவியங்கள் மூலமாக உணர்த்தியுள்ளார்கள்.

கண்ணின் நினைவாற்றல் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து நம் உடலிற்குள் செயல்படுத்துவோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் புனிதத் தன்மையை நாம் நிச்சயம் பெற முடியும்.

1.கருணைக் கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை நீக்கி எப்படிச் சுவை மிக்கதாக உருவாக்கிச் சாப்பிடுகின்றோமோ
2.உடலில் வரக்கூடிய அழுக்கையும் துணிகளில் உள்ள  அழுக்குகளையும் சோப்பைப் போட்டு எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ
3.தங்க நகை செய்தாலும் அதிலுள்ள செம்பையும் பித்தளையும் திரவகத்தை ஊற்றி எப்படி அதைச் சுத்தத் தங்கமாக்குகின்றோமோ
4.மண்ணிற்குள் பல உலோகங்கள் இருந்தாலும் அதை எல்லாம் பிரித்துவிட்டுச் சுத்தமான தங்கத்தை எப்படி எடுக்கின்றோமோ
5.அது போல் இந்த வாழ்க்கையில் பல எண்ணங்களையும் பல உணர்வுகளையும் நுகர்ந்தாலும் (சந்தர்ப்பங்கள் எப்படி இருந்தாலும்)
6.அதற்குள் இருக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு அகற்றுவதே யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.