ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2018

“செல்வம் தனதல்ல…!” என்ற எண்ணம் இருப்போருக்கு செல்வத்தின் நாயகனின் ஆசி என்றுமே இருக்கும்…!


செல்வம் படைத்தவர் அனைவருக்குமே அச்செல்வத்தைக் “கொங்கணவர்…!” தந்து அருளினார் என்ற எண்ணம் இருந்திட வேண்டும். செல்வத்தின் நாயகன் அவனப்பா…!

அவன் தந்த செல்வத்தை எவன் ஒருவன் பேணிப் பாதுகாத்து நல்வழியில் அந்தச் செல்வத்தைப் பயன்படுத்துகின்றானோ அவன் நிலைக்கெல்லாம் அந்தச் செல்வத்தின் நாயகன் அள்ளி அள்ளி அளித்திடுவான்.

அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பவன் தான் ஒவ்வொருவரும். அவன் தந்த செல்வத்தைப் பல நிலையில் சிதற விடுபவனுக்கு அங்கு அது நிற்பதில்லை. “செல்வத்தின் பாதுகாப்பாளன்” நல்ல நிலையில் நற்காரியங்களுக்கு அந்தச் செல்வத்தைப் பயன்படுத்திட வேண்டுமப்பா.

அவன் கையில் உள்ள வரையில் தான் அச் செல்வம் அவனுடையதாகின்றது. அதற்கு அவன் அதிபதியாகின்றான், அவன் உழைத்த உழைப்பிற்கு அவனின் ஆசைக்கு அவனை ஒரு பாதுகாப்பாளனாக நம்பித்தான் அச்செல்வத்தின் நாயகன் அவனுக்குச் செல்வத்தை அளிக்கின்றான்.

1.அவன் அளித்த செல்வத்தைப் பல மடங்கு பெருக்கி பலரின் வறுமையை நீக்கி
2.அந்தச் செல்வம் தனதல்ல என்று எண்ணுபவனுக்கு
3.என்றுமே அந்தச் செல்வத்தின் நாயகனின் ஆசிகள் இருந்து கொண்டே இருக்குமப்பா…!

பாலாஜி என்னும் வெங்கடேஸ்வரரைத் துதிக்கும் பொழுதே மக்களின் மனதில் செல்வத்தின் நிலை தான் வருகிறதப்பா…! அவரும் வருபவருக்கெல்லாம் தன் வழியில் வரவை வாங்கி பல மடங்கு அளிக்கின்றார்.

நல் வழியில் செல்வத்தை உபயோகிப்பவர்களுக்கெல்லாம் அது அவரை விட்டு அகலுவதில்லை. பெரும் பேராசைக்காரர்களிடமும் பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவோர்களிடமும் அந்தச் செல்வம் தங்குவதில்லை,

இந்தச் செல்வத்தினால் தானப்பா மனித மனங்கள் எல்லாமே மாறி மாறிப் பல பல ஆசைகளை மனதில் ஏற்றிக் கொண்டு இந்தச் செல்வத்திற்கே அடிமையாக வாழ்பவர்கள் தானப்பா இன்றைய மனிதர்கள் பலரின் நிலை.

1.செல்வச் செழிப்போடு வாழ வேண்டும்
2.செல்வத்திற்கே நாம் அடிமையாகிவிடக் கூடாது
3.செல்வம் என்பது செல்வ நாயகன் நமக்கு அளித்த சொத்தப்பா…!