ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2018

இந்தச் சதமற்ற உடலுக்காக வேதனைப்பட்டு “நீ பெற வேண்டிய நல்லதை என்றும் இழந்து விடாதே…!” என்றார் குருநாதர்


மனமே இனியாகிலும் மயங்காதே      
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
                                                    
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ                                            மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
                                                           
“நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ                                        இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா… …?”
என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் கடுமையான குளிரில் வைத்து எம்மை (ஞானகுரு) இப்படிக் கேட்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் அவர் எமக்குப் பல அரும் பெரும் சக்திகளைக் கொடுத்தாலும் நான் வீட்டிலுள்ள என் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு அவர் சொன்ன வழிகளில் போகப்படும் பொழுது ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் என் எண்ணங்கள் மாறுகின்றது.

நம் குடும்பம் பிள்ளை குட்டிகள் எல்லாம் எப்படி இருக்கின்றதோ…? நாம் இங்கே இந்தப் பனிப்பாறையில் இறந்து விட்டால் அவர்களை யார் காப்பாற்றுவது…? என்று வேதனைப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றேன்.

அப்பொழுது அவர்களுக்கு அதைச் செய்ய வேண்டுமே இதைச் செய்ய வேண்டுமே என்ற எண்ணங்களில் இந்த ஆசை தான் எனக்குள் வருகிறதே தவிர… குருநாதர் சொன்னதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

1.உனக்குள் பெற வேண்டியதை மறந்து…
2.நீ பெற வேண்டியதை இழந்து இப்படித் தவிக்கின்றாய்…!
3.ஆகவே எது உனக்குச் சதம்..?
4.உன் உயிர் உன்னை விட்டுச் சென்று விட்டால் சதமற்ற இந்த உடலுக்காகச் சதம் என்று நீ ஏன் வாதம் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்ற பொருள்படப் பேசினார் குருநாதர்

அன்று அகஸ்தியன் காட்டிய மெய் வழிப்படி என்றுமே சதமாக இருக்கும் உயிரான ஈசனுடன் நீ அவனிடம் ஒன்றி அவனின் நிலைகளாகப் போகும் போது அவனின் உணர்வாக நீ சதமாக ஒளியாக இருக்க முடியும்…!

இதை உணர்த்துவதற்காகத்தான் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். அவர் சொன்னதை மனதில் வைத்து நம் உயிரான ஈசனுடன் என்றுமே ஒன்றி வாழ வேண்டிய நிலையே அது.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ                                                           
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமாமோ…?
ஆகவே இந்த மாய வாழ்வில் மண்ணுடன் மண்ணாய் மறைவதைப் பாராய்….! என்று தெளிவுற எடுத்துரைத்தார் குருநாதர்.

மனித உணர்வின் இச்சை கொண்ட நிலையில்
1,அந்தச் சதமற்ற உணர்வுக்கு
2.இந்தச் சதமற்ற உன் உடலுக்கு
3,நீ ஏன் இத்தனை வாதிடுகின்றாய்…? என்று சொல்லி விட்டு
4,உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் நிலையைக் குருநாதர் எனக்குள் தெளிவாக எடுத்துரைத்தார்.

நீங்களும் அதை அறிந்து கொள்ள வேண்டும்..! உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியாக ஏகாந்தமாக வாழ வேண்டும்…! என்பதற்கே இதைச் சொல்கிறேன்.