ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2018

நோயில்லாதவர்கள் வலியில்லாதவர்கள் யாராவது இருக்கின்றார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா...? நம் உடல் உறுப்புகள் எதனால் பாழாகின்றது…?


இன்று எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து நாம் மனிதனாக வந்தாலும் இன்று நாம் எப்படி வாழ்கின்றோம்…? நம்முடைய சந்தர்ப்பம் எப்படி ஏற்படுகின்றது…? என்பதனைப் பார்ப்போம்.

நம்மிடம் செல்வம் நிறைந்திருக்கின்றது. இதை வைத்து நாம் எப்படியும் வாழலாம் என்ற நிலையும் இருக்கின்றது. ஆனால் அதற்குத்தக்க தொழில் செய்து நாம் வாழ்ந்து வந்தாலும் நம்மிடம் வேலை செய்யக் கூடியவர்கள் பெரும் குற்றவாளியாக இருக்கின்றார்கள். (சந்தர்ப்பம்)

நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுடைய தரித்திரம் குற்றவாளியாக்கச் செய்கின்றது. குற்றம் செய்வதை உணர்ந்த பின் நாம் இவ்வளவு நல்லது செய்தோமே… இப்படிக் குற்றம் செய்கின்றார்களே…! என்ற வேதனையைத் தான் நாம் நுகர நேர்கின்றது.

வேதனை என்பது கடும் விஷம். அந்த விஷமான உணர்வு உயிரிலே பட்டு அந்த உணர்வு உமிழ் நீராக மாறி நம் சிறு குடலிலே சேர்த்துக் கொண்ட பின்
1.அடிக்கடி அந்த வேதனையை எண்ணினால் குடல் நோய் வருகின்றது.
2.கல்லீரல் மண்ணீரலிலே வலி எடுக்கின்றது நுரையீரலையும் பாதிக்கின்றது.
3.அதனால் இன்னும் வேதனை அதிகரிக்கப்படும் போது உப்பையும் சர்க்கரையும் பிரித்துச் சமப்படுத்தும் கிட்னியும் செயலிழக்கின்றது.
4.சிறுநீரகம் சரியாக வேலை செய்யாததால் இரத்தத்தில் வரும் விஷத்தைப் பிரிக்காதபடி இருதயம் பலவீனமடைகின்றது.
5.நல்ல இரத்தம் போகாததால் நம்மால் சிந்தித்துச் செயல்பட  முடிவதில்லை... சிந்திக்கும் சக்தியும் இல்லாது போய்விடுகின்றது.

நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் உறுப்புகளுக்குள் இருக்கும் நல்ல அணுக்களால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்ட பிறகு இருதயத்திற்கு வந்து இருதயத்தின் வழிதான் நமது சிறு மூளைக்கும் மற்ற பாகங்களுக்கும் நல்ல இரத்தம் போய் உடல் உறுப்புக்களை இயக்கக்கூடிய நிலைகள் இருக்கின்றது. இங்கிருந்து தான் எல்லா நல்ல குணங்களுக்கும் இரத்தம் அனுப்பப்படுகின்றது.

ஆனால் அந்த இருதயமே பாழடைந்து விட்டால் என்ன பண்ணுவது…? இருதயம் பலவீனமாகும் பொழுது சிந்தனை செய்தோம் என்றால் நெஞ்சில் வலி...! மனக் கலக்கம்...! நம்மால் எதுவும் முடியாது போய்விடுகின்றது. அப்போது உடல் முழுவதற்கும் சிந்தனை இழந்து சிறு மூளைப் பாகங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

மற்றவர்கள் செய்யும் குற்றங்களைப் பார்த்தோம். அதனால் வேதனைப்பட்டோம். ஆனால் இவ்வளவு தூரத்திற்குத் தொல்லை வருகின்றது. இதைத் துடைப்பது எப்போது...?

ஆரம்பத்தில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்..! என்று எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் பன்றியாக உருவாக்கியது. 

பன்றியாகப் பிறந்த பின் தீமையை நீக்கிவிட்டு நல்லதையே நுகர்ந்தது. தீமையை எண்ணாது நல்லதையே எண்ணியதால் நஞ்சை நீக்கிவிட்டு நல்லதை நுகரக்கூடிய சக்தியைப் பெற்று நல்ல உறுப்புகளை உருவாக்கி மனிதனாக உருவாக்கியது நமது உயிர்.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் தவறு செய்பவர்களைப் பார்த்த நிலையில் நமக்குள் இத்தகைய தீமைகள் விளைகின்றது.

அடுத்து நம் கண்கள் என்ன செய்கின்றது அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் எல்லாம் நம் கருமணியில் ஒட்டி இருக்கின்றது.

ஒரு டம்ளரில் விஷத்தைப் போட்டு அதைக் கொட்டிவிட்டுக் கழுவாமல் மீண்டும் அதிலே வேறொரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்…? அதை உட்கொண்டால் அந்த விஷத்தால் மயக்கம் வரத்தான் செய்யும்.

இதே போல் வேதனைப்படும் உணர்வுகளை நாம் கண்களின் வழியாகத்தான் நுகர்ந்து பார்க்கின்றோம். கண் தான் அதைக் கவர்ந்து நம் உடலிலே பதிவாக்கி அந்த உணர்வைச் சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்தது.

அப்போது இந்த வேதனையான விஷமான உணர்வுகள் கருமணியிலே இருக்கப்படும் போது அடுத்து எந்த நல்லதைப் பார்த்தாலும் நல்லதைச் சிந்தித்தாலும் அதிலே பட்ட பின் நல்லதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. அதிலே வலுவும் இருக்காது.

அந்தக் கருமணியின் வழியாகத்தான் நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நரம்புகள் வழியாகச் செய்திகள் போகும், நாம் கண்ணிலே பார்த்தவுடன் எல்லாவற்றிற்கும் கட்டளை இடுகின்றோம்.

அப்போது இந்த விஷத்தின் தன்மை கலந்து போனபின் அந்த நரம்புகள் பலவீனமடைகின்றது. அடுத்து நாம் கை கால் அங்கங்களை அசைக்க வேண்டும் என்றாலும் எலும்புடன் தொடர்பு கொண்ட இந்த நரம்பு மண்டலங்களில் வேதனை என்ற விஷம் கலப்பதால்
1.கை கால் மடக்கும் பொழுது வலி… மூட்டுகளில் வலி…
2.சரவாங்கி நோயாக வந்து விடுகின்றது.

எலும்பை உருவாக்கிய அணுக்களும் மடிய ஆரம்பித்து விடுகின்றது. எலும்புகள் நாளடைவில் பலவீனமானவுடனே உட்கார்ந்து எழுந்திரித்தார்... சடக்…! என்று எலும்பு உடைந்து போய்விட்டது என்று சொல்வார்கள். நல்ல அணுக்கள் மடியும்போது இருக்கிற எலும்புகள் இப்படி ஆகிவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

மனிதனாக வருவதற்கு முன் மற்ற உயிரினங்களாக இருக்கும் பொழுது நாம் எவ்வளவோ நரக வேதனைப்பட்டோம். அதிலெல்லாம் தப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எல்லாவற்றிலும் தப்பிக்கக் கூடிய மனித உடல் கொடுத்த பிற்பாடு நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தால் துடைக்காமல் விட்டால் நம் உடலுக்குள் இத்தனையும் வருகின்றது.

சரவாங்கி நோய் வந்ததென்றால் எத்தனை வலி…! கழுத்து பிடித்துக் கொண்டால் எத்தனை வலி…! கண் வலித்ததென்றால் எத்தனை வலி…! நெஞ்சு வலி பிடித்ததென்றால் எத்தனை வலி…! கல்லீரலிலும் மண்ணீரலிலும் வலி வந்தவர்கள் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?

ஆனால் ஒரு நாளில் செத்தது…! எது…? உதாரணமாக மானை நரி அடிக்கப்படும் பொழுது வேதனைப்படுகின்றது. அடித்து ஒரு மணி நேரத்தில் அந்த வேதனை உணர்வு கொண்டே மான் நரியை எண்ணி நரியின் உடலுக்குள் மானின் உயிர் சென்று நரியாகப் பிறக்கின்றது.

ஆனால் எத்தனையோ கோடி உடல்களை இப்போது கடந்து வந்த பிற்பாடு வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுளை எடுத்து வளர்த்துக் கொண்டால் நம் ஒவ்வொரு உறுப்புகளிலும் இப்படி வேதனை.
1.நோயில்லாதவர்கள் வலியில்லாதவர்கள் யாராவது இருக்கின்றார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா...?
2.எதாவதொரு வகையிலே ஒரு உறுப்பில் வலி இருந்து கொண்டே தான் இருக்கும்.
3.ஆக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று தெரியக்கூடிய சக்தி மனிதனுக்கு இருந்தும் அந்தத் தீமையைத் துடைக்கத் தவறினால் அது உடலுக்குள் நஞ்சாக விளைந்து  நல்ல உறுப்புகளின் இயக்கத்தை மாற்றி நோயாக்கி விடுகின்றது. கேன்சர் வந்துவிட்டால் எத்தனை நரக வேதனைப்படுகின்றார்கள்…? உயிர் போவதற்கு முன்னால் எத்தனை பாடுபடுகின்றார்கள்…!

நரி மானைக் கொல்லும் போது வேதனையை எடுத்து அது நரியாகப் பிறந்து விடுகின்றது. ஆனால் மனிதனாகி விஷத் தன்மையை இப்படிச் சந்தர்ப்பத்தில் வளர்த்துக் கொண்ட பின்
1.அடுத்து நரியாகவோ பாம்பாகவோ விஷத்தின் தன்மையான உடலைப் பெறுவதற்கு
2.நல்ல உறுப்புகள் குறையப்படும் பொழுது ஒவ்வொருவரும் எத்தனை வேதனைப்படுகிறார்கள்..?

கேன்சர் நோய் இருக்கக்கூடியவர்கள் சிறுநீரகம் செயலிழந்தவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் கல்லீரல் நோய் உள்ளவர்கள் வயிற்றில் புண் வந்தவர்கள் வேதனையை நுகரப்படும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடல் பாழாகி நரக வேதனையை உருவாக்கி நரக லோகத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றது...!
1.யார்…? நம் உயிர் தான்…!
2.நாம் எண்ணியதை உயிர் இறையாக்குகிறது
3.உணர்வின் செயலாக உடலை இயக்குகிறது
4.ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உடலாக்கியது.
5.ஆனால் வேதனைப்படும் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் மீண்டும் (கடைசியில்) எங்கே கொண்டு போகின்றது…?
7.நரக லோகத்திற்கே நம்மைக் கொண்டு போகின்றது நம் உயிர்.
8.செல்வம் இருந்தாலும் கூட அந்தச் செல்வத்தைப் பாதுகாக்கும் நிலையற்றுப் போய்விடுகின்றது.
9.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் என்ன செய்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே நாம் சாப்பிடும் உணவில் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வுகளை வளர்க்கும் சக்தி கொண்ட இந்த மனித உடலில் நாம் சரியான முறையிலே இந்த வாழ்க்கையைப் பக்குவப்படுத்தத் தவறினால் நம் சந்தர்ப்பம் அடுத்து “மனிதனல்லாத உடலை உருவாக்கிவிடும்…! என்பதனை நாம் தெளிவாக உணர்தல் வேண்டும்.