ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2018

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். அவர் அப்படித் தெரிந்தாலும்
1.இந்த உலகம் எப்படிப் பித்தான நிலைகள் இருக்கின்றது...! என்று
2.தன் உடலுக்குள் இருக்கும் மறைந்த உணர்வுகளைக் காட்டி
3.அந்தப் பித்தான நிலைகள் நீக்கி அவரின் உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போதுதான்
4.அவருடைய உண்மையின் நிலைகளை நான் (ஞானகுரு) அறிய முடிந்தது.

அவரைப் பித்தனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் அவருக்குள் இருந்த மெய் உணர்வின் தன்மை
1.நம்மைப் பித்தனாக்கும் உணர்வை நீக்கும் உணர்வின் ஆற்றல் கொண்டது என்பதைப்
2.பின்னாடி தான் என்னால் உணர முடிந்தது.

குருநாதர் அவர் பெற்ற மெய் உணர்வை எமக்குள் உபதேசித்து அந்த உணர்வின் தன்மையையைப் பதியச் செய்தார். பதிவு செய்ததை வளர்த்துக் கொண்டேன்.

அவர் கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் தன்மைக்குத் தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்தான் நான் அதன் வழிகளில் வளர முடியும்.
2.நான் தெரிந்து கொண்டேன்...! என்ற நிலைகளில் சொல்லிக் கொண்டிருந்தால்
3.நான் அழிந்து கொண்டு தான் இருக்க முடியுமே தவிர வளர்ந்திடும் நிலை இல்லை.
4.உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும்
5.உயர்ந்த வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும்
6.நீங்கள் இருள் நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.
7.மெய் வழியில்  நீங்கள் என்றுமே சென்றிட வேண்டும் என்ற இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
8.நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற நிலையில் குருநாதர் ஆணைப்படி
9.அதை வளர்க்கும் நிலைகளிலே வளர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

அது போன்று நீங்களும் உங்களை ஆண்டு கொண்டு இருக்கும் உயிரை ஈசனாக மதித்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் மணங்களை நாங்கள் நுகர வேண்டும். எங்கள் உயிரான ஈசனுக்குள் அந்தச் சக்திகள்  படர வேண்டும். அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய் ஞானிகள் அருள் வழியில் நாங்கள் செல்ல வேண்டும் என்ற இதை எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித நிலைகளிலிருந்து மீண்டு ஒவ்வொருவரும் பிறவியில்லா நிலை எப்படி அடைவது என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் அந்தக் கருத்தினை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களையும் படைத்தார்கள்.

உலக நிலைகளில் ஒவ்வொன்றும் மோதல் ஆவதை மகாபாரதப் போராகக் காட்டி அது அனைத்தையும் கண் நுகர்ந்து பார்த்து இதிலிருந்து விடுபடும் நிலையை அதே கண்களே நமக்கு வழி காட்டுகிறது என்று கண்ணனைக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் மகாபாராதப் போரைக் கண்ணன் (கண்கள்) தான் வழி நடத்தினான் என்ற உண்மையை உணர்த்துகின்றார்கள். கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் அனைத்தையும் கண்ணன் கீதா உபதேசமாகச் செய்கின்றான் என்றும் அந்தக் காவியங்கள் மூலம் உணர்த்துகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படு அந்த மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று நாம் கண்ணனிடம் (கண்களிடம்) வேண்டினால்
1.எட்டா தூரத்தில் விண்ணுலகில் இருக்கும் அந்த மெய் ஞானிகளை எட்டிப் பிடித்து
2.நம் கண்ணின் நினைவலைகள் கொண்டு அந்தச் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் செலுத்தும் பொழுது
3.உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் ஒளியான உணர்வைப் பெறச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் அவர்கள் பெற்ற சக்திகளை எந்த நஞ்சின் தன்மையும் மறைக்க முடியாது எந்தக் கோளும் மறைக்க முடியாது. எந்தச் சூரியனும் அதை மறைக்க முடியாது. அவைகளை யாரும் அழிக்க முடியாது. அழியாத நிலைகள் கொண்டது தான் துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும்.

ஏனென்றால் விண்ணிலிருந்து வரும் அந்த நஞ்சின் தன்மையை அவர்கள் உணவாக எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.

அவர்கள் பெற்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நம் உயிராத்மா சென்றாலும் மற்ற நஞ்சின் தன்மை நமக்குள் வந்தாலும் அதை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெறுகின்றோம். அதாவது
1.எரியும் நெருப்பிற்குள் ஒரு இருள் சூழ்ந்த பொருளைப் போட்டால்
2.அதுவும் பற்றி நெருப்பாக எரிவது போல
3.எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதனை வீழ்த்தி
4.ஒளியின் சுடராகப் பெறும் தகுதியாகப் பெற வேண்டும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராகப் பிரகாசமான நிலைகள் பெற வேண்டும் என்று நீங்கள் உங்கள் எண்ணத்தில் ஆழமாக ஊன்றி அதன் வழியில் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு உங்கள் அனைவருக்கும் அந்த ஆற்றல்கள் கிடைக்க வேண்டும் என்று நானும் தியானிக்கின்றேன். நீங்களும் அது போல் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.