கேள்வி:-
துருவ
மகரிஷிகள் அருள் உணர்வு கிடைத்த பிறகு பல வகைகளில் என்னை மேம்படுதேதி வருகிறேன். -அறியாமல்
பழகி வந்த தவறுகள் உணர்ந்து திருத்துகிறேன். அதில் விடுபட்ட பழக்கம் சில நேரம்
அதிகப் பேச்சு… நடந்த சம்பவங்கள் பகிர்தல்… என உற்சாகமாகப் பேசிவிடுகிறேன்.
பின் இதைச்
சொல்லிருக்கக் கூடாதோ…! அதைப் பகிர்ந்திருக்கக் கூடாதோ…! யோசிக்காமல்
சொல்லிவிட்டோமோ…? இதனால் அவர்களுள் கலகம்… அபிப்பிராய பேதம் வந்து விடுமோ…! என
பிறகு தன்னிலை உணரும் போது தோன்றி வருந்துகிறேன்.
இது
அடிக்கடி நிகழ்கிறது. அளவாக பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனதில்
தோன்றுவதெல்லம் நடந்ததெல்லாம் Filter செய்து பேசும் அளவு தெளிவோ நிதானமோ இல்லை.
அந்தத் தெளிவும் நிதானமும் வேண்டும்.
பதில்:-
மெய்
ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும் என்றால் அவசியம் பேசித்தான் ஆகவேண்டும். ஆனால்
1.யாரிடம்
பேசுகின்றோம்…?
2.யாருக்காகப்
பேசுகின்றோம்…?
3.எதை
விரும்பிப் பேசுகின்றோம்…?
4.பேசினால்
பயன் நமக்கா..? அல்லது பேச்சைக் கேட்பவருக்கா…?
5.அதனின்
பலனை இப்பொழுது உடனே நாம் பெற முடியுமா…? அல்லது அவர்கள் பெறுவார்களா…?
6.பேசாமல்
இருந்துவிட்டால் நல்லது நடக்குமா…?
இத்தனை
கேள்விகளுக்கும் நம்மிடம் விடை இருக்க வேண்டும்…! அது தான் முக்கியம். பேசுவது
முக்கியமல்ல…! அல்லது அதிகமாகப் பேசிவிட்டோமோ.. பேசாமல் இருந்திருக்கலாமோ…! இந்தச்
சந்தேகம் நமக்குத் தேவையில்லை.
நாம்
அடுத்தவர்கள் இயக்கும் பொம்மையாக இருந்துவிடக் கூடாது. நம் உணர்விலே இருக்க
வேண்டும். நம் உணர்வுகள் தான் மற்றவரை இயக்க வேண்டும். அவர்கள் உணர்வு நம்மை
இயக்கக் கூடாது.
நீங்கள்
கேட்டது போல் எனக்குள்ளும் இதே உணர்வுகள் தோன்றியது உண்டு. ஆனால் நான் பேசி
எனக்குத்தான் இது வரைக்கும் நல்லதாக ஆகியிருக்கின்றதே தவிர அடுத்தவர்களுக்கு
நல்லதாக (என் அளவுக்கு) ஆகவில்லை.
இதே
கேள்வியை நான் மகரிஷிகளிடம் கேட்டேன்.
அவர்கள்
சொன்ன பதில்… நீ சொன்னது உனக்குத் தான். நீ சொல்வதும் உனக்குத்தான். நீ சொல்லப்
போவதும் உனக்குத்தான். ஆகவே எந்த நல்லது உனக்குத் தேவையோ அதைச் சொல்.
சொல்லால்
யாரையும் திருத்தவோ நல் வழிப்படுத்தவோ முடியாது. பதிய வைக்க வேண்டும். ஆகவே
பேசுவது வேறு பதிய வைப்பது வேறு.
விதைகளை
மண்ணிலே பதியத்தான் வைக்கின்றோம். விதையிடமோ மண்ணிடமோ நாம் பேசுவதும் இல்லை.
அவர்களிடம் நாம் எந்த வகையிலும் தொடர்பும் கொள்வதில்லை. ஆனாலும் பதிய வைக்காமல்
நாம் நம்மிடமே வைத்திருந்தால் அது என்றும் முளைக்கப் போவதும் இல்லை. பலனும்
அளிக்காது.
அது
போல் நாம் பேசுவது என்றால் நல்லதை விளைய வைப்பதாக இருக்க வேண்டும். அது தான்
முக்கியம். ஆனால் விளைந்து வருவதற்குத் தாமதம் ஆகும். ஆனால் நிச்சயம் வரும். அதிக
அளவிலும் வரும். நிலைத்தும் நிற்கும். அதற்குக் கண்டிப்பாகப் பொறுமை தேவை.
பொறுமை
இல்லாது மண்ணைத் தோண்டிப் பார்த்தால் விதைகள் வீணாகப் போய்விடும்.
ஆகவே
பேசுவதன் நோக்கம் பதியச் செய்வதாக இருந்தால் அது என்றுமே நன்மை தான் தரும்.
முதலில் நமக்கு. பின் தான் அடுத்தவர்களுக்கு. ஆனால் பலன் என்றுமே உண்டு. பலனற்றுப்
போகவே போகாது. குறைந்த பட்சம் நமக்காவது நன்மை கிடைக்கும்.
ஆனால்
பேசினால் நமக்கு நன்மைதான் கிடைக்கும் என்ற உறுதி கிடையாது. அவர்களுக்கும் நன்மை
கிடைக்கும் என்ற உறுதியும் கிடையாது.
பேசுவதில்
தப்பில்லை. குறையவோ… கூடவோ…! ஆனால் நோக்கம் பதியச் செய்வதாக இருக்க வேண்டும். அது
தான் முக்கியம்.