ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2018

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்...?


கெமிக்கல் கலந்த ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்ட நாடாக்களில் விஞ்ஞான அறிவு கொண்டு (CD, MEMORY DRIVES) நம் எண்ணங்களையோ அல்லது பாடல்களையோ பதிவு செய்வதற்காக வேண்டி ஒரு காந்த ஊசியைக் (LASER) கொண்டு அதற்குள் உராயும் உணர்வின் ஒலிகளைப் பதிவாக்குகின்றார்கள்.

பாடல்களையோ மற்ற பேச்சுக்களையோ இப்படித்தான் பதிவு செய்கிறோம். அதிலிருந்து மீண்டும் காந்தப் புலனால் ஈர்க்கப்பட்டு அதற்குரிய சாதனத்துடன் (SCREEN, SPEAKER) இணைத்தால் எதைப் பாடினோமோ அதன் உணர்வாக ஒலி/ஒளி வருகின்றது.
1.அதை வேகமாகச் சுழற்றினால் அதிலிருந்து வெளி வரும் குரலோ இசையோ படமோ மாறுகின்றது.
2.நம் உணர்வுக்கொப்ப சமமாக்கினால் இனிமையாகின்றது.
3.அதே சமயத்தில் வேகம் குறைவானால் அந்தக் குரலின் தன்மை மாற்றமாகின்றது. இதை நாம் பார்க்கின்றோம்.
4.ஆகவே சுழற்சிக்குத் தக்க வெளிப்படும் அந்த உணர்வின் ஒலி அலைகள் மாறுகின்றது.

இவ்வாறு இயந்திரத்தின் துணை கொண்டு நாடாக்களில் பதிவு செய்து ஒலி/ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும் பொழுது இதிலே எந்தக் கெமிக்கல் கலந்த உணர்வினை இயக்குகின்றானோ அந்த அலைகளைப் பரப்புகின்றது.

அதைச் சூரியனின் காந்தப் புலன்கள் இழுத்துக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. காற்றிலே சிற்றலைகளாகப் படர்கின்றது. அதனுடைய இயக்கத் தொடரில் அதைக் கவர்ந்து செயல்படும் ஏரியலை அல்லது ஆண்டென்னாவை வைக்கின்றார்கள்.

ரேடியோவோ டி.வி.யோ அல்லது கம்ப்யூட்டரோ அதற்குள் இந்த ஆண்டென்னாவை இணைத்தவுடன் இதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து ட்ரான்சிஸ்டரால் கவரப்பட்டு விட்டால் அது ட்ரான்சாக்சன் செய்து
1.ஒலி/ஒளி அலைகளை மற்ற உணர்வுடன் வடிகட்டித் தனித் தனியாக அனுப்புகின்றது.
2.பேச்சுகளையோ பாடல்களையோ படங்களையோ அதன் மூலம் நாம் பார்க்கலாம்.
3.நம் உயிரும் இதைப் போன்று தான் இயக்குகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப் புலனறிவால் பிறருடைய நிலைகளை நாம் நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வின் அறிவாக
1.நம்மை இயக்கவும் செய்கின்றது
2.நம்மை அறியவும் வைக்கின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் உயிருக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளில் பட்டவுடன் அது ட்ரான்சிஸ்டரைப் (TRANSISTOR) போன்று ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கிறது.

அதாவது சுவாசித்த உணர்வுகளுக்குள் (காற்று) இருக்கும் ஒலி... ஒளி அவைகளை வடிகட்டி அந்த உணர்ச்சிகளை ஊட்டி அதைச் சிறுமூளைப் பாகத்திற்கு அனுப்பி மொத்த உடலையும் இயக்குகின்றது.

அதற்குப் பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து அது எந்தக் குணத்தின் உணர்வோ கருவாகி உருவாகி அணுவின் தன்மையாக நம் இரத்த நாளங்களில் சேமித்துக் கொள்கின்றது.

1.இரத்த நாளங்களில் உள்ள அணுக்கள் அதன் பசிக்கு உந்தும் பொழுது
2.அதனின் உணர்ச்சிகள் சிறு மூளைக்கு எட்டப்பட்டு
3.கண் காது மற்ற புலனறிவுகளுக்கு ஆணையிடப்பட்டு
4.மீண்டும் காற்றிலிருந்து அதே இனமான உணர்வுகளைக் கவரச் செய்கின்றது.
5.இப்படித்தான் நம்முடைய சுவாசம் எண்ணம் சொல் செயல் இயக்கம் எல்லாமே இயங்குகின்றது.

மெய் ஞானிகளின் உணர்வை உயிர் வழியாக நாம் கவர்ந்தால் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் இயக்கமாகி அதனின் அறிவாக நாம் மெய் ஞானிகள் கண்ட மெய்யை உணர முடியும்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானத்தின் அறிவை விஞ்ஞான அறிவுடன் இணைத்துக் காட்டுகின்றோம்.