எந்தக் கோயிலுக்குச் சென்றாலும்
1.அங்கே நிம்மதியாக இருந்து எங்கள் கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
என்று கேட்டிருக்கின்றீர்களா…?
2.தெய்வத்திடம் உங்கள் கஷ்டத்தைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
அந்தக் கோயிலிலே கேட்ட அதே பழக்கத்தில் என்னிடம் (ஞானகுரு) கேட்கும்
பொழுதும் குடும்பத்தில் கஷ்டம்... வியாபாரத்தில் நஷ்டம்... பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை...!
வீட்டில் ஒரே கலவரமாக இருக்கிறது என்று தான் சொல்வீர்கள்.
அது எல்லாம் நீங்க வேண்டும் என்று யாராவது கேட்கிறார்களா என்றால் இல்லை....!
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
2,மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க
வேண்டும்.
3.எங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும்... தாய் தந்தையரை
மதித்து அவர்கள் நடக்க வேண்டும்
4.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
5.விவசாய நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இந்த ஆசை கொண்டு நீங்கள் கேட்டால் அதற்குரிய நல்ல சக்திகளை
நீங்கள் பெற முடியும்.
அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று
சொல்லப்பட்டுள்ளது. நாம் எதை எண்ணுகின்றமோ அதைத்தான் காற்றில் இருந்து நம் கண்கள்
கவர்கின்றது.
கண் கவர்ந்ததை இழுத்து ஆன்மாவாக்கிச் சுவாசிக்கும் பொழுது
உயிரில் பட்டவுடன் எண்ணம் சொல் செயல் என்று நம் உடலை இயக்குகின்றது. ஆக நம் கண்கள்
ஒரு ஆண்டெனா போல் செயல்படுகின்றது.
நல்லது நடக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தில் இருந்தால் அது
நமக்குள் பதிவாகின்றது நாம் எண்ணும் போது காற்றில் இருந்து அந்த நல்லதைச் சுவாசிக்கச்
செய்கின்றது. நமக்குள் வரும் கெட்டதை இப்படி மாற்றப் பழக வேண்டும்.
ஒரு சிலர் கோவிலுக்குச் சென்று ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்
அதைச் செய்யலாமா... அல்லது வேண்டாமா...! என்று ஜோசியம் கேட்பது போல் சாமியிடம் பூ வைத்துக்
கேட்பார்கள்.
சங்கடமான எண்ணத்துடன் பூவைக் கண்ணில் பார்ப்பார்கள். அதற்கும் இதற்கும்
அந்தத் தொடர்பு வந்தவுடனே எதிர்மறையாகி வித்தியாசமான பூ விழும்.
சிவப்புப் பூவை நினைத்து அது வந்து விட்டால் கல்யாணம் கட்டிக் கொள்ளலாம்
என்று சொல்வார்கள்.
1.ஆக இவர்கள் எண்ணத்தில் எப்படி எப்படி இந்த மனம் வருகிறதோ
2.இந்தக் கல்யாணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று பார்ப்பார்கள்
3.அந்த எண்ணத்தின் வலுவுக்கொப்ப அந்தச் சிவப்புப் பூ விழும். கல்யாணமும்
நடந்து விடும்.
அதே சமயத்தில் கணவன் மனைவிக்குள் இரண்டு பக்கமும் வித்தியாசமாக
இருக்கும். பெண்கள் அவர்களுக்குப் பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பார்கள்.
ஆண்களோ வேண்டாம் என்ற நிலையில் எண்ணுவார்கள்.
தாயே நீ இந்த மாதிரிச் சோதனையாக இருக்கிறது. நீதான் வழி காட்ட வேண்டும்.
என்ன செய்வது...! என்று இரண்டு பேரும் கூடிப் பேசிய பிறகு அங்கே போய்ப் பார்ப்பார்கள்.
பெண்கள் சக்தி அதிகமாகி விட்டது என்றால் அவர்கள்
எண்ணத்திற்குத்தக்க பூ வரும்.
1.பார்த்தீர்களா…! சாமி வந்தாச்சு...! சரியான பதில் கிடைத்துவிட்டது
என்று
2.இவர்களுடைய எண்ணங்களுக்கொப்ப அதாவது கண்ணிலிருந்து வரக்கூடிய
மேக்னட் பவர் அந்த வேலையைச் செய்யும்.
நம்முடைய வாழ்க்கையில் இப்படித்தான் ஜோசியம் கேட்டு நம்முடைய நல்ல
குணங்களை நாமே செயலற்றதாக மாற்றிக் கொள்கின்றோம்.
1.நல்ல குணங்களை வளர்ப்பதற்காகக் கோயில் வைத்தால்
2.நல்ல குணங்களைக் குறைத்து
3.கெட்ட குணங்களை வளர்ப்பதற்குத் தான் நாம் கோயிலைப் பயன்படுத்துகின்றோம்.
ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய காற்று மண்டலம் விஷத் தன்மையாகப்
போய்விட்டது. அந்த உணர்வுகள் எல்லாம் நம்மிடம் பதிவாகி இருக்கிறது.
விஞ்ஞான உலகில் அடிக்கடி கோபப்படுகின்றவர்களை நாம் பார்க்கின்றோம்.
அவர்கள் உடலில் நல்ல குணங்களை இழந்ததால் தான் அவர்கள் அப்படிக்
கோபப்படுகின்றார்கள்.
அதே உணர்வை நாம் நுகரும் பொழுது நம் உடலில் அது வந்து நம் நல்ல
குணங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றது. இரத்தக் கொதிப்பு நிச்சயம் வரும்.
அப்போது இந்த மாதிரித் தீமைகளைப் பார்த்தவுடனே துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணில் ஏங்கி நம் உடலில் உள்ள என் ஜீவான்மாக்கள்
அனைத்தும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
1.அப்போது அது வீரியம் அடைந்தவுடனே
2.அந்தக் கோபமான உணர்வு நம் உடலுக்குள் புகாதபடி தள்ளி விட்டு விடுகிறது.
3.இப்படித் தள்ளக் கற்று கொள்ள வேண்டும்.
துணியில் அழுக்கு நிறைய இருக்கிறது என்றால் சோப்பைப் போட்டு நுரையைப்
போட்டு எப்படி வெளியேற்றுகிறோமோ இதை மாதிரிச் செய்து பழக வேண்டும்.
இதெல்லாம் நாம் சாதாரணமாகத் தெரியாத ஜனங்களுக்கு தனக்குள் நடக்கக்கூடிய
நிகழ்ச்சி நாம் எண்ணியதனால் நமக்குள் என்ன விளைவு வருகிறது. இதிலிருந்து நாம் எப்படித்
தப்பிக்க வேண்டும் என்று தான் கொடுத்திருக்கிறார்கள்.
தீமைகளை நீக்கி நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த
உபதேசத்தின் வாயிலாக ஒவ்வொரு குணங்களிலேயும் உணர்வுகளிலேயும் இணைக்கும்படி
செய்கிறோம்.
கல்லூரிகளில் புரொபஸர்களோ அல்லது தொழிற்சாலைகளில் உள்ள
இஞ்சினியர்களோ அவர்கள் எதை எதைச் சொல்லிக் கொடுக்கின்றார்களோ அதைப் பதிவாக்கி மீண்டும்
நினைவுக்குக் கொண்டு வந்த் அதனதன் பணிகளைச் செய்கின்றார்கள் அல்லவா...!
அதே மாதிரித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தீமையை நீக்கும்
மெய் ஞானத்தை எனக்குப் பழக்கிக் கொடுத்தார். அதை உங்களுக்குள்ளும் பழக்குகிறோம்.
இதைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் மெய்
ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து
1.அவ்வப்பொழுது உங்களுக்குச் சீரான சிந்தனை கொடுக்கும்
2.தீமையை நீக்கக் கூடிய ஞானம் உங்கள் எண்ணத்தில் வரும்.
3.உங்களை நீங்கள் காத்துக் கொள்ளவும் முடியும்.