ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2018

தீமைகளைப் பஸ்பமாக்கும் சித்தர்களின் (அகஸ்தியரின்) ஆற்றலை நாமும் பெறவேண்டும்...!


நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் மின் அணுக்களின் நிலைகளில் அதில் வளர்ச்சி பெற்ற கதிரியக்கச் சக்தி கொண்ட அணுக்களை விஞ்ஞானி கண்டுணர்ந்து அதைப் பிளக்கின்றான்.

அதே போல மிகக் கடினமான உலோகங்களையும் அதீத வெப்பத்தின் தன்மை கொண்டு உருக்குகின்றார்கள். உருக்கித் தனக்குத் தேவையான கருவிகளாகவும் இயந்திரங்களாகவும் மாற்றி மற்ற எத்தனையோ முரட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள்.

எடை கூடிய பொருளை நகர்த்த முடியவில்லை என்றால் கடப்பாரையை (POCLAIN MACIHINE) உபயோகித்து அதை உந்தி அந்தக் கல்லைப் பெயர்த்து எடுக்கின்றார்கள்.

அதைப்போல துளை (ஓட்டை) போட முடியாத கடினமான ஒரு பொருளாக இருந்தால் அதைக் காட்டிலும் வலு கொண்ட உலோகக் கருவியைக் கொண்டு துளையிட்டு பின் அதை வெடிக்கச் செய்து அந்தப் பாறையையே அப்புறப்படுத்துகின்றார்கள்.

ஆனால் அன்றைய மெய் ஞானிகளோ பல தாவர இனச் சத்தைக் கொண்டு தான் உலோகங்களின் வீரியத் தன்மையை இழக்கச் செய்தார்கள்.

உதாரணமாக இரும்புடன் தாவர இனச் சத்தைக் கலக்கச் செய்து இரும்பின் வீரியத் தன்மையை (விஷத்தை) இழக்கச் செய்தார்கள்.

ஆனாலும் அந்த இரும்பின் கண சத்தை இழக்காத வண்ணம் அது எவ்வளவு வீரிய வலு கொண்டதோ
1.அந்த வலுவின் தன்மை இழக்காதபடி
2.மற்ற தாவர இனங்கள் கொண்டு அதைப் புடமிடப்பட்டு
3.அதைப் பஸ்பமாக்கி வீரிய சக்தியாக வைத்துக் கொள்கின்றார்கள் சித்தர்கள்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்...!

நம்முடைய வாழ்க்கையில் பிறர் செய்யும் கொடிய தவறான உணர்வுகளைப் பார்க்கும் போது அந்த உணர்வுகள் மோதியவுடன் வீரிய உணர்வுகள் கொண்டு முரட்டுத்தனமாக அவனை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.

ஏனென்றால் நம்முடைய பல காரியங்களுக்குக் கடப்பாரை அதைப் போல எத்தனையோ கருவிகள் அந்த இரும்பைக் கொண்டு செயல்படுத்துவது போல
1.மனித உணர்விற்குள் இந்த இரும்பின் சக்தி அதிகமாகி விட்டால்
2.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக்கி
3.வீரிய முறுக்கு கொண்டு சிந்தனையற்ற நிலைகள் கொண்டு நம்மை முரட்டுத்தனமாக்கிவிடும்.
4.அதாவது நம்முடைய குணமே இரும்பு போன்று கடினமாகிவிட்டால்
5.நாம் சொல்வதை ஒருவர் கேட்கவில்லை என்றால்
6.அவரை அழித்து விட வேண்டும்...! என்ற எண்ணத்தைத்தான் ஊட்டும்.

இதைப் போன்ற வேக உணர்வின் தன்மையாகும் போது நல்ல உணர்வுகள் செயலிழந்து பல கடுமையான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப்போன்ற உணர்வின் சக்தியை நீக்குவதற்கு அன்றைய மெய் ஞானி (சித்தன்) அந்த இரும்பைப் பஸ்பமாக்கி நயமான நிலைகள் உருவாக்கும் மருந்தாக மாற்றித் தன் கைக்குள் அடக்கினான் சித்தன்.

ஒரு மனிதனுக்குள் உருபெற்ற அந்தக் கடுமையான நோயை நீக்க அந்தப் பஸ்பத்தைக் கொடுத்தான். கொடுத்த பின்
1.அவன் உடலிலே சேர்த்துக் கொண்ட இரும்பான உணர்வின் சத்தை இது பஸ்பமாக்கி
2.அவன் உடலை ஆரோக்கியமாக்கும் தன்மைக்கு அவ்வாறு செய்தான்.

இரும்பை உருக்கும் உணர்வின் சத்தை அந்தச் சித்தன் தனக்குள் நுகர்ந்தான். அந்த உணர்வின் தன்மையை வளர்த்து இரும்பைப் பஸ்பமாக்கினான். அதை வைத்து மனித உடலில் இருக்கக்கூடிய தீய உணர்வைப் பஸ்பமாக்கினான். அதைக் கண்டு அவன் மகிழ்ந்தான்.

1.ஆகவே பஸ்பமாக்கும் உணர்வை அந்தச் சித்தன் தனக்குள் வளர்த்தான்.
2.வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை அவனுக்குள் வீரியத் தன்மை பெற்றது.

அந்த வீரியத் தன்மை கொண்டு விண்ணிலிருந்து வரும் மற்ற விஷமான எத்தகைய ஆற்றலாக இருந்தாலும் அதை அந்தச் சித்தன் நுகர்ந்து தனக்குள் பாதிப்பில்லாதபடி அதையும் பஸ்பமாக்கும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றான்.
1.அது வளர வளர தீய உணர்வுகள் அனைத்தையும் பஸ்பமாக்கும் திறன்
2.இந்தச் சித்தனின் உடலில் பாய்கிறது.

இன்று விஞ்ஞானிகள் லேசரை (LASER) இயக்கச் செய்து அதை வைத்து மற்றதைப் பிளந்து தன் காரியத்தை விஞ்ஞான ரூபத்தில் சாதிக்கின்றார்கள்.

இதைப்போல அன்றைய சித்தன் தன் நினைவலைகளை விண்ணிலே பாய்ச்சப்படும் போது விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை நுகர்ந்து தன் லேசர் கதிர் இயக்கத்தால் (தன் உணர்வின் நினைவலைகளால்) அதை மாற்றி உடலுக்குள் அதைச் சமப்படுத்தி ஆற்றல் மிக்க நிலைகளாக மாற்றிக் கொண்டான்.

இவ்வாறு தன் உணர்வின் தன்மைகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியவன் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான் அந்த மெய் ஞானியான அகஸ்தியன்.

1.அத்தகைய மெய் ஞானிகளின் உணர்வலைகளை மனிதனான நாம் நுகர்ந்தால்
2.அவர்களைப் போன்றே தீமைகளைப் புடமிட்டு விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கி
3.என்றுமே அழியாத நிலையாக வேகா நிலை நாம் ஒவ்வொருவரும் பெறலாம்.