ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2018

“இரவு படுக்கும்போதும்… அதிகாலையிலும்… தியானம் செய்தால்…” ஏற்படும் பலன்கள்


நம் உடலுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீகக வேண்டும் என்றால் அந்தத் தீமையின் வலிமையைக் குறைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அந்த அழுக்கு நீர் குறைந்து கொண்டே வரும். ஆகையினாலே ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க அது பெருகப் பெருக தீமைகள் குறையும்.

உதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அது குடிப்போரை மடியச் செய்யும்.
1.அதில் பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது
2,அந்த ஆயிரம் குடம் பாலுக்கு வீரிய சக்தியாக இந்த விஷத்தின் நிலை அடைகின்றது.

இதைப் போலத்தான் நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் பலவும் இருப்பினும் நஞ்சினை வென்ற அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு நூறு முறையாவது இரவிலே நாம் சொல்வோம் என்றால் இந்த உணர்வுகள் அதைச் சுத்தப்படுத்தும்.
1.நம் நினைவின் ஆற்றல் அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் செல்கின்றது.
2.அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதே இது

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி விட்டு மலரைப் போல மணமும் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அடுத்து எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி கிடைக்க வேண்டும் எங்கள் சொல்லைக் கேட்போருக்கெல்லாம் கனியைப் போன்ற இனிமையான நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் குடும்பத்தில் எது எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ பிள்ளைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்றுக் கல்வியில் ஞானம் பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

இதைத்தான் வாழ்க்கையே தியானம் என்பது. உங்கள் மனதைச் சுத்தப்படுத்தி கொள்கின்றீர்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தீய வினைகளை அகற்றும் நல் வினையாக உங்களுக்குள் விளைகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் உடல் நோயால் நலிவடையப்படும் பொழுது மருந்தை உட்கொண்டு அதை நீக்குகின்றோம். அதே போல் ஒரு விதையை ஊன்றி விட்டால் அத வளர்ந்து வரப்படும் போது உரத்தை இட்டால் செடி செழிப்பாக வளர்கின்றது. ஆனால்
1.வயலில் களை முளைத்து விட்டால் உடனே களையை நீக்கி விடுகிறோம்.
2.மறுபடியும் களைகள் முளைத்து வரும்.
3.ஆனால் மீண்டும் மீண்டும் களையை நீக்கிக் கொண்டே தான் இருக்க வேண்டும்… நீக்கவும் செய்கிறோம்…!

இதைப் போல தான் நமக்குள் ஆழமாகப் பதிந்த தீமையின் உணர்வுகள் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் பிறர் தவறு செய்கிறார்கள் என்று கண் கொண்டு பார்த்தவுடனே இங்கே வந்துவிடும். (எவ்வளவு தான் நல்ல எண்ணம் இருந்தாலும் அது வரும்)

அத்தகைய உணர்வுகள் நமக்குள் களையாக மீண்டும் முளைக்காது தடுக்க வேண்டும் என்றால் “ஒவ்வொரு நாளும் இரவிலே தூங்கச் செல்லும் போது” அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் நம் நினைவாற்றலைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொண்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு உரமிட்டது போலச் சக்தி வாய்ந்ததாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

அதே மாதிரி அதிகாலையில் கண்களைத் திறந்தவுடனே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் குடும்பம் முழுவதும் அந்த மகரிஷிகளீன் அருள் சக்தி படர வேண்டும்.

நாங்கள் பார்க்கின்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இன்றைய பொழுது உயர்ந்த ஞானத்தைப் பெறக்கூடிய பொழுதாக அமைய வேண்டும் என்ற இந்த எண்ணத்துடன் உங்கள் கடமைகளை ஆரம்பியுங்கள்.

1.இரவிலும் அதிகாலையிலும் இவ்வாறு பல முறை எண்ண எண்ண எண்ண
2.இந்த உணர்வுகள் எல்லாம் உங்கள் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது
3.அதாவது நெஞ்சுக்கு முன்னாடி நம்மைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தில் பேரொளியாகச் சேர்கின்றது.

உங்கள் ஆன்மாவினுடைய ஒளி வட்டம் பெரியதாகின்றது. தீமையை அகற்றும் சக்தியாக மலருகின்றது. உங்கள் எண்ணம் சொல் செயல் அனைத்ததுமே உங்களுக்கும் மற்றவருக்கும் நன்மை பயக்கும் ஆற்றலாக உருப் பெறுகின்றது.