தொடர்ந்து ஒருவன் எனக்குப் பல விதமான இடைஞ்சல் செய்து கொண்டே
இருக்கின்றான். ஆகவே அவனை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த
எண்ணத்தின் வலிமை கொண்டு என் பார்வையிலே வருகின்றது.
அப்பொழுது கண்ணன் (நம் கண்கள்) என்ன செய்கின்றான்...? நமக்கு
இடைஞ்சல் செய்தவனைக் கண்டவுடனே....
1.இங்கே இந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்கின்றான்...!
2.அவனை உதைக்க வேண்டும் என்று வழி காட்டுகின்றது.
நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று கீதையில் கண்ணன்
உபதேசிக்கின்றான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.அப்போது உதைக்க வேண்டும் என்று நான் எண்ணும் போது
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனை அழித்து விடுகிறேன்.
ஆனால் அவனை அழித்தாலும் அந்த அழித்து விடும் உணர்வின் தன்மை என்
உடலுக்குள் வந்து என் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அவனை உதைக்கும் பொழுது
அவன் வேதனைப்படுவதைக் கண்டு எப்படி நான் ரசித்தேனோ அதைப் போல
1.என் உடலுக்குள் வரும் அவனின் வேதனையான உணர்வுகள்
2.என் நல்ல குணங்களை எல்லாம் ரசித்துச் சாப்பிடும்.
அடுத்தாற்போல் நோய்வாய்ப்பட்டு ஐய்யய்யோ… அம்மம்மா… இடுப்பு வலிக்கிறதே…!
என்ற நிலைகள் வந்து விடுகிறது. ஆகவே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். இதை யார்
சொல்வது…? கண்ணன். நம் கண்கள் தான்...!
கண்கள் நமக்கு என்னவெல்லாம் செய்கிறது...?
ரோட்டிலே நாம் நடந்து போகும் போது இது மேடு.. இது பள்ளம்...! இங்கே
ஒருவன் தவறு செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் தவறுகள் இல்லாத இடம் அங்கே இருக்கின்றது.
இந்தப் பக்கம் ஒரு மாடு மிரண்டு வருகின்றது. அதிலிருந்து நீ ஒதுங்கி நில்...! என்று
இப்படி உபதேசம் செய்து கொண்டே இருக்கின்றது.
ஆக நமது கண்கள் நல்லது... கெட்டது...! என்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும்
வாழ்க்கைக்கு வழிகாட்டி உபதேசித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
அதன் வழியில் நுகர்ந்தறியும்போது அந்த உணர்வின் தன்மை உயிருடன்
இணைக்கப்பட்டு
1.“ஒளியின் நாதமாக...!” மாறுகின்றது.
2.அதனால் தான் “கண்ணன் புல்லாங்குழல் வாசித்து... மாட்டை மேய்க்கின்றான்...!”
என்று ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
இதிலே கண்கள் என்பது கண்ணன் (ஒளி). புல்லாங்குழல் என்பது கவர்ந்த
உணர்வின் ஒலி (நாதம்). மாடு என்பது உடல் (உடலை இயக்கி மேய்க்கின்றான்).
அதாவது கண்கள் நாம் பார்க்கும் உணர்வின் தன்மையைக் கவர்ந்து சுவாசிக்கச்
செய்து
1.உயிரிலே படும்போது அந்தந்த உணர்வின் அலைகளாக நாதங்களாக இயக்கி
நமக்கு உணர்த்துகின்றது (ஒன்றைப் பார்த்ததும் நமக்குள் எத்தனை விதமான எண்ணங்கள் ஓடுகிறது...!)
2.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு தான் இந்த உடலை இயக்குகின்றது என்ற
இந்த நிலையெல்லாம்
3.அணுவின் இயக்கத்தின் அறிந்துணர்ந்த இந்தியாவில் தோன்றிய ஞானிகளால்
உணர்த்தப்பட்ட பேருண்மைகள்.
மிருக நிலையிலிருந்து எப்படி நீ மனிதனாக ஆனாய்…? மனிதனான பின் நீ
நல்லது எண்ணுகின்றாய். ஆனால் உன்னை அறியாது வரக்கூடிய வேதனையான உணர்வுகளை எப்படி நீக்க
வேண்டும்…? என்று தான் அந்த ஞானிகளால் கொடுக்கப்ப்ட காவியங்களில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும்
அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை அதே கண்களின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலேயும்
எண்ணி எடுத்துக் கொண்டால் உடலுக்குள் இருக்கும் இருளை நீக்கி அந்த மெய் ஞானிகள் சென்ற
இடத்தை நாம் சென்று நிச்சயம் அடையலாம்.