ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2018

நம் பிரபஞ்சத்தில் சூரியனுக்கே இல்லாத ஒரு சிறப்பு வியாழன் கோளுக்கு இருக்கின்றது - அதனால் தான் அதைக் “குரு...!” என்று சொன்னார்கள் ஞானிகள்


அருள் மணம் கமழும் அருள் ஒளி என்ற பெரும் சக்தி பெற்று அருள் ஞானம் பெற்று மெய் ஞானி என்ற நிலையை அடைந்தவன் தான் அகஸ்தியன். அருள் ஞானத்தின் வளர்ச்சியிலே விண்ணில் நடக்கும் அதிசயங்களை உற்றுப் பார்க்கின்றான். இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நட்சத்திரங்களின் இயக்கத்தையும் அதிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு துகள்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் போது மின் ஒளியின் உணர்வாக அது மின்னலாக எப்படி மாறுகின்றது என்று காண்கின்றான்.

அந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் தூசியாக மாற்றும்போது அதன் துகள்களைச் சூரியன் கவரும் பாதையில் மற்ற கோள்கள் அது அது தன் பங்காக எப்படி எடுத்துக் கொளிறது என்பதையும் காணுகின்றான்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று  உராயும் போது அதில் கலந்த விஷத் தன்மையை நீக்கி விட்டு அதிலே உள்ள ஜீவ சக்தியை சனிக்கோள் எப்படிக் கவர்கிறது...?

நட்சத்திரங்களின் துகள்கள் மோதும் பொழுது அதிலே வெளிப்படும் விஷத் தன்மைகளையும் கருகிய புகைகளையும் கேது ராகு என்ற இரண்டு கோள்களும் எப்படிக் கவர்கிறது...?

அதே சமயத்தில் உராயும் பொழுது ஏற்படும் மின்னலின் மின் கதிரின் ஒளியை நாம் விடிவெள்ளி என்று சொல்கின்றோமே அந்த வெள்ளிக் கோள் எப்படிக் கவர்ந்து கொள்கிறது...?

அதாவது மின்னல்களாகும் பொழுது அதிலே வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் கவர்வதை அகஸ்தியன் அதை எல்லாம் காணுகின்றான்.

அதாவது மனிதர்களுக்குள் ஒரு சொல்லின் தன்மை கவரப்படும் போது அதற்குள் மறைந்த உணர்வினை அறிவின் தன்மை கொண்டு அறிந்திடும் சக்தியாக வருவது போல் ஒளியான சக்தியை விடிவெள்ளி என்ற கோள் அது கவர்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் இவ்வாறு உருவாகினாலும் அதில் வெளி வரும் ஆவியின் (VAPOUR) சத்தைச் சனிக் கோள் தனக்குள் எடுத்து நீர் நிலையை உருவாக்கும் அருள் சக்தியை அது கவர்கின்றது.

அது கவர்ந்து வெளிப்படும் துகள்களைச் சூரியன் தனக்குள் கவரும் பாதையில் வியாழன் கோள் கவர்ந்து தனக்குள் உணர்வின் தன்மை ஒன்றென இணைந்து மிக ஒளியான தன்மையாக இணைத்துச் சமப்படுத்தும் உணர்வு பெற்றது.

வியாழன் கோளுக்கு இருபத்தியேழு உபகோள்கள் உண்டு. அதே சமயத்தில் அதிலே இரண்டு உபகோள்கள் மாறுபட்ட நிலையில் வியாழனைச் சுற்றி வருகின்றது. ஆகையினால்
1.இந்தப் பிரபஞ்சத்தையே நல் வழியில் இயக்கும் தன்மை பெற்றது வியாழன் கோள்.
2.தாவர இனங்களையும் உயிரணுக்களையும் இந்தப் பிரபஞ்சத்தில் இணைந்து வாழச் செய்யும் சக்தியினைப் பெற்றது வியாழன் கோள்
3.ஆக இவை அனைத்தையும் நல்லதாக ஒரு இயக்கத் தன்மை கொண்டு செயல்படுத்துகிறது.
4.அதனால் தான் வியாழன் கோளைக் குரு என்று சொன்னார்கள் ஞானிகள்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் வரும் மாசுகளை நமது கிட்னி (சிறுநீர்கங்கள் - KIDNEYS) என்ற உறுப்பு பாகம் கழிவாக்கி அதைச் சுத்திகரித்து இரத்தங்களை வடிகட்டி நம் உடலுக்குள் நல் இயக்கச் சக்தியாக மாற்றி அமைக்கின்றது. நாம் நுகரும் உணர்வுக்குள்ளும் விஷத் தன்மை கவரப்பட்டால் நமது கிட்னி அதை நீக்குகின்றது.

1.அதாவது நாம் நுகரும் அல்லது உணவாக உட்கொள்ளும் அதற்குள் கலந்து வரும் நஞ்சினை
2.நமது கிட்னி என்ற உறுப்பு மாற்றித் தெளிந்த மனம் பெறும் மகிழ்ந்திடும் உணர்வு பெறும்
3.அந்த உணர்ச்சியினை நம் உடலுக்குள் ஊட்டுகின்றது.

இதைப்போலத் தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு வியாழன் கோள் ஒரு கிட்னியாக இருக்கின்றது. விஷத்தின் தன்மையைத் தனக்குள் பிரித்து அதன் உணர்வின் தன்மையைச் சமப்படுத்தும் நிலையும் அதன் உணர்வின் இயக்கமாக இயக்கும் சக்தி பெற்றது தான் வியாழன் கோள்.

இதெல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகள். அண்டத்தின் இயக்கம் இந்தப் பிணடத்திற்குள் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.