ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2018

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய “ஆத்ம சுத்தி என்ற சிறு பயிற்சி...!”


நம்மை யாராவது ஒருவர் திட்டினால் என்னைத் திட்டினார்... திட்டினார்...! என்று எண்ணும் போது அந்தக் காரமான அலைகள் நமக்குள் வந்து விடுகிறது.

அதே கோபமான எண்ணத்துடன் என்னை இப்படிப் பேசினார்களே இப்படிப் பேசினார்களே என்று எண்ணிக் கொண்டே நீங்கள் சமையல் வேலை செய்தா என்ன ஆகும்..?

1.எந்த அளவுக்குக் கோபமாக இருந்தீர்களோ குழ்ம்பிலே ஒரு மிளகாய் அதிகமாகிப் போகும். குழம்பு காரமாகிவிடும் உஷ்..உஷ்.. என்று தான் சாப்பிடுவார்கள்.
2.என்னை இப்படிப் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள் என்று சலிப்பான எண்ணத்துடன் சமைத்துப் பாருங்கள். குழ்ம்பில் புளியை நிச்சயம் அதிகமாக்கி விடுவீர்கள்.
3.எப்போது பார்த்தாலும் இப்படி “நச்..நச்...நச்...!” என்று இருக்கிறது என்று ஆத்திரத்துடன் சமைத்தீர்கள் என்றால் குழம்பில் உப்பை அள்ளி அதிகமாகப் போட்டு விடுவீர்கள்.
4.இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
5.ஆனால் நீங்கள் அந்தந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உணர்ச்சிகளைத்  தூண்டி அதைச் செய்ய வைத்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை. காரணம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் தான். அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா...!

அதற்காகத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

ஓ...ம் ஈஸ்வரா...... குருதேவா...! என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணி அந்த உணர்வின் வேட்கையைக் கூட்ட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று கண்களைத் திறந்து வானை நோக்கி ஏங்கிச் சுவாசியுங்கள்.

பின் கண்களை மூடித் திரும்பத் திரும்ப “மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...!” என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்.

பிறகு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற    அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஒரு நிமிடம் இதைத் தியானிக்க வேண்டும்.

பின் கண்களைத் திறந்து மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி விட்டு கணவன் மனைவி இருவருமே ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது இது போல எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவரின்/ என் மனைவியின் ஜீவாத்மா பெறவேண்டும். அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும். அவர் எத்தொழில் செய்தாலும் நலமும் வளமும் பெற வேண்டும். அவர் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நன்மை தர வேண்டும். அவரைப் பார்ப்போரெல்லாம் நல்லது நினைக்க வேண்டும் இவ்வாறு  கணவன் மனைவி கணவனை ஒருவருக்கொருவர் எண்ணுதல் வேண்டும். இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது.

சமையல் செய்யும் போதெல்லாம் பெண்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தொடங்க வேண்டும்.
1.அரிசியையோ மற்ற பொருள்களைப் போடும் போதெல்லாம்
2.நாங்கள் சமைக்கும் இந்த உணவை உண்ணுவோர் அனைவரும்
3.மகரிஷிகளின் அருளால் நலமும் வளமும் மன பலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இதே போல ஆகாரத்தைப் பரிமாறும் போதும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஒரு நிமிடம் ஏற்றி விட்டு ஆகாரத்தை எடுத்துப் பரிமாற வேண்டும்.

காரணம் அந்த ஒரு நிமிடம் என்பது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்ன உடனே 
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சூரியனுடைய காந்த அலைகள் கவர்ந்து
2.நமக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திவிடும். (அதற்காகத்தான் திரும்பத் திரும்ப எண்ணச் சொல்கிறோம்)
3.நம் ஆன்மாவில் அந்த அருள் சக்தி பெருகினால் மற்ற கோபமோ சலிப்போ வேதனையோ எல்லாம் அகன்று சென்றுவிடும்.

ஆகவே எந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன்னாடியும் இப்படி ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தான் தொடங்க வேண்டும். ஒரு இரண்டு நிமிடத்திற்குள் இதைச் செய்து முடித்துவிடலாம்.