ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2018

“தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை எல்லோரையும் பெறச் செய்ய முடியும்…!” என்பதற்காகக் குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவப் பாடம்…!


குருநாதர் எம்மை அழைத்துச் சென்ற நிலையில் நான் (ஞானகுரு) இங்கே என் குடும்பத்தை விட்டு விட்டுப் போய்விட்டேன். என் மனைவிக்கு நோய் வந்து அதிலிருந்து மீண்டு அப்பொழுதுதான் எழுந்திருந்தார்கள்.

அப்பொழுது அவரின் தாயாருக்கு உடலுக்கு முடியாமல் இருக்கிறது. எமக்கு ஐந்து குழந்தைகள். ஆனால் கையில் இருக்கக்கூடிய பணத்தையெல்லாம் என் மூத்த பையன் கொண்டு போய் இறைத்துவிட்டான்.

1.அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலும் தன் வலுவின் தன்மையை விடாதபடி
2.ஒரே நிலைகளிலே எப்படியும் நாளைக்கு ஜீவிக்க முடியும்…! நாளைக்கு நன்றாக இருப்போம்…! என்ற
3.அந்த எண்ணத்திலேயே என் மனைவி (சாமி அம்மா) இருந்து வந்ததினால்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

ஏனென்றால் அந்த வலுவான எண்ணத்தை இங்கே அதிகமாகக் கூட்டியதால்தான் மெய் ஞானத்தின் சக்தியை யாம் பெற முடிந்தது. என் மனைவி சோர்வையும் சஞ்சலத்தையும் எடுத்து அதை நான் பார்த்துக் கொண்டிருந்தால் மெய் ஞானத்தைப் பெற்றிருக்க முடியாது.

குருநாதர் எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தாலும் கூட என்னைச் சார்ந்தவர்கள் குடும்பங்கள் வேதனையிலும் சங்கடத்திலேயும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1.நான் வெளியிலே போகப்போகும் போது எனக்குக் கஷ்டம்.
2.அதே சமயத்தில் வீட்டிலே கஷ்டம்.

கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் என் பையன் வாரி இறைத்துவிட்டான். அதனால் பல நிலைகளிலும் தொல்லை வருகிறது. இங்கே வீட்டிலேயும் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நன்றாக நீட்டாக (NEAT) இருந்து கொண்டு போனாலும் போகிற பக்கமெல்லாம் எம்மைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். யாம் உதவி செய்தாலும் கூட அந்த உதவி பெற்றவர்களும் என்னைக் கேலி பண்ணுகிறார்கள். இத்தனை அவஸ்தைகள்…!

வீட்டிற்குள் நுழைந்தாலோ உணவு இல்லை.. உடுத்த உடை இல்லை…! என்று பிள்ளைகள் எம்மிடம் கேட்கிறது. அந்த அளவுக்கு இம்சை. அப்போது அந்த நேரத்திலே இதைத்தான் குருநாதர் கொடுக்கிறார். 

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படி வரக்கூடிய ஒவ்வொரு இம்சைகளிலிருந்தும் எதை எதையெல்லாம் எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் கொடுத்தார் குருநாதர்.

அந்தச் சமயத்தில் வீட்டில் தியானம் எல்லாம் இருக்கவில்லை. அப்பொழுது எந்தத் தியானமும் செய்யவும் இல்லை. பொதுவாகக் குருநாதருடைய நிலைகளைத்தான் எண்ணத் தெரியும்.

எல்லோரும் அந்தத் தியானத்தைச் செய்வதற்குண்டான வழியை முதலில் அறிவதற்காக அந்தத் தியானம் என்றால் என்ன…? தியானம் எப்படிச் செய்வது…? தியானத்தின் மூலம் மகரிஷிகளின் ஆற்றலை எப்படிப் பெறுவது…? என்ற இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு பதினாறு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்து அதை உணர்த்தினார்.

அதாவது…
1.ஒரு எண்ணத்தின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து எப்படிச் சுவாசிப்பது…?
2,காற்றிலிருந்து நமக்கு வேண்டியதை மட்டும் எப்படிப் பிரித்து எடுத்துக் கொள்வது…?
3.அதைச் சுவாசித்து நம் உடலில் எப்படிச் சேர்ப்பது…?
4.உடலில் உள்ள எல்லா அணுக்களையும் எப்படி ஒளியாக மாற்றுவது...? என்ற
5.இந்த நிலைகளையெல்லாம் அறிந்து கொண்ட பின்புதான் உங்களுக்கு உபதேச வாயிலாக இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதினாறு வருட காலத்தில் எமக்கு உணர்த்திய மெய் உணர்வுகளை யாம் கண்டுணர்ந்து எமக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி வாய்ந்த அருள் ஞான வித்துகளைத் தான் உங்களுக்குள்ளும் ஊன்றச் செய்து அதை நீங்களும் வளர்த்துக் கொள்வதற்கு அவர் உணர்த்திய அதே வழிப்படி உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் அதை எல்லாம்  பெறவேண்டும் என்ற ஆசையில் இருந்தால் போதும். உங்களுக்குள் அது ஆழமாகப் பதிவாகும். நினைவு கொண்டு மீண்டும் அதை எண்ணி ஏங்கி எடுத்தால் அந்தச் சக்திகள் உங்களுக்குள் வளரத் தொடங்கும்.