ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2018

காற்று மண்டலத்தில் பெருகிக் கொண்டிருக்கும் மாசுகளிலிருந்து (POLLUTION) மீள்வது எப்படி...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தலையிலிருந்து கால் வரையிலும் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள். ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.
1.நம் உடல் மேல் இருக்கும் தோல் மண்டலத்தில்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால்
3.ஒரு “முலாம் பூசியது போன்று...!” வலுவான பாதுகாப்புக் கவசமாகின்றது.

இன்றைய காற்று மண்டலம் மாசுபட்டு மிகவும் நஞ்சாக இருக்கும் (POLLUTED AIR) நிலையில் அது உடலிலே பட்டாலும் நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அந்தக் கெட்டதை நம் அருகிலே வராதபடி விலக்கித் தள்ளிக் கொண்டிருக்கும்.

சந்தர்ப்பத்தில் அதிர்ச்சியான செய்திகளைப் பார்த்தோ அல்லது கேட்டுத் தெரிந்து கொண்ட பின் அத்தகைய நமக்குள் பதிவு இருந்தால் அது நமக்குள் பயத்தையும் பதட்டத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும். தோல் மண்டலத்தின் மீது துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் பயத்தை விலக்கிவிட்டு மன உறுதியை நமக்குக் கொடுக்கும்.

அதே போல் மற்றவர்கள் வெளிப்படுத்தும் வெறுப்போ கோபமோ குரோதமோ சலிப்போ வேதனையோ பயமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்வுகளை வராது தடுக்கும்.

உதாரணமாக ஒரு உணவுப் பொருள் மீதோ அல்லது வீட்டுக்குத் தேவையான ஒரு பொருள் மீதோ நாம் ஆசைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் என்ன கெடுதல் இருக்கிறது...! என்று நமக்குத் தெரியாது. ஆனால் அதை நாம் வாங்கிப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதை உபயோகித்தாலும் தோல் மண்டலத்திற்கு நாம் எடுக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் கெடுதல் ஆகாது தடுத்துவிடும். அடுத்து அதனின் உண்மையை உணர்த்திச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தையும் ஊட்டும்.

அதே சமயத்தில் நம் உடலில் இந்த வாத நோயோ இரத்தக் கொதிப்போ அல்லது மற்ற நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் தோல் முழுவதும் வலுவாக்கப்படும் போது அதையெல்லாம் தள்ளி விட்டுவிடுகின்றது.

இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் நாம் எத்தனையோ மோசமானவர்களைப் பார்க்க நேர்கின்றது. அவர்களுடன் பழக நேர்கின்றது. அப்படிப் பழகும் பொழுது நம்மை அறியாமலே கெட்ட பழக்கம் வந்து விடுகிறது.

அதனால் நம்மை அறியாமலே கோபப்படச் செய்வதும் வேதனைப்பட்டு அழுகச் செய்வதும் சிந்தனையற்ற செயலைச் செய்வதும் போன்ற நிலைகள் வந்துவிடுகின்றது. நம் நல்ல செயல்களையே மாற்றி விடுகின்றது.

அதை எல்லாம் மாற்ற தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கொஞ்சம் அதிகமாக எடுத்து வலுவேற்றிக் கொண்டீர்கள் என்றால்
1.அத்தகைய கெட்ட பழக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போகாதபடி
2.நம்மைத் தடுத்து நிறுத்தச் செய்யும்
3.நமக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஒருவன் திட்டியவுடனே பதிவு செய்து விடுகின்றீர்கள். திருப்பி எண்ணும் போது நம் மன அமைதியை இழக்கச் செய்கின்றது. அதே போல் ஒன்றை ஆசைப்படுகின்றீர்கள். அது நடக்கவில்லை... மற்றவர்கள் தடைப்படுத்துகிறார்கள்... என்றால் உடனே வேதனை வருகிறது.

அதைப் போன்ற நிலைகள் எதுவும் நம்மை இயக்காது தடுப்பதற்காகத்தான் தோல் மண்டலத்தின் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி வீரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். எடுத்துப் பழக்கம் செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக காபியிலோ டீயிலோ சீனி அளவாகப் போட்டுப் பாருங்கள். ருசியாக இருக்கும். ஆனால்
1.குறைந்தாலும் ருசி கெடுகிறது.
2.கூடினாலும் கெடுகின்றது.

அது போல் வாழ்க்கையில் தீமைகள் வந்தாலும் முதலில் படும். படும் பொழுது தீமை என்று அறிய முடியும். அறிந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதனின் இயக்கத்தைத் தடைப்படுத்த வேண்டும்.

ஆகவே உங்கள் தோல் மண்டலத்தில் கூடுமான வரையிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை கொஞ்சம் அதிகமாகச் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஒரு பாதுகாப்பாகக் கிடைக்கும்.

செய்து பாருங்கள். உங்களுக்குப் பாதுகாப்பு உங்கள் எண்ணமாகத்தான் இருக்கும். அனுபவத்தில் நிச்சயம் பார்க்க முடியும்.