ஓர் கர்ப்பிணிப் பெண் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் வெளியிலே
சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதைக் கவனிக்காதபடி வேலையின் நிமித்தம்
இருந்தால் இவரை அங்கே அழைத்துச் செல்லாது.
ஆனால் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஓ...! என்ற கூக்குரலின் சப்தங்களைக்
கேட்ட உடனே “என்ன...? ஏது...? என்று வேடிக்கை பார்க்கச் சென்றால் போதும்.
வெளியிலே சென்று கண் கொண்டு அதைக் கூர்மையாகக் கவனிக்கும் போது அங்கு நடக்கும்
செயலின் தன்மையை உடலுக்குள் இழுத்து கண்ணுக்குள் கருவிழி காட்டுகிறது.
அதே சமயத்தில் சண்டை போட்டவர் உடலிலிருந்து ஆவேச உணர்வுகள் வெளிப்படுவதைச் சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுவதைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து
சுவாசிக்கப்படும் போது அந்த உணர்வு உயிரிலே பட்டுப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.
இப்படி நடக்கிறதே…! என்று அந்தக் கர்ப்பிணி வேடிக்கை தான் பார்க்கின்றது. பார்த்த
உணர்வுகள் அந்தப் பதட்டமும் பயமும் இவர்கள் குணத்திற்கும் அதற்கும் மாறாக வரும் போது
நல்லதுடன் கலக்கச் செய்து ஆவேச உணர்வுகளை ஓங்கச் செய்கின்றது.
அந்த உணர்வின் உமிழ் நீர் உடலிலே சேரும்போது பதட்டத்தையும் பயத்தையும் ஊட்டும் உணர்வுகளாக உடலுக்குள் புதிதாக உருப்பெறுகின்றது.
அதே சமயத்தில் கர்ப்பிணியின் கருவிலே இருக்கக் கூடிய குழந்தைக்கும் குழந்தையின்
ஊனிலும் இது பதிவாகி விடுகின்றது. ஆனால் குழந்தை தவறு செய்யவில்லை.
அதே சமயம் தாயின் உடலிலும் அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.
1.அதை அடிக்கடி எண்ணும் போது
2.அதே உணர்ச்சிகளை உந்தி அதையே சுவாசிக்கும் போது
3.திரும்பத் திரும்ப ஆத்திரத்தையும் பதட்டத்தையும் பய உணர்வுகளையும் தோற்றுவித்துக்
கொண்டே இருக்கும்.
அந்த உணர்வுகள் உடலிலே விளைய விளைய கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கும் ஆழமாகப்
பதிவாகி குழந்தை பிறந்த பின் சுவாசிக்கப்படும் போது இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள்
கிளர்ந்து எழுந்திருக்கும்.
ஒன்றுக்குள் ஒன்று போர் செய்வது போன்று இந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குள்
கிளர்ந்து எழும் போது சண்டையிட்டவர்கள் உணர்வை ஆரம்பத்தில் அந்தத் தாய் கேட்டுணர்ந்த
நிலைகளில் எரிச்சலும் பதட்டமும் பய உணர்வும் பட்டது போல
1.குழந்தை திடீர்… திடீர்.. என்று பயப்படுவதும்
2.எதிர்பாராத நிலைகளில் அதன் உடலில் எரிச்சல் வரும் போது
3.அதைச் சுவாசிக்கும் போதெல்லாம் அந்தக் குழந்தை எரிந்து எரிந்து விழும்.
தாய் தன் அருகில் வந்தாலும் ஒன்றும் விவரம் தெரியவில்லை என்றாலும் தாயை அந்தக்
குழந்தை பிறாண்டும். அவர்கள் சண்டையிடும் போது எந்த உணர்ச்சிகளைத் தூண்டியதோ இது ஒன்றும்
அறியாத குழந்தையாக இருந்தாலும் அப்படிச் செய்வதை நீங்கள் பார்க்கலாம்.
நீங்கள் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால் கருவிலே இருக்கும் போது எந்த நிலைகளைத்
தாய் பார்த்ததோ அது குழந்தையின் உடலிலே ஊழ்வினையாக வினையாக இவ்வாறு விளைகின்றது.
ஒரு வித்தை ஊன்றி விட்டால் எப்படி அது செடியாகச் சிறுக சிறுக விளைந்து அதனுடைய
வித்துக்களாக எப்படி விளைகின்றதோ இதைப்போல குழந்தை வளர வளர அதனுடைய குணங்களும் அதற்குத்
தக்கவாறே வளரும். அதற்கு மாறாக எது இருந்தாலும் அதை வெறுக்கும்.
இவர்கள் சண்டையிடும் போது அவர்களிடத்தில் நியாயமாகச் சொல்லப் போனால் இவர்கள்
இரண்டு பேரும் அவரவர்கள் பேசியதைத் தான் பேசுவார்கள். அவர்கள் பேசியதில் அடுத்து நியாயத்தைக்
கேட்கப் போனால் இவர்களை அறியாமலேயே அடுத்துச் சரியான பதில் சொல்லாதபடி அழுகையும் ஆத்திரத்துடன்
தான் பதில் சொல்வார்கள்.
இப்படி எதிர் நிலையாகும் போது குழந்தை எதிர்பாராது அழுது கொண்டே இருக்கும்.
அதே நிலைகள் கொண்டு எதிர்க்கும் சக்தியாக வெறுப்பை உண்டாக்கும் சக்தியாக வளர்ந்து விடுகின்றது.
இவையெல்லாம் குழந்தை கருவிலே வளரும் போது செயல்பட்ட நிலைகள். சண்டை போடுபவர்களை
அந்தக் கர்ப்பிணி உற்றுப் பார்த்துக் கவனித்தால் இந்த நிலை ஆகின்றது.
அதே சமயத்தில் அந்தச் சண்டையை மற்ற ஆண்களோ அல்லது கர்ப்பம் அற்றவர்களோ பார்த்தால்
அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக அவர்களுக்குள் பதிவாகி விடுகின்றது.
1.பதிவான பின் அடுத்தடுத்து யாராவது சண்டை போட்டார்களென்றால் அதைப் போய் வேடிக்கை
பார்க்க வைக்கும்.
2.அந்தச் சண்டையிட்ட உணர்வைப் பேசவும் வைக்கும்.
3.அடுத்தவர்களிடம் சொல்லப் போகும் போதெல்லாம் மற்றவர்களைக் குறைகளாகப் பேசிக்
கொண்டே இருக்கச் சொல்லும்.
ஏனென்றால் அடுத்தவர்களின் குறைகளைக் கூர்ந்து கவனித்து அதையே அடுத்தடுத்து பேசும்போது
நியாயத்தைப் பேசுவது போல எண்ணிக் கொள்வார்கள்.
ஆனால் அந்த பேச்சின் நிலைகள் கொண்டு எந்த உணர்வைப் பதிவு செய்து கொண்டோமோ அந்த
உணர்வுகள் கிளர்ந்தெழுந்து வளர்க்கச் செய்து உடலில் கைகால் குடைச்சல் அஜீரணம் போன்ற
நிலைகள் வரும்.
1.நான் எல்லோரிடம் நியாயத்தைத் தான் பேசுகிறேன்.
2.ஆண்டவன் என்னை இப்படிச் சோதிக்கிறான். என் கைகால் எல்லாம் குடைகிறது என்று
சொல்வார்கள்.
நாம் பார்ப்பது வேடிக்கை பார்த்தாலும் நுகர்ந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி
நோயாகத் தனக்குள் விளைகின்றது. இதை எல்லாம் வாழ்க்கையில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள
வேண்டும்.