ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 23, 2018

நம் உயிராத்மா வைரம் போன்று ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும்...!

மெய் ஞானிகளைப் பற்றிய உண்மைகளைத் திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணிட வேண்டாம். உங்களுக்குள் எத்தனையோ அருள் மணங்கள் உண்டு. அதே சமயத்தில் பகைமை உணர்வுகளும் உண்டு.

யாம் (ஞானகுரு) உபதேசித்துக் கொண்டே வந்தாலும் சில நேரங்களில் உங்கள் உணர்ச்சியின் தன்மை மாறும். அதாவது யாம் உபதேசிப்பதைத் தாங்காத நிலையாகப் பொறுமை இழந்து
1.சீக்கிரம் முடித்து விட்டார்...! என்றால் நாம் வீட்டுக்குப் போகலாம்.
2.போய் நம் வேலையைப் பார்க்கலாம் என்று இப்படி எண்ணுபவர்களும் உண்டு.
3.இப்படி உணர்ச்சி ஆகும் போது யாம் சொல்வதைக் கவனித்துப் பதிவாக்கும் நிலை இழக்கப்படுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை மாற்றி அவர்களுக்கும் மீண்டும் அந்தப் பேரருளின் உணர்வை நுகரும் தகுதிக்கே மெய் ஞானிகளின் உணர்வை வளர்க்கச் செய்வதற்கே தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

சமையலில் ஒரு குழம்பை நாம் வைக்கிறோம் என்றால் அது வேகும் போது ஆரம்பத்தில் பார்த்தால் ஒன்றும் ருசி இருக்காது... மணமும் இருக்காது.

ஆனால் அது வேக...வேக...வேக... அந்தக் கலவையின் தன்மை மாறும் போது தான் அதில் போடப்பட்ட எல்லாப் பொருள்களும் இரண்டறக் கலக்கின்றது. அதன் பின் குழம்பைப் பார்த்தால் மணமும் இருக்கும் நல்ல ருசியும் இருக்கும்.

அதைப்போன்று தான் உங்களுக்குள் மெய் உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் ஐக்கியமாகி அந்த மெய் ஞானத்தின் முதிர்வின் தன்மையை நீங்கள் அடைய முடியும்.

அந்த மெய் ஞானிகள் எப்படி அருள் மணம் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று அருள் ஞானத்தை வளர்த்தார்களோ அவர்களைப் போன்று நாமும் வளர முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.இங்கே உள்ள அகண்ட அண்டத்திலும் சரி
2.அங்கே உள்ள பேரண்டத்திலும் சரி
3.எத்தகைய நிலையும் இவனை மாற்றிடாது வேகா நிலையைப் பெற்றான்.

அந்த அகஸ்தியனைப் போன்று நமக்குள் இருக்கும் எல்லா அணுக்களையும் வேகா நிலை என்று உருவாக்கி என்றுமே அழியாத நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை பெற்று
1.பேரொளி என்ற உணர்வை ஊட்டும் நிலையாக
2.வைரம் போன்று ஜொலிக்கும் தன்மையாக நம் உயிராத்மா அடைதல் வேண்டும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது...!