ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2018

ஒவ்வொரு வீட்டின் வாசல்படிகளிலும் வாசல் முன்னாடியும் மத்தியில் புள்ளிகளை இட்டுக் கோலங்களை அழகாக இடுகின்றோம். அதனின் உட்பொருளை அறிந்திருக்கின்றோமா..?


ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எத்தகைய நிலை இருந்தாலும் ஒரு வேதனை என்ற சொல்லை வாங்கும் பொழுது அது புள்ளியாக அமைந்து விடுகிறது.

1.அதன் உணர்வைத் திறந்து விட்டால் (கோலத்தில் புள்ளியைப் போட்டு “அடைத்து விடுகின்றோம் அல்லவா…!”)
2.அந்த வேதனையான அலைகள் மீண்டும் நமக்குள் படர்ந்து விடுகிறது.
3.மெய் ஞானிகளின் உணர்வைக் கலந்து விட்டால் (அதாவது நமக்குள் மெய் ஞானிகளின் உணர்வை வளையமாக இணைத்துவிட்டால்)
4.வேதனை இதற்குள் அடங்கிவிடுகின்றது.

அந்த வேதனையைச் செயலற்றதாக ஆக்கி நம் வாழ்க்கையின் பாதையைத் தடையில்லாத நிலைகள் கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்..? என்று இப்படி உணர்த்துகின்றார்கள் மகரிஷிகள்.

நம் உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் அதிலே நன்மை என்ற உணர்வுகள் கொண்டு வளர்த்தது உண்டு. அதே சமயத்தில் ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு ஏற்காத நிலையில் வளர்க்கப்படும் பொழுது அந்த உறுப்புகளின் மாற்றங்களும் உண்டு.

அதை எல்லாம் சீராக்கிட அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் கலந்து “அந்த மெய் ஞானிகளுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும்…!” என்ற இந்த நினைவாற்றலைக் கொண்டு வருவதற்காகக் காவியமாகத் தீட்டினார்கள் பண்டைய கால ஞானிகள்.

நமக்குள் அவ்வாறு ஒன்று சேர்த்து இணைக்கும் நிலைக்காகத்தான் கோலங்கள் இடும் நிலையை உருவாக்கினார்கள். இது எல்லாம் பெரும்பகுதி பெண்கள் அதிகமாகச் செய்யும்படி செய்தார்கள்.

தீமைகளை அகற்றி ஒருக்கிணைந்த நிலைகளாக ஒன்றுபட்டும் வாழ்ந்திடும் நிலைகளை அவர்கள் எந்த அளவுக்கு அழகுபடுத்துகின்றார்களோ அதனின் தன்மை கொண்டு அவர் சொல்லால் வெளிப்படும் உணர்வுகள் “மற்றவர்களை மகிழச் செய்ய வேண்டும்…” என்ற நிலைகளை உருவாக்குவதற்கே இந்தக் கோலத்தின் நிலை.

எல்லாக் கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் சூரியன் கவர்ந்து அதை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒளிக்கதிராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே எப்படி ஒளிமயமாக இயக்குகின்றதோ அது போல்
1.நமக்குள் பகைமையற்ற நிலைகளை உருவாக்கி
2.ஒற்றுமையாக இணைந்து வாழும் எண்ணங்களைச் செலுத்தி அந்த எண்ணத்தில் தான் கோலங்களை இட வேண்டும்.
3.அப்பொழுது மகரிஷிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு பகைமையற்ற உலகை நமக்குள் சிருஷ்டிக்கின்றோம்.

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது வரும் பகைமை உணர்விலிருந்து விடுபட இதைப் போன்று அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்ப்பித்து நமக்குள் சீராக ஒன்றாக இணைத்து தீமைகளை அடக்கித் தூய்மையாக்கும் உணர்ச்சிகளை வளர்க்க வேண்டும். நம் ஆறாவது அறிவு கொண்டு நமக்குள் அழகுபடுத்தி மகிழ்ச்சி பொங்கும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் கண்ணுக்குத் தெரியாத (சுட்சமமாக) மறைமுகத்தில் இயக்குவதைக் காவியமாகத் தீட்டி நமக்குள் வரும் தீமையான உணர்வை நாம் எப்படி அறுக்க வேண்டும்..? என்ற நிலைகளை உணர்த்தி மெய் உணர்வின் செயலாக நாம் எப்படி இயங்க வேண்டும்…? என்ற நிலை தான் மகரிஷிகளால் உணர்த்தப்பட்ட நிலைகள்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் படர வேண்டும் என்ற எண்ணத்தை நாம் விண்ணை நோக்கிச் செலுத்தி
1.அந்த அருள் ஞானிகள் வாழும் இடத்தை நாம் எட்டிப் பிடிக்கும் அந்த உணர்வின் எண்ணத்தை
2.நம் எண்ணத்தில் கோலமாக எடுக்க வேண்டும்.