ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2018

குழந்தை அறியாத இளம்பருவத்தில் பாதுகாப்பில்லாத செயல்களைச் செய்யும்போது குழந்தையின் தாய் பதறிப் போய்க் காக்கின்றது –காத்தாலும் பயத்தையும் வேதனையையும் நீக்குகின்றோமா..? தூய்மையாக்குகின்றோமா…?

குழந்தைப் பருவமாக இருக்கும் போது குழந்தைக்கு “இது தேள்…! இது நெருப்பு…!” என்று எதுவும் தெரியாது.

ஆனால் “தீ…” சுடராக எரியும் போது குழந்தை அதனுடைய எரிதலையும் அதனுடைய அழகையும் பார்த்து (ஒன்றும் அறியாததனால்) சீறிப் பாய்ந்து அந்த நெருப்பைத் தொட முயற்சிக்கின்றது.

இதனைக் காணும் போது நெருப்பிற்குள் அந்தக் குழந்தை கையை விட்டால் “கருக்கி விடுமே… அதை அழித்து விடுமே…!” என்ற பய உணர்வு நமக்குள் தோன்றுகின்றது.

அப்பொழுது குழந்தையைக் காத்து விடுகின்றோம்.

ஆனால் குழந்தையின் அறியாத செய்கையைக் காணும் பொழுது உணர்வின் வேகத் துடிப்பால் பய உணர்வும் வேதனையும் நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொள்கிறோம்.

பயமான உணர்வுகளே நமக்குள் ஊழ்வினையாகப் பதிவான பின் ஒவ்வொரு நொடியிலேயும்
1.இந்தக் குழந்தை என்ன செய்வானோ…! ஏது செய்வானா…?
2.எங்கேயாவது அடிபட்டு விழுந்து விடுவானோ..? என்கின்ற எண்ணங்களைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்.

அதன் வழியில் குழந்தையைக் காக்கும் உணர்வு ஆற்றல் வந்தாலும் குழந்தையைக் காத்திட்டாலும் ஒவ்வொரு தடவையும் அந்த வேதனை உணர்வுகள் நம் உடலிற்குள் சேர்ந்து “கடு கடுத்த நிலை…” ஆகிவிடுகின்றது.

ஆக நல்ல உணர்வின் தன்மை கொண்டு குழந்தையைக் காத்திட்டாலும் கடு கடுத்த வேதனைகள் நஞ்சு கொண்ட எண்ணங்களாக நமக்குள் உருவாகி விடுகின்றது

அடுத்து குழந்தை பெரியவனாக ஆக அவனை சீறிப் பாய்வதும் கடு கடுப்பாகப் பேசுவதும் இந்த உணர்வுகள் தாயிடம் தோன்றுவதைப் பார்க்கலாம்.

எரியும் நெருப்பிடமிருந்து ஒரு குழந்தையை இளம் பருவத்தில் காத்து இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து அறிந்து வளர்ந்த பின் அவனைக் காக்கும் போதெல்லாம் கடு கடுப்பாகவும் எரிச்சல் ஊட்டும் பேச்சுக்களாகவும் நிச்சயம் வரும்.

அதனால் அந்த தாய்க்குக் காலிலே எரிச்சல் உடலிலே எரிச்சல் உள்ளங்கையிலே எரிச்சலைப் பார்க்கலாம்.

அதைப் போல ஒரு பூச்சியை தேளையோ பாம்பையோ குழந்தை அறியாதபடி அதைத் தொட நேர்ந்தால் குழந்தையை வளர்க்கும் அந்தத் தாய் அதைக் கண்டு அலறுகின்றது. பின் காத்துவிடுகின்றது.

அலறிய உணர்ச்சிகளைத் தாய் தனக்குள் எடுத்து அந்தக் குழந்தை மேல் பாய்ச்சும் பொழுது அடுத்துத் தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது எதற்கெடுத்தாலும் “வெடுக்… வெடுக்…!” என்று ஏசும் நிலையாக வளர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற குழந்தையைக் காக்கும் சந்தர்ப்பங்களால்
1.தாயின் உடலுக்குள் அது எப்படித் தீய வினையாகச் சேருகின்றது?
2.அந்த வினைக்கு நாயகனாக தாயின் செயல்களை எப்படி மாற்றுகின்றது? என்று
3.நீங்கள் அதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதனை உணர்த்தியது.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால் தீமைகளை வென்ற நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.

குழந்தையைக் காத்திட பயமும் வேதனையும் கொண்டாலும் காத்த பின் நமக்குள் அந்தப் பயமும் வேதனையும் தீய வினைகளாக வளராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பாதுகாப்புக் கவசமாக அமைந்து அறியாத நிலைகள் செயல்படுவதை மாற்றி உத்தமஞானியாக வளர வேண்டும் என்று அருள் உணர்வுகளைக் குழந்தைக்குப் பாய்ச்ச வேண்டும்.
1.தீய வினைகளை நிறுத்திவிட்டு
2.இந்த நல்வினைகளைச் சேர்த்துப் பழக வேண்டும்.