நாம் எடுக்கும் நிலைகளைத் தெய்வத்தைச் சீர்படுத்திக் கொள்ளலாம்.
நாம் எண்ணும் எண்ணங்களே தெய்வமாகின்றது. கோபத்தின் உணர்வானால் அந்த கோபத்தைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது. வேதனையை நுகர்ந்தால் அந்த வேதனையைச்
செயல்படுத்தும் தெய்வமாகின்றது.
ஆனால் இவை அனைத்தையும் ஒடுக்கித் தீமைகளை அகற்றி அசுர உணர்வுகளைத்
தடுத்து உணர்வினை ஒளியாக மாற்றும் மெய் ஒளியின் உணர்வைப் பெருக்கியவர் அகஸ்தியர்.
அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
அதனைப் பின்பற்றிக் “குரு என்ற வழிகளில்” நாம் பெற்றோமானால் நமது வாழ்க்கையில் வரும் தீமைகளில்
இருந்து விடுபட முடியும்.
இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
குரு கொடுத்த உணர்வினைக் கெடுத்து தன்னைத் தாழ்த்திக் கொண்டு
குருவிற்கு நாம் தவறு செய்தால் அந்தத் தவறின் பலன் முன் பகுதி சந்தோசத்தைக் கொடுக்கலாம்.
ஆனால் பின் பகுதி அதனின் அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உடலிலே தான் செய்யும் தவறின் உணர்வை உயிர் உணர்த்திவிடும்.
யாரிடத்திலும் பொய் பேசிடலாம். ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
பிறருக்கு நாம் தீங்கு விளைய வைத்து விடலாம். உயிரிடமிருந்து
தப்பவே முடியாது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
குருவிற்கு விரோதமான நிலைகளில் எவர் நடக்கின்றாரோ அதன்
பலன்கள் நிச்சயம் தெரிந்துவிடும்.
1.அவருடைய வாழ்க்கையில் உயிரே அவருக்குள் உணர்த்தி
2.நல்ல பயனைப் பெறும் நிலையைத் தடைப்படுத்தி
3.தனக்குத் தவறென்ற உணர்வை உணர்த்திவிட்டால்
4.உணர்வின் அறிவை நிச்சயம் பெற்றேதான் ஆகவேண்டும்.
குரு பக்தி குறைந்து எவரொருவர் அதை அலட்சியப்படுத்துகின்றாரோ
கிடைத்த சக்தியை உதறிவிட்டது போன்று ஆகிவிடும்.
நமது வாழ்க்கையில் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். இந்த
உடலை விட்டு எப்போது சென்றாலும் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளுடன் தொடர்பு
கொண்டு நாம் அங்கே செல்ல வேண்டும்.
ஒருவன் தீங்கு செய்கிறான் என்றால் அந்தத் தீங்கின் தன்மை
பற்று கொண்டால் அதுவே குருவாகின்றது. அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும் பொழுது
அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது.
1.தீமையை அகற்றிடும் நிலைகளை
2.குருவாக ஏற்றுக் கொண்டால்
3.“தீமையை அடக்கிடும் குரு” என்ற நிலைகள் அடைகின்றது.
இன்றைய செயல் நாளைய நிலைகளாக அடைகின்றது. ஆகவே நாம் எதனின்
நிலைகளை வளர்க்கின்றோமோ அதுவே நமக்குள் குருவாகின்றது.
ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால் அந்த
வேதனை உணர்வே நமக்குள் உருவாகின்றது. அதுவே குருவாகி நரக லோகத்தைச் சந்திக்கும் நிலையை
உருவாக்குகின்றது.
திருடன் என்ற நிலைகள் வந்தால் அதுவே குருவாகி திருடன் என்ற
நிலைகள் அடைந்து பிறருடைய துன்பங்களை அறியாது, தவறு செய்யும் நிலைகளே வருகின்றன. அதுவும்
குருதான்.
நமது வாழ்க்கையில் தீமையான உணர்வுகளை நமக்குள் புகாதபடி
தடுத்துக் கொள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தல் வேண்டும்.
அதற்குக் குரு பக்தி வேண்டும்.
மனிதனின் வாழ்க்கையில் நம் குரு காட்டிய அருள் வழியில்
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற
நிலைகளில்
2.நாம் எந்த குருவைப் பின்பற்றுகின்றோமோ
3.அந்த குரு உபதேசித்த உணர்வைத் தனக்குள் எடுத்தால்
4.தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற சக்திகளை ஊட்டும்.
5.”குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி”
6.”குரு பக்தி” கொண்டு எவர் கவருகின்றாரோ
7.அவர் நினைக்கும் பொழுதெல்லாம்
8.குரு தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.
9.எளிதில் செயல்படுத்த முடியும்.
10.தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த
முடியும்.
அரும் பெறும் உணர்வை நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில்
வரும் இருளை அகற்றுவோம். மெய்ப்பொருள் என்ற நிலைகளை உருவாக்குவோம்.
அனைத்து உலக மக்களின் உயிரையும் ஈசனாக மதிப்போம். அனைத்து
உலக மக்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று தவம் இருப்போம்.