ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2017

“கொக்கென்று நினைத்தாயா... கொங்கணவா...! – வாசுகி அம்மாள் கேட்டது

பிருகு மாமகரிஷியும் ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவ மகரிஷியாக வந்தது.

பிருகு மகரிஷி பல உடல்கள் மாறி மாறி  நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி அந்த ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர் தான்.

அப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலே எடுத்து வந்தார்.

பிருகு முந்தைய நிலைகளில் மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அந்த மந்திரத்தின் நிலைகளை எடுத்து ஆற்றல் மிக்க நிலைகள் பெற்றாலும் “விண் செல்ல முடியவில்லை”.

பிருகுவாக இருக்கும் பொழுது, கோடிக்கணக்கான நிலைகள் இருந்தாலும், பல ஆற்றல்மிக்க சக்திகளை அவர் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.

கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி முந்தைய அரச நிலைகளில் அவர எடுத்துக் கொண்ட மந்திரத்தால் சில நேரங்களில் இவரை எதிர்க்கும் நிலையில் யாராவது வந்தால் தன்னுடைய மந்திர சக்தி கொண்டு அவரை அச்சுறுத்தியோ அல்லது வீழ்த்தும் நிலைகளில்தான் செயல்பட்டார்.

ஒரு சந்தர்ப்பம்… யாசகம் கேட்க அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மேலே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் இட அது இவர் மேலே படுகின்றது.

இவர் முன்பு அரசன் அல்லவா…! அந்த உணர்வின் தன்மை அவரை விட்டு நீங்கவில்லை.

இவர் போகும் நிலைகளில் கொக்கு அவர் மேலே அசுத்தப்படுத்திவிட்டது. அந்தக் கொக்கினை அவர் தன் வாக்கினாலே வீழ்த்துகின்றார்.

அப்படி அவர் வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்கும் பொழுது “திருவள்ளுவர்” வீட்டிற்கும் வருகின்றார். வாசுகி அம்மாள் வீட்டிற்குள் இருந்து தாமதமாக வரப்படும் பொழுது கொங்கணவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

வாசுகி அம்மாவிற்குத்தான் சக்தி அதிகம், திருவள்ளுவருக்கு அல்ல. வாசுகி தன் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு சொல்லும் உணர்வின் ஆற்றலைத்தான் திருவள்ளுவர் எழுதி வந்தார்.

வாசுகி அம்மாள் தன் சக்தியினுடைய நிலைகள் கொண்டு கொங்கணவர் நினைத்ததை உணர்கின்றார். அவர் வெளியே வருவதற்குச் சிறிது நேரமாகிவிட்டது.

இவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். யாசகம் கேட்க வந்தாலும் அந்த “அகங்காரம்” இவருக்குள் இருந்தது. ஏனென்றால் அன்று அரசராக இருந்தவர்.

மக்களுக்காகச் சேவை செய்கிறேன். எனக்குக் கொடுப்பதற்கு தாமதமாகின்றது என்ற மன உறுமல் ஏற்பட்டு முணுமுணுக்கின்றார்.

கொஞ்ச நேரம் தாமதமானவுடன் மனதிற்குள் உறுத்தல். ஏனென்றால், அரசாட்சி செய்தே பழக்கமானவர். இவர் எந்த நிலைக்கு மாறவேண்டும் என்றாலும் அங்கேயும் அந்த நிலைகளே வருகின்றது.

அப்பொழுதுதான் வாசுகி அம்மாள் இவரிடம், “கொக்கென்று நினைத்தாயா… கொங்கணவா…?” என்றார்.

அவர் கொக்கை வீழ்த்திய நிலைகளை… ஒரு சாதாரண கிராமத்திலே ஒன்றும் தெரியாத…
1.“ஒரு பெண் சொல்கிறதே…” என்ற நிலையில் அதை உணர்த்தப்படும் பொழுது தான்
2.அவருக்கு அங்கே “ஞானம்” வருகின்றது.

தான் அரசனாக (பிருகுவாக) இருக்கக்கூடிய காலத்தில் செய்த நிலைகளிலிருந்து மீண்டு தெளிவுபடும் நிலைகளுக்கு வந்தாலும் தான் மீண்டும் ஒரு உடலிலிருந்து தெளிவு பெறும் எண்ணம் வரவில்லை.

வாசுகி அம்மாள் உணர்த்திய உணர்வின் அலைகள் வரப்படும் பொழுதுதான் கொங்கணவருக்குச் சிந்திக்கும் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் அவர் சிந்தித்து மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.

கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்” இன்றும் திருப்பதியில் உண்டு.

கொங்கணவர் தன்னிடம் எல்லா சக்தியும் இருக்கிறது என்ற நிலையில் செயல்பட்டு வந்தாலும் அங்கே வாசுகி சுட்டிக் காட்டுகின்றார்.

உண்மையை உணர்ந்து ஞானஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு தன் நினைவின் ஆற்றலை ஒவ்வொரு நிமிடமும்
1.தனக்குள் அந்த மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு,
2.சூரியனின் காந்தசக்தியைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.

போர் முறைகளினுடைய நிலைகளாலும், மந்திர நிலைகளாலும் தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான் இந்த உடலின் தன்மை கொண்டு தான் விண் செல்வதற்காக ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு
1.ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றியபின்
2.அவர்கள் எண்ணும் “நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே”
3.தன்னை அந்த “ஒளிச் சரீரம் பெறவைக்கும்” என்று உணர்ந்தபின் 
4.பிருகு தன் மனதைத் தங்கமாக்கக் கொங்கணவர் உடலிலே புகுந்து செயல்பட்டார்.

இன்று அவர் சொன்ன நிலைகளை விட்டுவிட்டோம்.

“மனதைத் தங்கமாக்குவதற்குத்தான்..” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு மகரிஷி ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். 

இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.