ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2017

“உயிரான ஈசனுடன்” ஐக்கியமாகப் போகும் நமக்கு நீசமாகப் போகும் இந்த உடலுக்கான ரோசம் தேவை தானா...?

நமக்கெல்லாம் பண வசதி இல்லை. வேலைக்குப் போனால் இரண்டு பேர் திட்டுவார்கள். பேசுவார்கள். இத்தனை உணர்வும் உங்களுக்குள் விஷமாகச் சேர்கின்றது.

நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இரவு கை கால் குடைகின்றது, கண் வலிக்கின்றது, மேல் வலிக்கின்றது என்போம்.

ஏனென்றால் அந்த அளவுக்கு விஷ அலைகள் பரவியுள்ளது. மனித உடலில் வேதனையாகப் பேசிச் சண்டை போடுவதைப் பார்த்தால் அந்த அளவுக்கு மேல் வலிக்கும் கை கால் வலிக்கும்.

ஒருவருக்குச் சரவாங்கி நோய் வந்துவிட்டது. அவர்களைப் பற்றி பிரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு முதுகு முழுமையும் வலிக்க ஆரம்பித்துவிடும். அதுதான் “மாரி”

“மாரித்தாய்” என்று ஊருக்கு ஊர், முச்சந்தியில் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம் அல்லவா…! என்ன செய்யும்? இந்தச் சக்தி நம்மிடமும் மாறிவிடும்.

அப்படி மாறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மெய்ஞானிகள் ஒளியை நாம் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மாரித்தாய் கோயிலுக்குச் சென்று அழுதால் போதும். அந்த அழுகையுடன் உங்களிடம் மாரி(றி) வந்துவிடும்.

பெரும்பகுதியான பெண்கள் கோயிலுக்குப்போய்க் கும்பிட்டுத் தன் கஷ்டத்தையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருப்பார்கள்.

அதே நிலைகளில் இறந்தவர்கள் அந்த மாரியம்மன் கோயிலில் பம்பைக் கொண்டு தட்டினால் போதும். அந்த உணர்வுகளை இந்த ஆத்மா உள்ளே இழுத்துக் கொண்டு வரும்.

1.நான் தான் வந்துள்ளேன்…
2.எனக்கு ஏன் அக்னிச் சட்டி எடுக்கவில்லை என்று
3.இந்த உடலுக்குள் வந்து ஆடும். இதுதான் மாரித்தாயினுடைய நிலை.

ஏனென்றால் மனித உடலுக்குள் நாம் எதையெல்லாம் எண்ணுகிறோமோ அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்து இயங்கி விடுகின்றது. இதுதான் மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.

நாம் எத்தனையோ கௌரவம் எத்தனையோ துணிமணிகள் எத்தனையோ அலங்காரங்கள் சுகமான நிலைக்கு எத்தனையோ பஞ்சு மெத்தை போட்டு வைத்திருந்தாலும்
1.உயிரான ஈசன் போய்விட்டால்
2.குப்பையில் கொண்டு போய் எரித்து விடுவார்கள்.

நாம் இங்கு பார்க்கும் கௌரவமெல்லாம் “இப்படியெல்லாம் இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம்…? ஆனால்,
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும்போதும்
2.மண்ணைக் கொட்டும் போதும்
3.”பார்த்துக் கொண்டேதான்…” இருக்கின்றோம்.

“ஏண்டா இப்படிச் செய்கின்றாய்… என்று கேட்கின்றோமோ…!”

ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் “நாற்றம் அடிக்கும்” என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே அந்த ஈசன் இருக்கும்போதே நீங்கள் கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும்
1.அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து
2.அந்த நீசமான உணர்வு வளராதபடி மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்தக் கௌரவப் பிரச்னை நம் அனைவருக்குமே நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல. அரசனுக்கு அந்த கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்புப் பண்ணினாலும் சரி? உடனே போர் முறைதான்.

நான் சொன்னேன் கேட்கவில்லை. உடனே போர்முறை.

இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகி ஆகிவிட்டால் அதே உணர்வு “என்ன சொன்னாலும்…, அங்கே கேட்கமாட்டார்கள்”.

இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும்.
1.எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ
2.அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை வைத்து வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நிவர்த்தி செய்து பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானம் இருக்க வேண்டும். வீட்டில் அவசியம் தியானமிருக்க வேண்டும்.

உடலை விட்டுச் சென்றால் அவனுடன் அவனாகி அவனாக நாம் ஆக வேண்டும். (உயிரான ஈசனுடன்)