ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2017

“சக்திவேல்… ஞானவேல்” – வேலும் மயிலும் துணை

முருகனுக்கு வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவி என்று சொல்வார்கள். இந்த ஆறாவது அறிவை சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா. பின் முருகா என்கிறோம்.

கருணைக் கிழங்கை வேக வைத்து அதனுடைய விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிடும் பொழுது எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ அதைப் போலத்தான்
1.”சக்திவேல்” - நமது கூர்மையான எண்ணம்,
2.”ஞானவேல்” - கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கிய நிலை.

“வேலும் மயிலும்” என்றால் கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை அந்த ஞானத்தால் நீக்கிவிட்டு சாப்பிட்டவுடன் உடலில் மகிழ்ச்சியாகின்றது.

மயில் எப்பொழுதுமே தோகை விரித்து ஆனந்தமாக ஆடுகின்றது. மயிலின் காலடியிலே என்ன இருக்கின்றது? பாம்பு.

நாம் கருணைக் கிழங்கை வேகவைக்கும் பொழுது விஷமெல்லாம் நீங்கினால் மிஞ்சுவது “கொஞ்சம் விஷம்தான்”.

1.வேக வைத்த அந்தக் கருணைக் கிழங்கை நாம் சாப்பிடும் பொழுது
2.நம் உடலிலிருக்கக்கூடிய மூல வியாதிகள் கை கால் குத்தல் மூட்டுவலி, போன்றவைகள் எல்லாம்
3.அந்த மிஞ்சிய விஷத்தன்மையால் நீங்கிவிடும்.

இந்த விஷத்தை நீக்கக் கூடிய நிலைகள் அதனுடைய சக்திகள் நமக்குள் அடங்கி நமக்குள் வரும் துன்பத்தை நீக்கக் கூடிய நிலைகளாக நமக்குள் வரும்.

அது தான் சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, இந்த ஆறாவது அறிவின் தன்மை. இதையெல்லாம் நாம் சமைத்து உட்கொள்ளும் நிலைகள்.

முருகன் யார்? ஆறாவது அறிவு. மயிலின் காலடியில் பாம்பு விஷம், அதற்குக் கதை எழுதியிருப்பார்கள்.

அசுரருடன் முருகன் போர் செய்தான். போர் செய்யப்படும் பொழுது அசுரன் இறக்கப்படும் பொழுது “முருகா… நான் உன் காலடியிலே இருக்கின்றேன். எனக்கு வரம் கொடு…” என்றான்.

நம் வாழ்க்கையில் எந்த நிலை இருந்தாலும் ரோட்டிலே போனாலும், ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அந்த ஆத்திரமான உணர்வுகள் நம்மைத் தூண்டும்.

அப்பொழுது அது நமக்குள் போராகின்றது. ஆனால் போருக்குப் போகும் பொழுது மனிதன் இந்த உணர்வைத் தடுத்து அதை அழிக்க வேண்டும்.

தீமையான உணர்வை மாற்றக் கூடிய சக்தி வரப்படும் பொழுதுதான்  “அசுரனை வென்றான்…” என்று சொல்கின்றோம்.

கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கும் பொழுது அந்த அசுரச் சக்தியை நீக்குகின்றோம். அப்பொழுது நாம் கருணைக் கிழங்கைச் சாப்பிட்டவுடன் அது “நம் காலடியில்” இருக்கின்றது.

1.எனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை
2.ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கின்றது.
3.ஆகையினாலேதான் அதை இப்படி இங்கே காட்டுகின்றார்கள்.

இதைப் போன்று மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கின்றோம். அப்பொழுது துன்பப்படும் அந்த வேதனையைத் துரித நிலைகளில் நாம் இழுத்துவிடுகின்றோம்

நமக்குள் வந்தபின் நம்மையும் அதே நிலையைச் செயலாக்கும். ஆக அங்கிருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை அதிகமாகக் கூட்டி “எல்லோருக்கும் நன்மை செய்தேனே… எனக்கு இந்த நிலை வந்துவிட்டதே” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

இயற்கையின் தன்மையில் நம்மையறியாமல் இப்படி வந்து சேரும் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதுதான் “மெய்ஞானம்”.

“புறத்தில்” கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை வேக வைத்து நீக்கி புளியைக் கரைத்து உப்பு காரம் இணைக்கும் பொழுது அதைச் சுவை மிக்கதாக மாற்றுவது போல் “அகத்திற்குள்”
1.நம் வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமையாக இருந்தாலும்
2.கூர்மையான எண்ணம் கொண்டு அந்த அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து விஷத்தை அடக்கி
3.ஞானத்தின் தன்மை கொண்டு மகிழ்ச்சியூட்டும் நிலையாக மாற்றிட வேண்டும் என்பதே
4.“சக்திவேல் ஞானவேல்” சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை.