ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2017

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் செய்கின்றது அதனால் தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று சொல்கின்றோம்

குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு யாம் கண்ட உண்மைகளை எல்லோருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று இப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அந்த உண்மைகள் தெரியாதபடி நாம் என்ன செய்வது?

மந்திரத்தினால் என்னென்ன நடக்கின்றது? நாடி சாஸ்திரங்கள் எப்படி வேலை செய்கிறது? யாகங்கள் செய்வதால் என்னென்ன தீய விளைவுகள் இருக்கின்றது? மதங்கள் எல்லாம் என்ன செய்கின்றது? ஞானிகள் என்ன சொன்னார்கள்?

இதையெல்லாம் குருநாதர் தெளிவாக எமக்கு உணர்த்தினார்.

கடவுள் எங்கே இருக்கின்றான் என்றால் ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று மதிக்கச் சொன்னார்.

1.உன்னால் முடிந்தமட்டும் நன்மை செய்.
2.அவர்கள் சந்தோஷப்படுவதைக் கண்டு நீ சக்தி பெற முடியும்.
3.அங்கே அதை உருவாக்கினால் அவர்கள் மகிழ்ச்சி பெற்று
4.அந்த உணர்வுகள் அவர்களிடம் நீ நல்ல வாக்கு வாங்கினால்
5.அது உனக்குள் உயர்ந்த சக்தியாகக் கிடைக்கும்.

இது தான் குருநாதர் எனக்குக் கொடுத்த நிலைகள்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றோம். இந்த உடலுக்குப் பின் நாம் வேறு என்ன கொண்டு போகப் போகின்றோம்?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறவேண்டும். அதை நீங்கள் பெற வேண்டும். அந்த உயர்ந்த நிலை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்த உணர்வைத்தான் நான் எண்ணிக் கொண்டேயிருக்கின்றேன். “தவமிருக்கின்றேன்”.

அந்த உணர்வு நீங்கள் சந்தோஷமாக சந்தோஷமாக அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

அப்பொழுது அந்த அருள் பெறவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.  நீங்களும் அந்த அருள் பெறவேண்டும் என்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.
1.இப்படி ஒருவருக்கொருவர் பின்னி வரும் பொழுது தான்
2.எல்லோருக்குள்ளும் இது வளரும்.

அதனால் தான் பொது விதிகளில் வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெறவேண்டும் நாம் பார்ப்பவகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அந்த விதியை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

அதைச் செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்றால் ஒன்றுமில்லை
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை…,
2.”உயிர் செய்கிறது…” அவ்வளவு தான்.

அதனால் தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று யாம் சொல்வது.

இதையெல்லாம் குருநாதர் தெளிவாக்கிய பிற்பாடு தான் எல்லோருக்கும் இந்த அருள் உணர்வுகளை எப்படியும் கிடைக்கச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றோம். அப்பொழுது அதை யாமும் பெறுகின்றோம்.
1.நீங்கள் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது தான்
2.முதலில் நான் பெறுகின்றேன்.

இந்த உணர்வு எனக்குள் விளைந்த எண்ணத்தைத்தான் உங்களிடம் கொடுக்கின்றோம். “எல்லோரையும் இதே மாதிரிச் செய்து பாருங்கள்…” என்று சொல்கின்றோம்.

சாமி செய்வார் சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் யந்திரம் செய்யும் எல்லாம் செய்யும் என்ற நிலைக்குப் பதில் நீங்கள் செய்து பாருங்கள்.

எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்குகின்றது. உணர்வை உடலாக்குகின்றது. மீண்டும் நினைவலைகளாகி இயக்குகின்றது. அதைச் செயலாக்குகின்றது.

“இதெல்லாம் இயற்கையின் நிலைகள்”. 

இப்படி இயற்கையின் நிலைகள் வந்ததைத்தான் யார் யாரோ அவரவர்கள் எப்படி எப்படியோ கொண்டு போய் என்னென்னமோ செய்துவிட்டார்கள்.