ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2017

படித்துவிட்டு “நான் எல்லாம் செய்வேன்” என்றால் அது விஞ்ஞான அறிவிற்குத்தான் செல்ல முடியும் “அனுபவரீதியில் தான்” மெய் ஞான அறிவைப் பெறவும் முடியும் வளர்க்கவும் முடியும்

ஒருவர் நம்மைத் தாக்கிப் பேசினால் பதிலுக்கு அவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தான் தூண்டுகின்றது. அப்படித் தூண்டும்போது ஆத்திரமான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ஆத்திரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்துவிட்டால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. அல்லது வாத நோய் வருவதற்குண்டான வித்தாக மாறுகின்றது.

அதிலிருந்து தப்ப முடியாத நிலை ஆகின்றது. ஆனாலும் அது சந்தர்ப்பம் தான்.

அதே மாதிரி நாம் தவறே செய்யவில்லை என்றாலும் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் தாக்கப்படும் பொழுது நாம் பார்க்கின்றோம்.

“சும்மா இருப்பவனைத் தாக்குகின்றானே…” என்று நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். அப்படி உணர்ச்சிவசப்படும் பொழுது “இதைக் காட்டிலும் நமக்கு ஆத்திரம் அதிகமாகின்றது”.

அப்பொழுது அவனைப் பார்த்து “ஏனப்பா.., சும்மா இருப்பவனை அடிக்கின்றாய்…?” என்று கேட்டால் அவன் திருப்பிப் பதில் சொன்னால் போதும்.
1.கோபமும் ஆத்திரமும் இரு மடங்காகி
2.அந்த உணர்வை நாம் அழுத்தமாகச் சுவாசிக்க நேருகின்றது.
3.ஆனால் நன்மை செய்வதாகத்தான் நாம் எண்ணுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் ஆத்திர உணர்வுகள் ஈர்க்கப்பட்டு இரத்தக் கொதிப்பாகும் என்று நாம் அறியவில்லை,

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் அதிகமாகி நம் மனித நினைவை இழக்கச் செய்து அது வியாதியாகி நஞ்சுகள் அதிகமாகி கடைசியில் குறுகிய நிலைகள் கொண்டு இயங்குவது போல் “குறுக்கும் உணர்வுகள்” உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

உயிராத்மாவில் சேரும் இந்த உணர்வுகள் இந்த உடலைக் குறுக்கி வேறு விஷமான உடலைப் பெறும் தகுதியைத்தான் ஏற்படுத்தும்.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த அந்த இருண்ட சந்தர்ப்பத்தை மாற்றி மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுதல் வேண்டும்.

நம்மை ஒருவர் குறைத்துப் பேசிவிட்டால் ஆத்திரம் மூண்டு “இப்படிக் கேவலப்படுத்திவிட்டான்…” என்ற வேட்கையைக் கூட்டி அழிக்கும் உணர்வுகளே அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பங்கள் வந்தாலும் உடனடியாக விண்ணை நோக்கி ஏகி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
1.வரும் அசுத்தத்தை நீக்குகின்றோம்.
2.அதே சமயத்தில் மெய் ஒளியைப் பெறுகின்றோம்.
3.இப்படித்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உயர்வதும் தாழ்வதும் “படித்துணர்ந்து… நான் அதைச் செய்வேன்…” என்றால் விஞ்ஞான அறிவிற்குத்தான் செல்ல முடியும்.

மெய் ஞான அறிவில் படித்து வர முடியாது. அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “அனுபவரீதியில் தான்” நாம் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்தச் சந்தர்ப்பங்களையெல்லாம் நல்லதாகப் பயன்படுத்த “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் புருவ மத்தியில் தொடர்பு கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலில் சேர்த்துத் தூய்மையாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அருள் சக்திகளைப் பெறுவதையே நம் வாழ்க்கையாக அமைக்க வேண்டும். இதைத்தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.