ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2017

தாய் தந்தையரை நேசித்து வளர்ந்தால் “ஞானக் கனியைப் பருகலாம்… அருள் ஞானியாக முடியும்” என்பதே ஞானிகள் நமக்குக் காட்டிய பேருண்மைகள்

நாரதர் சிவனிடம் வருகின்றார். கனியைக்  கொண்டு வந்து கொடுக்கின்றார். இந்த உலகை யார் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கு இந்தக் கனி.

அப்பொழுது முருகன் என்ன செய்கின்றார்? தன் உணர்வின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அவரிடம் வேகமாகச் செல்லும் மயில் இருக்கிறது.

ஏறி உட்கார்ந்து ஒரு நொடியில் உலகை வலம் வருகின்றேன் என்று அவருடைய உணர்வு வேகமாக ஓடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக ஆகி தனக்குள் பல உணர்வின் சத்தை எடுத்து தான் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்ற இந்த உடல் இது இருந்த இடத்திலிருக்கின்றது - விநாயகர்

1.உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள்
2.அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது - முருகர்
3.ஆனால் இவர் இருந்த இடத்திலிருந்து
4.உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து
5.இந்த வினையின் உருவமாக அது சேர்க்கப்பட்டது.

பேரண்டத்தின் நிலைகள் பெரும் உலகமும் இந்தத் தாய் தந்தை தனக்குள் எடுத்துக் கொண்டது. அது இருந்த இடத்திலிருந்தே தன் உணர்வின் சத்தை அது கருவாக எடுத்து விளைய வைத்தது.

மரம் பல அலைகளின் தொடர் கொண்டு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் கொண்டு இந்தச் சத்திற்குள் விளைய வைக்கின்றது தன் கனிகளை.

அதே போல் தன் அன்னை தந்தைக்குள் விளைந்தது இந்த உணர்வின் வித்து. இந்த வித்தின் தன்மையே அந்த உயிரான அந்தச் சத்து.

இந்த உடலின் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலைகள் கொண்டு அந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியை
1.இந்த உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல அந்த உயிரின் தன்மை தனக்குள் எடுப்பது.

ஒரு மாங்கனி அது வித்தாகி மரமாகிப் பின்பு தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்க்கின்றது. இதைப் போல் தன் இனத்தின் சத்தின் தன்மை “அந்த ஒளியின் சுடராக… வளரும் பக்குவ நிலைகள்” பெறுகின்றது.

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.

தாய் தந்தையரின் பாசத்தால்தான் நாம் அனைவரும் வளர்கின்றோம். அப்படிப் பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது
1.அந்த ஞானி காட்டிய அருள் உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
2.அவன் வழியில் நீ பெறு… “கனியாகு”

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நுகர்ந்தான். அனைதும் அறியும் ஞானியாக ஆனான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரக் கூடிய அணு நாரதன். அந்த உணர்வின் தன்மை அங்கே இயக்கப்பட்டது. நாரதன் வான்மீகியின் காதிலே ஓதினார் என்று காவியம் உண்டு.

அதே நாரதனை இங்கே காட்டினார்கள்.

மரத்தில் விளைந்து முதிர்ந்தது கனி. கனியிலிருந்து சுவையான மணம் வரும். அது இனிமை கொண்டது.

நாரதன் கையில் நாதம் சுருதி ஏழு. சரஸ்வதி வைத்திருப்பதும் சுருதி ஏழு. இவ்வளவையும் காட்டியுள்ளார்கள். படத்தையும் காட்டியுள்ளார்கள். பேருண்மையின் தன்மையைக் காட்டுவதற்கு அன்று மெய்ஞானிகள் இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தைத் தனக்குள் எடுத்து அதைத் தன் எண்ணத்தாலே (தாய்) கருவாகக் கூட்டியதோ இதைப் போல பேரண்டமும் பேருலகமும் இந்த அன்னை தந்தை தான். நீ அதிலிருந்து ஜெனித்தாய் என்ற இந்த உணர்வைக் காட்டுகின்றார்கள்.

மரத்துடன் ஒன்றிய காய் அது கனியாகும். காயாக வெம்பிவிட்டால் சுவை இயக்கம் புளிப்பாகும். வித்தின் தன்மை ஆகாது.

ஆகவே முதல் தெய்வங்களாக இருந்து உன்னை உருவாக்கியது உன் தாய் தந்தையர் தான். அவர்களுடன் நேசித்து நீ அருள் வழியில் வளர வேண்டும்.

அப்பொழுது தான் அந்தக் கனியின் தன்மையை நீ அடைவாய் என்பதே அன்றைய ஞானிகள் நமக்குத் தெளிவாக உணர்த்திய காவியத்தின் “மூலம்”.