ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2017

இன்று அவனவன் ஆட்சி செய்யும் நிலைகளில் “அவனவன் செய்யும் செயலே சரி” என்ற நிலை (கலி) உலகெங்கிலும் உருவாகிவிட்டது

அன்று அரச காலங்களில் ஒரு மனிதனுக்கு ஒரு தத்துவம் கிடைத்துவிட்டால் அந்த நாட்டிற்குள் வந்துவிட்டால் அது அந்த அரசனுக்கே உரிமையானது.

அவரை வரவேற்று அவருக்கு வேண்டியதைக் கொடுத்துச் செய்தியை வாங்கிக் கொள்கின்றார்கள். அந்தச் சரக்கு அனைத்தையும் அரசனுக்குத்தான் சொந்தமாக்குகின்றார்கள்.

அப்படி அவர் கொடுக்கவில்லை என்றால் மரண தண்டனை கொடுக்கின்றார்கள். அதற்கு அஞ்சித் தன்னிடம் உள்ளதை அரசனிடம் கொடுத்துவிடுகின்றார்கள்.

பண்டைய காலப் புலவர்களைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு அரச சபையிலும் அந்தப் புலவர்கள் உண்டு. அந்தப் புலவர்கள் அனைவரும்
1.அரசனைப் புகழ் பாடித்தான் வந்திருப்பார்கள்.
2.புகழ் பாடிப் பொருள் தேடுவார்கள்.

அந்தப் புகழ் பாடும் நிலைகளில் அரசருடைய மக்கள்களில் (தன் பிள்ளைகள்) இரு பிரிவு ஆகிவிட்டால் இவர்கள் எதிர் கவி பாட ஆரம்பிப்பார்கள்.

எதிர் கவி என்ற நிலைகளில் இதைப் போன்ற ஒரு மரணமடைந்த உணர்வுகள் இங்கு வந்தபின் கவியில் அந்தப் புலமை பாடும் பொழுது இந்த அரசன் இப்படித்தான் போவான் என்று சொல்வதை இவர்கள் “அறம்…” என்று சொல்வார்கள்.

ஆனால் இதெல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்து அந்தச் செயல்களை செய்கின்றது.

மகரிஷிகள் காட்டிய உண்மையின் நிலைகள் அரசன் கையில் சிக்கப்பட்டு அதை அவர்கள் தனக்குகந்ததாக மதங்களாகப் பிரித்துவிட்டனர்.

அதனால் அதிலுள்ள பேருண்மையின் நிலைகளை அறிய முடியாமல் போனது. மகரிஷிகள் காட்டிய பேருண்மையின் நிலைகளை நாம் அறிய முடியாமல் போனதற்கு மூலமே இது தான்.

இன்னும் ஒவ்வொரு மதமும் “கடவுளைத் தேடிக் கொண்டுதான்… உள்ளது”.

நாம் இந்தப் பணிகளைச் செய்தால் கடவுள் நமக்கு வேண்டியதைச் செய்வான். “கடவுள் எங்கேயோ இருக்கின்றான்…” என்ற எண்ணத்தில் அரசர்கள் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டாலும் தர்மம் நியதி என்று பதிவு செய்து கொள்கின்றார்கள்.

அவ்வாறு பதிவு செய்த உணர்வு கொண்டு அவர்கள் எண்ணி ஏங்கும் பொழுது “வேதனை கலந்த” உணர்வுகளையே சுவாசிக்கின்றார்கள். ஒரு நல்ல பதார்த்தத்தைச் செய்து அதில் விஷத்தைக் கலந்து உணவாக உட்கொண்டால் மயக்கமடையச் செய்யும்.

உயர்ந்த எண்ணங்களையும் பிறருக்குப் பண்புடன் செயல்படும் நிலைகளையும் எண்ணி வாழ்ந்தாலும் என்ன ஆகின்றது?

“உலகில் இப்படித் தீமைகள் நடக்கின்றதே…” என்ற வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
1.அது இவர்கள் உடலில் தீமை செய்யும் அணுக்களாக உருவாகின்றது.
2.அப்பொழுது இவர்கள் எண்ணிய நல்ல எண்ணம் அவர்களையும் காக்கவில்லை.
3.அந்த நாட்டையும் காக்கவில்லை.

இத்தகைய உணர்வுகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி படர்ந்திருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் உள்ள அனைத்து நிலைகளிலும் இது வளர்ந்து வந்திருக்கின்றது. இது வளர்ந்து வளர்ந்து “பழி தீர்க்கும் உணர்வுகளாக” ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் உருவாகி இன்று உலகெங்கிலும் “தீவிரவாதம்” என்று பரவிவிட்டது.

அரசர்கள் வெளிப்படுத்திய அந்த உணர்வின்படி “எதிரி…” என்ற நிலைகளில் மற்றவரை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.
1.எல்லோருடைய உணர்வுகளிலும் இதே உணர்வுகள் வளர்ந்து
2.”மற்றவர்களை அடக்க வேண்டும்” என்ற நிலையே உருவாகிவிட்டது.

இதைத்தான் அவனவன் ஆட்சி புரியும் நிலைகளில்… “அவனவன் செய்யும் செயலே சரி…” என்ற உணர்வுகளுக்குச் செல்லப்படும் பொழுது “கலி” உருவாக்குகின்றான் என்பது.

இதற்குக் காரணமே அரசர்களின் நிலை தான்.