ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2017

“ஓ…ம் நமச்சிவாய…, சிவாய… நம ஓ…ம்” - சிவலிங்கத்தில் மூன்று பட்டைகள் போட்டுக் காண்பித்ததன் விளக்கம் - இராமலிங்கம்

“எண்ணம்” என்றால் இராமன். அதை போல உயர்ந்த ஞானத்தின் உணர்வு கொண்டு தன் எண்ணத்தால் உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆனது தான் இராமலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள்.

இப்பொழுது நாம் எண்ணும் அனைத்தும் சிவலிங்கம் சீவலிங்கம். நம் வாழும் நிலைகள் கொண்டு இந்த உடலின் தன்மை “சிவ தத்துவம்” அடைகின்றது.

எண்ணத்தால் உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிய நிலைகள் வரும் பொழுது எண்ணத்தால் உருவாக்கிய நிலைகள் இராமலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள்.

நாம் அறிந்து கொள்ள எளிதாகப் பல காவியங்களைப் படைத்துள்ளார்கள் ஞானிகள்.

இதை உணர்த்துவதற்குத்தான் சிவ ஆலயங்களில் அனைத்தும் இப்படிப் பல நிலைகளை உருவாக்கி அதிலே
1.சிவலிங்கத்தில் ஒவ்வொன்றும் மூன்று பட்டைகள் கொண்டு போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
2.சிவனுக்கு விபூதியைப் போட்டு மூன்று பட்டைகளாகக் காண்பித்திருப்பார்கள்.

நாம் எதையெல்லாம் நுகர்கின்றோமோ அது அந்த இயற்கையின் தன்மையில் “பஸ்பமாக்கி” அது தனக்குள் தனதாக மாற்றிக் கொள்கின்றது.

1.வெப்பம்
2.காந்தம்
3.விஷம்
4.இந்த மூன்றின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்த உணர்வுகள்
5.தனதாக ஐக்கியமாகித் தன் உணர்வாக மாற்றிக் கொள்கிறது என்பதை உணர்த்துவதற்குத்தான்
6.சிவனுக்கு மூன்று நிலைகள் போட்டு அங்கே வைத்துள்ளார்கள்.

உருவத்தைக் காட்டினாலும் அந்த “உருவத்திற்குள் உள்ள ஆற்றலை” நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதையெல்லாம் வைத்தார்கள்.

இதைப் போன்று நாம் சிவமாக்கும் (உடலாக ஆக்கும்) முறைகளைச் சிவன் ஆலயத்தில் காட்டினாலும் நாம் எவை எவையெல்லாம் அங்கே எண்ண வேண்டும் என்பதற்கு அங்கே மலரை வைத்திருப்பார்கள்.

இந்த மலரைப் போல் மணம் நாம் பெறவேண்டும் என்று ஏங்கினால் இதை “ஓம் நமச்சிவாய…, நம் உடலாக” (நமதாக) மாற்றுகின்றது.

இந்த மலரைப் போன்ற நறுமணம் எல்லோரும் பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அந்த மணம் “சிவாய நம ஓம்…” நம்மிடமிருந்து அது வெளிப்படுகின்றது.

நாம் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் சத்து நமக்குள் ஓம் நமச்சிவாய என்று இந்த நறுமணம் நமக்குள் உடலாக சிவமாக ஆனாலும்
1.அதைச் “சிவாய நம ஓம்…”
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் இந்த நறுமணம் கிடைக்க வேண்டும்
3.அவர்கள் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் சுவற்றில் எந்தச் (நிறத்தில்) சாயத்தைப் பூசுகின்றோமோ அதன் உணர்வைத்தான் நாம் கண்களில் பார்க்க முடியும்.

இதைப் போல் ஒரு மனிதனிடம் நாம் சொல்லாகச் சொல்லும் பொழுது மகிழ்ச்சியான சொல்லைச் சொல்லப்படும் பொழுது
1.மீண்டும் அங்கே ஓம் நமச்சிவாய - சிவாய நம ஓம்.
2.அதாவது நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்
3.நாம் மகிழ்ச்சியாக இருப்பது போல் எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லும்போது – “சிவாய நம ஓம்”

அப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சொல்லைச் சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் தூண்டப் பெற்று
1.ஓம் நமச்சிவாய என்று
2.அவர் உடலுக்குள்ளும் ஐக்கியமாகின்றது.
இவ்வாறு எல்லோருக்குள்ளும் உயர்ந்த உணர்வைப் பெற்று வளர்க்கும் நிலைகளுக்குத்தான் இவ்வாறு சிவலிங்கத்தைப் படைத்துள்ளார்கள் ஞானிகள்.