ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2017

அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து… நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்று உணர்த்தினார் குருநாதர்

ஊருக்குள் நான் (ஞானகுரு) கெளரவமாக இருக்கப்படும் போது வேலைக்குச் செல்லும் போது திடீரென்று குருநாதர் அழைக்கின்றார், சாக்கடைப் பக்கம் அவர் அமர்ந்து இருக்கின்றார் குருநாதர்.

ஒரு காபி ஒரு டீ வாங்கி வா என்றார். கடையிலிருந்து வட்ட செட்டாவில் வாங்கி வந்தேன்.

அப்போது சாக்கடைப் பக்கம் நான் போனவுடன் இங்கு வா என்றார். இங்கே உட்கார் என்றார். அங்கு சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்ட அந்தக் கப்பிகள் அனைத்தையும் இந்தக் காபியிலும் இந்த டீ யிலும் போடுகிறார்.

போட்டு விட்டு இதை நீ சாப்பிடு என்கிறார் குருநாதர்.

ரோட்டுப் பக்கம் ஜனங்கள் அதிகமாக போகும் இடம் அது. இந்தச் சாக்கடைப் பக்கம் இருந்த உடனே இந்த காப்பியில் அள்ளிப் போட்ட உடனே எல்லோரும் என்னை “வேடிக்கை…” பார்க்கிறார்கள்.

இவ்வாறு அனைவரும் வேடிக்கை பார்க்கும் போது நம்மைப் பார்த்த உடனே என்ன ஆனது?

ஏற்கனவே குருவிடம் நீங்கள் சொல்வது அனைத்தையும் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன். அதனால் இவரிடம் இருந்து மீற முடியவில்லை.

பல உண்மைகளை எல்லாம் குரு காட்டி இருக்கிறார். இதை மறுத்தாலோ நமக்கு இனி “என்ன தண்டனை கிடைக்குமோ…!” என்ற நிலையும் வருகிறது. அவருடைய வாக்கினாலே எப்படித் தப்ப முடியும் என்ற நிலையும் வருகின்றது.

அவர் கூப்பிட்ட உடனே போகமல் இருக்க முடியவில்லை.

அந்த சாக்கடைப் பக்கத்திலே உட்கார்ந்து அதை அள்ளிப் போட்டு “நீ குடி…” என்கிறார்.

நானோ ரோட்டைப் பார்க்கிறேன் ஆள்களைப் பார்க்கிறேன் வேடிக்கை பார்க்கிறவர்களைப் பார்க்கிறேன். குருநாதரைப் பார்க்கிறேன் என் மனதைப் பார்க்கிறேன். “வசமாகச் சிக்கி விட்டோமே” என்று எண்ணுகின்றேன்.

இனி யாரும் பார்த்தால்… “நம்மைக் கேலி செய்வார்களே…” இதை எப்படிக் குடிப்பது…! உமட்டல்… அதை நினைத்தாலே “வாந்தி” வருகிறது.

இந்த பக்கம் அசிங்கமாக இருக்கிறது, அசூசையாகக் கிடப்பதை அதிலிருந்து வருவதைச் “சாப்பிடு” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்பொழுது எனக்கு உமட்டல் தான் வருகிறது.

இதைப் பார்த்தவுடனே குருநாதர் கேட்கின்றார்.

நான் சொல்வதைச் செய்றேன் என்று சொன்னாய். உன்னைக் காபி தானே குடிக்கச் சொன்னேன். இதற்குள் எவ்வளவு பெரிய சத்து இருக்கிறது தெரியுமா…! நீ குடித்துப் பார்… என்கிறார்.

அவ்வாறு அவர் கூறினாலும் எனக்கு வாந்தி தான் வருகிறதே தவிர உள்ளுக்குள் போக வழி இல்லை.

அப்புறம் அதை எண்ணி இது பண்ணியவுடனே.., “சரி நீ போ, இந்த வட்ட செட்டைக் கொண்டு கடையில் கொடுத்து விடு” என்கிறார்.

அங்கே போனால் டீ கடைக்காரர் சும்மாவா விடுவார். வட்ட செட்டாவை நீயே வைத்து உங்கள் வீட்டில் வைத்துக் குடித்துக் கொள். யாராவது பார்த்தால் இங்கே வர மாட்டார்கள். இங்கு காபி குடிப்பதைக் கெடுக்காதே என்றார்.

பைத்தியதோடு சேர்த்து நீ ஓரு பைத்தியமாக இருக்கிறாய், நீ போயா…, என்கிறார். குருநாதரை ஒரு பைத்தியமாகவும் அவருடன் நான் சேர்ந்து கொண்டதால் என்னையும் பைத்தியாமாக்கி “நீ போய்யா..,” என்கிறார்.

வரும் போது முறுக்கு பொட்டுக் கடலை நிலக்கடலை இந்த மூன்றையும் வாங்கிட்டு வாடா என்றார்.

வாங்கிக் கொண்டு வந்தவுடன் சாக்கடையில் இரண்டு அடிக்கு ஒரு கோடு போடச் சொல்கிறார்.

இரண்டு அடிக்கு வரிசையாக கோடு போட்டேன். அடுத்து எதைச் சொல்வாரோ… என்ன சொல்வாரோ…! என்று தவித்துக் கொண்டு இருக்கிறேன்.

முருக்கு நிலக்கடலை பொட்டுக்கடலை வாங்கிட்டு வந்ததை சாக்கடைக்குள் போடச்சொல்லிவிட்டார்.

முதலில் பொட்டுக்கடலை ரெண்டாவது நிலக்கடலை மூன்றாவது பொட்டுக்கடலை நான்காவதாக முறுக்கு அதற்கப்புறம் பொட்டுக்கடலை அதற்கு அப்புறம் இந்த நிலக்கடலை,

இப்பொழுது “நீ முகர்ந்து பாருடா…!” என்கிறார்.

இதென்ன வம்பாகப் போய்விட்டது? இதை எடுத்துச் சாப்பிட சொல்வார் போலிருக்கிறது…!

நான் குருநாதரிடம் நாற்றம் தான் வருகிறது சாமி…! என்றேன்.

அப்படியாடா வருகிறது…! நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய். என்னை காப்பாற்றுவேன் என்று சொன்னாய் என்கிறார் குருநாதர். இப்பொழுது நாற்றம் வருகிறது என்கிறாய்…!

“ஆரம்பத்தில்” என் மனைவியைக் குருநாதர் காப்பாற்றிய பொழுது நான் சொல்வதை நம்புகிறாயா? என்றார். நம்புகிறேன்… என்றேன்.

என்னை நீ காப்பாற்றுவாய் அல்லவா? நீங்கள் சொல்வதை எல்லாம் நான் காப்பாற்றுவேன். சொன்ன வாக்கை “நான் காப்பாற்றுவேன்” என்று சொன்னேன்.

சொன்ன வாக்கைக் காப்பாற்றுவேன் என்று சொன்னாய் அல்லவா இப்பொழுது ஏன் இந்த மாதிரிச் செய்கிறாய்? நீ முகர்ந்து எடப்பா என்கிறார்.

எதை…!

கோடு போட்டு மொத்தமாகக் கலக்கிவிட்டு நீ நிலக்கடலைப் பருப்பாக எடு என்கிறார். எல்லாவற்றையும் வேறொரு பக்கம் போடுகிறார்.

அந்த நேரத்தில் தான் பன்றி வருகிறது. அது வந்தவுடன் பாருடா…, என்கிறார்.

அங்கிருந்து நுகர்ந்து முகர்ந்து முகர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறது. அந்த வாசனையைப் பிடித்தவுடன் குடு…குடு… என்று ஓடி இங்கே வருகின்றது.

வந்த உடனே முதலில் நிலக்கடலைப் பருப்பை எடுத்தது. அதைச் சாப்பிட்டவுடன் முருக்கைப் போய் எடுத்தது. அதைத் தாண்டி நிலக்கடலைப் பருப்பை எடுத்தது. அதற்கு அப்புறம் முகர்ந்து பார்த்து விட்டுக் கடைசியாகத்தான் பொட்டுக் கடலையை எடுக்கிறது.

இதிலே எண்ணெய்ச் சத்து இருக்கிறது அதிலே எண்ணெய்ச் சத்து இல்லை.

பார்த்தாயா…! அது எப்படி நுகர்ந்து எடுக்கின்றது? பார்த்துக் கொண்டாயல்லவா…! நீயும் எடு… என்கிறார்.

நான் எங்கே சாமி எடுக்க முடியும்…! நாற்றம் தான் அடிக்கிறது என்றேன்.

பார்த்துக் கொண்டாய் அல்லவா.
1.நாற்றத்தை அது பிளந்தது.
2.அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்தது,
3.அது கெட்டதை எண்ணவில்லை.

நீயோ நாற்றம் என்று எண்ணியதால் “அது தான்” உனக்கு முன்னாடி வருகிறது, உன்னால் “நல்லதை நுகர முடியவில்லை…” என்று சொல்கிறார்.

1.அப்புறம் எதோ ஒன்றைச் சொல்கிறார்.
2.அதை நுகர்ந்தேன்.
3.நுகர்ந்து எடுத்தவுடனே அப்பொழுது அதற்குள் இருக்கூடிய அந்த வாசனையை இது எப்படி பிளக்கிறது?
4.இந்த உணர்வை நீ இப்படிச் சுவாசி.
5.இதற்கு அப்புறம் நீ நுகர்ந்து பார்க்கக் கூடிய நாற்றம் எப்படி விலகுகிறது.
6.இந்தப் பருப்பை நீ நுகர முடிகிறது.

இப்படிச் சொன்னவுடனே மறுபடியும் இதை எடுத்து சாப்பிடச் சொல்வாரோ என்று அந்தப் பயமும் வருகிறது.

இப்படி இந்த உணர்வின் தன்மை என்ன இருந்தாலும் நாம் சாக்கடைக்குள் போட்டதைச் சாப்பிடச் சொல்லி விட்டால் என்ன? என்கிற போது வாந்தி தான் வருகிறது, இதைத்தான் சாப்பிடச் சொல்வாரோ என்கிற இந்த நிலை தான் வருகிறது.

நடந்த நிகழ்ச்சி இது. பின் குருநாதர் உபதேசித்தார்.

இந்த உயிர் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கெடுதலில் இருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து அந்த உடலில் சேர்த்து கொண்ட உணர்வு வலுப்பெற்று அதனின் வலு கொண்ட அந்த உணர்வின் சரீரமாக வளர்ந்தது.

கெட்டதை நீக்கி நல்லதைப் பெறும் இந்த உணர்வின் தன்மையை அது வளர்த்து அதிலே சேர்த்து கொண்ட அந்த வினைக்கு நாயகனாக இன்று மனித உடல் நீ பெற்றிருக்கிறாய்.

1.அன்று இது நாற்றம் என்று நீ விலகி இருந்தால்
2.உன் உடல் இன்று நாற்றத்தை விலக்கும் சக்தியாக வராது.
3.உன் உடலில் இருந்து வரக்கூடிய இந்த உணர்வின் தன்மை
4.”கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…” என்று
5.வியாசகர் உணர்த்திய “வராக அவதாரத்தை” அங்கே அமரச் செய்து எமக்குத் தெளிவாக்கினார்.

கெட்டதை நீக்கிப் பல நிலைகள் கொண்டு இப்படி வந்திருக்கூடியது தான் இந்த மனித உடல் என்று அங்கே சாக்கடையில் வைத்து உபதேசத்தைக் கொடுக்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அந்த வராகன் நாற்றத்தை எண்ணாது நல்லதை நுகர்ந்தது போல் இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை நுகராது இந்தக் காற்றில் மறைந்துள்ள அருள் மகரிஷிகளின் அருளை நுகர்தல் வேண்டும் என்று எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார். 

வராகன் என்றால் தீமைகளைப் பிளந்து நல்லதைப் பிரிக்கும் “மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்” என்று பொருள்.