ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2017

காயகல்ப சித்து

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து தீமைகளை நீக்கி நல்ல உணர்வின் தன்மையை வளர்க்கச் செய்யும் மனித உடலைப் பெற்றோம்.

ஆனால் அதர்வணவாதிகள் விஷத் தன்மையை வளர்க்கும் மாட்டின் நிலைக்குத்தான் நம்மைக் கொண்டு செல்கின்றார்கள்.

சரணாகதி என்ற தத்துவத்தைக் கொடுத்து “யாகங்களைச் செய்… பாவங்களைப் போக்கு…” என்று சொல்லி இதனின் மணத்தைக் கூட்டி எடுத்து ஒருவரின் உடலுக்குள் சேர்க்கச் செய்தபின் இவர் இறந்த பின் இவர் ஆன்மாவை ஆகாதவர் உடலில் தான் பாய்ச்சுகின்றர்கள்.

இது போன்ற நிலைகளிலிருந்து என்று நாம் விடுபடுவது?

நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ அது சாகாக்கலை. வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து பெருக்குவோமேயானால் பெருக்கிய உணர்வின் கலையின் பிரகாரம் நம் உடல் நலிவடைகின்றது.

நலிந்த உடலை நம் உயிர் உருவாக்கும். இது “சாகாக்கலை”.

பழனியில் சிலர் எம்மை வைத்தியரீதியில் அணுகி “போகர் சமாதியானது உங்களுக்குத் தெரியுமா...?” என்று கேட்டார்கள்.

எமக்குத் தெரியாது… என்றோம்.

போகர்… காயகல்ப சித்தியாகி “சாகாக்கலையாக இருக்கிறார்” என்றார்கள்.

போகர் சாகாக்கலையாக “எங்கே…” இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டோம்.

போகர் முருகன் பக்கத்தில் சமாதியாகிவிட்டார் என்று கூறினார்கள்.

சமாதியைத் தோண்டி “அவரைப் பாருங்கள்” என்று கூறினோம்.

அது எப்படித் தோண்டுவது…! என்றார்.

போகர் உயிருடன் தான் இருக்கின்றார் சமாதியைத் தோண்டி போகரை அணுகி அனைவரும் அருள் வாக்கு வாங்கலாம்… நீங்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள் என்று கூறினோம்.

இப்படி எம்மிடம் பேசிக் கொண்டிருந்தவர் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர். தமிழ் வைத்தியர் சாகாக்கலையைக் கற்றிருக்கின்றேன் காயகல்ப சித்தியைக் கற்றிருக்கின்றேன் என்று கூறினார்.

இன்று விஞ்ஞானிகள் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்” என்ற நிலை கொண்டு உணர்வின் இயக்கங்கள் எப்படி என்று கண்டறிந்துள்ளனர்.

1.ஒரு உணர்வுடன் மற்றொரு உணர்வை மோதச் செய்து
2.அதனில் உணர்வுகள் விரிவடைவதைக் காண்கின்றனர்.
3.கெமிக்கல் (இரசாயணம்) கலந்து ஒரு தக்டை வைத்து
4.எலெக்ட்ரிக்கைப் பயன்படுத்தி அதனில் உள்ள காந்தப் புலன்களைத் தட்டிவிடுவது.

நாம் இரண்டு கல்லை உரசினால்… “ஒளி” வருகிறதல்லவா.

இதைப் போன்று உராய்ந்த உணர்வுகள் அழுத்தமான பின் ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும். இதனின் உணர்வின் அழுத்தம் எதுவோ அழுத்தத்தின் வேகத்திற்குத்தக்க எழுத்து வடிவமோ உருவமோ உணர்வின் தன்மையோ உருவாக்கிக் காட்டுகின்றது.

இது மனிதனின் சிந்தனையில் உருவானது.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையைக் கண்டறிந்த பின் அதன் உணர்வுகள் கொண்டு “மனிதரைப் போன்று வேலை செய்ய முடியும்” என்று காண்பிக்கின்றனர்.

ஒரு நொடிக்குள் உணர்வின் தன்மையினைக் கணக்கிடுகின்றனர். இதன் தொடர் கொண்டு நாம் எப்படி நுகர வேண்டும் எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் இயந்திர நிலைகளைக் கூட்டிக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் காயகல்ப சித்தி சாகாக்கலை என்ற நிலையில் எண்ணிக் கொண்டுள்ளார்கள். 

சாகாக்கலை காயகல்ப சித்தி கற்றுக் கொண்டேன் என்னிடம் போகர் பேசுகின்றார் என்று சொல்பவர்களின் நிலை என்ன?

இவரைப் போன்றே ஒருவர் சாகாக்கலை என்ற தத்துவ உணர்வைப் படித்து மனதில் பதிய வைத்து தன்னுள் அந்த உணர்வை வளர்த்து அவர் இறந்திருப்பார்.

இவர்கள் இப்பொழுது புதிதாகச் சாகாக்கலைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டு “மீடியம் பவர்… 1..,2..,3…” என்று எடுத்து இறந்த ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு “போகரிடம் பேசுகின்றேன்…” என்று கூறுவார்கள்.

இவர் எப்படிப் பச்சிலைகளுக்கு அலைந்தாரோ கண்டாரோ இதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் இவருடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா இதே நிலை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்துவிடும்.

அதன் பிறகு புகுந்து கொண்ட உடலில் சாகாக்கலையாகச் செயல்படுத்திவிடும்.

இப்படிப் போகர் என்னிடம் பேசினார் என்று சொன்னால் இதைத் தேடிக் காசைச் சேர்க்கும் நிலைக்குத்தான் வருகின்றனர். உடலை வளர்க்கத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் போகர் இன்று இருக்கின்றாரா என்றால் இல்லை.

தன் உணர்வின் தன்மையை
1,தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும்
2.தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு
3.உயிருடன் தொடர்பு கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து,
4.உணர்வின் தன்மையைத் தன் சுழற்சிக்குள் இருக்கச் செய்தார்.

இதுதான் “காயகல்ப சித்து” என்பது.

இவ்வாறு தனக்குள் செய்து இந்தப் புவிக்குள் தோன்றும் உணர்வின் சத்தை எங்கிருந்தாலும் பழனி மலையில் ஒரு குகைக்குள் இருந்து கவர்ந்து, சுவாசித்தார்.

தான் சுவாசித்த நிலைகள் கொண்டு தனது இருப்பிடமான இந்தச் சரீரத்தில் இருந்தாலும் தன் எண்ணத்தை ஊடுருவச் செய்து எங்கெங்கு இருந்து நுகர்ந்தாரோ அங்கெல்லாம் ஒளியான உணர்வின் அணுக்களைப் படரச் செய்தார்.

தன் உயிராத்மாவைப் பிரபஞ்சம் முழுவதும் படரச் செய்து அவர் தம் உணர்வின் தன்மையை ஒளியாக்கிச் “சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக ஒளியின் சரீரமாக…” விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார். 

1.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த
2.போகமாமகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்தால்

3.”என்றும் அழியா ஒளிச் சரீரமாக” நாமும் வாழலாம்.