ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2017

குற்றவாளியைச் சட்டத்தின் மூலம் வாதாடிக் காக்கலாம் ஆனால் “வாதாடியவர்… தனக்குள் உள்ள நல்லதைக் காக்கத் தவறிவிடுவார்”

வக்கீல்கள் சட்டத்தைப் படிப்பார்கள். அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும்.

கால சூழ்நிலை சந்தர்ப்பம் எப்படி ஆனது? குற்றத்திலிருந்து இவனைப் பிரிப்பது எப்படி என்பது தான் வக்கீல்களின் வேலை.

நன்மை செய்பவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வினால் அந்த நூல்களைப் படித்து வந்தால் நன்மை செய்தவனையும் காக்கும். வக்கீலையும் காக்கும் நிலை வரும்.

ஆனால் குற்றம் செய்தோரை குற்றத்திலிருந்து மீட்டிடும் நிலையாகக் குற்றம் செய்தோருக்குச் சாதகமாகச் செயல்படும் பொழுது என்ன ஆகிறது?

அதற்காக வாதாடலாம். காசையும் பெறலாம். இதனின் செயலாக எவருக்குத் துன்பம் உருவாக்கினாரோ அது அவருக்குள் முழுமை அடைகின்றது.

குற்றம் செய்தோர் மகிழ்வர். ஆனால் நன்மை செய்தோர் சோர்வடைவர். அவரின் உணர்வு வக்கீலின் மீது பாயும். தீமை செய்யும் உணர்வுகள் இங்கே சேரும்.

பாதாம் பால் நல்லது தான். அதிலே தெரியாதபடி விஷம் பட்டுவிட்டால் அதைக் குடித்தால் நம்மை மடியச் செய்துவிடும்.

அதைப் போன்று தான் நல்ல மணம் கொண்டவன் வேதனைப்படுகின்றான். வேதனையான உணர்வுகளை நுகர்கின்றான். நல்ல மனம் விஷம் தோய்ந்து கெடுகின்றது.

எவரால் இத்தகைய நிலை வருகிறது என்று (வக்கீலையோ நீதிபதியையோ) உற்று நோக்குகின்றான். “அடப் பாவி எனக்குத் துரோகம் செய்தாய்..” என்று எண்ணுவான்.

அந்த உணர்வு இங்கே பதிவானபின் அது மீண்டும் நினைவுக்கு வரும். இங்கே பாதக நிலையை உருவாக்கும்.
1.தீமையுள்ளவனைச் சட்டங்கள் இயற்றிக் காக்கலாம்.
2.ஆனால் “இவனுக்குள் நல்லதைக் காக்கத் தவறிவிடுவான்”.

வக்கீல்களின் குடும்பங்களில் தீமையின் உணர்வு வந்து கஷ்டப்படுபவர்களைப் பார்க்கலாம். இவர் (வக்கீல்) சோர்வடையும் பொழுது இவருடைய பிள்ளைகள் இவரைத் தாக்கும் உணர்வுகள் வரும்.

அதே சமயத்தில் சுற்றியுள்ளவர்களையும் இவருக்கு எதிரி என்ற நிலையை உருவாக்கும். வாழ்க்கை குறுகிவிடும்.

“திறமை…” என்ற நிலைகள் கொண்டு தீமைகள் எப்படி என்று உணர்ந்து
1.தீமை உள்ளவரைத் தீமை இல்லாதவர் என்று வாதிட்டு
2.ஜெயிக்கின்றவர்களுக்கே நீதிபதி பதவி கிடைக்கின்றது.

நீதிபதி பதவி வரும் பொழுது இந்த உணர்வின் அனுபவம் பெற்ற பின் எதிர் வக்கீலின் உணர்வைக் கண்டபின் இந்த நுண்ணிய அறிவு கொண்டு “தர்மத்தின் எல்லையை வைத்தால்” நீதியைக் காக்க முடியும்.

நீதிபதியாக உள்ளவர்களோ இன்று பெரும்பகுதி செல்வத்திற்குத்தான் அடிமையாகின்றனர். அநீதியைத்தான் அவருக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றது.

ஆனால் அநீதியின் வழியில் செல்வம் தேடுவோர் குடும்பங்களில் மன நோய் அதிகரித்து நீதிபதியின் உடல் நலம் கெடும். அந்த உடல் மண்ணுக்குத்தான் செல்கிறது.

இந்த உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடினார். செல்வம் வந்தாலும் அந்தச் செல்வத்தால் எதிரியின் உணர்வுகளே அதிகரித்துவிடுகின்றது.

சேர்த்துக் கொண்ட உணர்வுகள் மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்து சிந்தனையற்ற செயலின் தன்மை உருவான பின் இந்த உயிர் “நீ இதை அனுபவி…” என்று மாற்று உடலில் செலுத்திவிடுகின்றது.

இதை எல்லாம் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இன்று நாம் சாப்பிடும் உணவில் அரிசியும் பருப்பும் கலந்து உணவை உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. ஆனால் அதிலே பருப்புடன் அரிசிக்குப் பதிலாக சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் சேர்த்துச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

உணவிலே சுவையைக் கூட்ட குழம்பு எல்லாவற்றையும் இணைத்துச் சாப்பிடுகின்றோம். ஆனால் அரிசி கம்பு சோளம் எல்லாவற்றையும் இணைத்துச் சாப்பிட்டால் சுவை வருமோ?

ஒன்று சீக்கிரம் வேகும். ஒன்று காலதாமதமாகும். எல்லாவற்றையும் கலந்துவிட்டு “நான் ருசியாக்கிவிடுவேன்…” என்று சொன்னால் ருசியாகுமா? பகுதி வெந்திருக்கும் பகுதி வேகாதிருக்கும்.

சமைக்கும் பக்குவம் அறிந்து சமைத்தால் தான் ருசி வரும். வாழ்க்கையில் நாம் வழி அறிந்து செயல்படுதல் வேண்டும்.

ஆகவே இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றோம் என்றால் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பொக்கிஷமாக உங்களுக்குள் படைக்கின்றோம். இதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அரும்பெரும் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும். காலம் வரும் பொழுது இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

செல்வத்தைத் தேடி வைத்திருந்தால் நோய் என்று வரும் பொழுது நோயைச் சீக்கிரம் விரட்டிவிடலாம். ஆனால் செல்வம் இருக்கும்போது தாரளமாகச் செலவழித்துவிட்டால் நோய் வந்தால் என்ன செய்வது?

செல்வத்தைத் தேட வேண்டும் என்று பிறரை இம்சித்து அந்தச் செல்வத்தைத் தேடினாலும் செல்வத்தை எடுத்துச் சுவைக்கும் தன்மையும் இழந்துவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் சிந்தனை செய்தல் வேண்டும். இந்த மனித வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் ஒளி கொண்டு நம் உடலை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

செல்வத்தைக் கொண்டு பல நறுமணங்களைப் பூசி என் உடல் சுத்தமாக இருக்கிறது என்றால் அது பிறருக்குத்தான் மணமாகும். நம் உடலுக்குள் “இருள்..” என்ற உணர்வு நோயாகும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானித்து என்றுமே அந்தப் பேரருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.

துரித நிலைகள் கொண்டு உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றோம்.