ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2017

“அறிதல்…” என்ற நிலையில் சிலர் மற்றவர்களின் துயரங்களையெல்லாம் சொல்லி அவர்களுக்கு “நல்லது செய்கிறேன்” என்பார்கள் – அதனின் பின் விளைவுகள் என்ன ஆகும்?

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

அத்தகைய நிலைகள் சென்றால் ஒரு மனிதனுக்குள் விளைவைத்த “தீமையின் உணர்வும்…” நமக்குள் வந்து சேரும்.

சாதாரணமாக உங்கள் உடலிலிருந்து பல உணர்வுகள் வெளிப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களைச் சந்தித்தவுடனே உங்கள் உணர்வின் தன்மை அனைத்துமே நான் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களை அனுபவித்தீர்களோ
1.அந்த உணர்வை இழுத்து
2.அதை நான் சுவாசித்துத்தான்
3.உங்கள் நிலையைச் சொல்ல முடியும்.

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்று கூடச் சொல்லலாம். திடீரென்று எதிர்ப்பார்க்காதபடி ஒருவர் விபத்துக்குள்ளாகிவிட்டால் அந்தப் பரிவான குணம் கொண்டு பார்க்கும்போது
1.பயம் கலந்த நிலைகளில் ஈர்த்துவிட்டால்
2.நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும்
3.அது நுகரப்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி மயக்கமடையச் செய்யும்.

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான் அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

சிலர் இதே மாதிரி “ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்
1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே
2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே
3.இவர் நினைக்கும் பொழுது  வந்துவிடுகின்றது.

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.

காரணம் சாதாரண மனிதனின் எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய் ஞானிகளின் அருள் அருகில் போனால் என்ன செய்யும்?

மெய் ஞானிகள் தீமைகளை மாய்க்கும் கடும் அக்கினி சக்தி பெற்றவர்கள். அந்த நெருப்புக்கு அருகில் சென்றால் சுட்டுப் பொசுக்கிவிடும். நம் உணர்வுகளைக் கருக்கிவிடும். ஞானிகள் அருள் மிக்க ஆற்றல் பெற்றவர்கள்.

நம் எண்ணத்தால் சாதாரணமாக அவர்களைக் கவர வேண்டும் என்றால் நடக்காது. அந்தச் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
1.அவர்களின் உணர்வை நமக்குள் பதிவாக்கி இருக்க வேண்டும்.
2.பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணிலிருந்து அதைப் பெறவேண்டும் என்றால் கவர முடியும்.

அதைப் பதிவாக்கும் நிலைக்கே பல கோணங்களிலும் உங்களுக்குள் இணை சேர்த்துக் கொண்டு வருகின்றோம்.

அதன் வழி சென்றால் நீங்கள் மெய்ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம். மெய் ஞானிகளின் உணர்வைச் சேர்க்கும் நேரமெல்லாம் உங்களுக்கு நல்ல நேரமாக மாறும்.
1.உங்கள் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
2.யாரிடமும் நீங்கள் சென்று ஆலோசனை கேட்க வேண்டியதில்லை.