நீங்களெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக
இருப்பதுதான் எமது குறிக்கோளே தவிர பிறர் மாதிரி என்னை நீங்கள் கௌரவமாக மதித்துப்
போற்ற வேண்டுமென்பதல்ல.
எப்பொழுது நீங்கள் சந்தோஷமாகச்
சொல்கிறீர்களோ அதுதான் எமக்கு மகிழ்ச்சி. எம்மைக் கண்டவுடன் “அப்படி இருக்கிறது…
இப்படி இருக்கிறது” என்று பெருமை பேசுவதற்கு அல்ல.
நாளை அதே நிலையை எதிர்ப்பார்த்து
இருந்து “அது இல்லை” என்று சொன்னால் பெருமை ஒரு நொடிக்குள் போய்விடும்.
எமக்குள் இருக்கக்கூடிய பெருமை
எப்பொழுதுமே நீங்கள் எல்லாம் மகிழ்ந்து,
1.நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
2.மகிழ்ச்சியான நிலையில் தொழில்
செய்கிறோம்
3.மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறோம்
என்று சொல்வதுதான் அது ஒரு பெருமை.
அந்தப் பெருமையைத்தான் நான்
எதிர்ப்பார்க்கிறேனே தவிர எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல. உங்களில்
தவறிருந்தால் அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.
அதற்காக வேண்டித் தவறை வளர்க்கச்
சென்றால் அப்பொழுது நான் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம்.
எப்படி இருந்தால் என்ன? நீங்கள் எம்மை மதித்தால் போதும் என்ற இந்த மதிப்பு அல்ல.
1.நீங்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியான
நிலைகளில் இருக்கிறீர்கள் என்றால்
2.அது தான் எமக்குப் பெருமையும்
புகழுமே தவிர வேறொன்றுமில்லை.
3.இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்
கொள்ளுங்கள்.
எல்லோரையும் போல உங்களிடம்
மகிழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறோம். குருநாதர் இப்படி இருக்கிறார்… அப்படி
இருக்கிறார்.. என்று புகழ்ந்து பேசி அந்தப் புகழ்ச்சியினுடைய மறைவில் அது ஒரு
நிமிடம் கூட நிற்காது.
“அதை யாம் எதிர்ப்பார்க்கவே இல்லை”.
யாம் உங்களுடன் ஒட்டி சாதாரண
நிலைகளில் யாம் வந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அதைப் பயன்படுத்திக்
கொள்ளுங்கள். சகஜமான நிலைகளில் யாம் தாய்ப் பாசத்துடன் வருகிறோம்.
1.உங்களைத் தாயாக எண்ணி
2.நான் குழந்தையினுடைய பாசத்தில்
இப்படி அணுகி வருகிறோம்.
3.ஆனால் செயலாக்கும் பொழுது தாயாக
இருக்கிறோம்.
1.குழந்தை திட்டிவிட்டால் தாய் என்ன
செய்யும்? அந்த இடத்தில் “தாயாக” இருக்கிறோம்.
2.நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
அந்த இடத்தில் “குழந்தையாக” அணுகி வருகிறோம்.
குழந்தையாக எண்ணி உங்களை உயர்த்திப்
பார்க்கும் பொழுது மகிழ்ச்சியை அங்கே ஊட்ட வேண்டும்.
இந்த இரண்டு நிலைகளைத்தான் குருநாதர்
சொன்னார். மனிதனுடைய வாழ்க்கையில் நாம் இதைச் செய்ய வேண்டும். அதைத்தான்
செயல்படுத்துகிறோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்
ஏழ்மையாக இருந்து பைத்தியமாக இருந்து எல்லா நிலைகளையும் சுட்டிக்காட்டி உலகம்
எப்படி இருக்கிறது என்று உணர்த்தினார்.
குப்பையிலிருந்துதான் மரம் சத்து
எடுக்கிறது, அதைப் போல குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து சத்தான எண்ணங்களைக்
கூட்டுவோம்.
1.நீ சரீரத்தைக் குப்பையாக
எண்ணினாலும்
2.உனக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல
எண்ணத்தை அந்த வைரத்தை
3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச்
செய் அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.
ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ
துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள்
இருக்கிறது. அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க
வேண்டும்.
ஆகவே “அவர்களிடமிருந்து நீ
மகிழ்ச்சியை எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்” என்ற நிலைகளை
குருநாதர் எமக்குச் சொன்னார்.
“நீங்கள் மகிழும் பொழுதுதான்” யாம்
சொர்க்கத்தைக் காண்கிறோம்.