ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2017

நீங்கள் ஒவ்வொருவருமே மெய் ஞானியாக ஆக முடியும் - ஒன்றும் சிரமமில்லை “எளிதானது தான்”

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் அதன் பின் வந்த பல ஞானிகள் வெளிப்படுத்திய பேருண்மைகளையும் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

அத்தகைய மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை எல்லாம்
1.”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால் இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்.
2.அதற்குண்டான மெய் உணர்வைப் பெறவும் செய்யலாம்.

ஆனால் பெரும்பகுதியானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? என்ன சொல்கிறார்கள்?

நான் எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கின்றேன்.. அறிந்திருக்கின்றேன்… எல்லாம் செய்திருக்கின்றேன். ஆனால் இவர் சொல்லும் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

1.படித்த என்னாலேயே இதைப் பின்பற்ற (FOLLOW) முடியவில்லையே…!
2.சாதாரணமானவர்கள் எப்படிப் பின்பற்ற முடியும்…! எப்படிப் புரிந்து கொள்ள முடியும்...! என்று முடித்துக் கொள்கிறார்கள்.
3.பிறரை எண்ணி இப்படித் தன்னைத் தாழ்த்திக் கொள்வோர் உண்டு.

சிறிய குழந்தைகளைப் பாருங்கள். பள்ளிக்கே சென்றிருக்காது. ஒரு டி.வி முன்பாக உட்கார வைத்துவிடுங்கள்.

ஒரு மூன்று அல்லது நான்கு வயது உள்ள குழந்தைகள் அதைக் கூர்ந்து கவனிக்கட்டும். டி.வி.யில் பாடும் பாட்டையெல்லாம் அந்தக் குழந்தை பாட ஆரம்பிக்கும். அதில் ஆடிய ஆட்டமெல்லாம் ஆட ஆரம்பிக்கும்.

நீங்கள் அந்த மாதிரி ஆடிக் காட்டவும் பாடிக் காட்டவும் முடியுமோ...!

ஏனென்றால் அந்தக் குழந்தை
1.கூர்மையாகக் கவனித்தது.
2.அந்த உணர்வுகள் அதற்குள் பதிவாகின்றது.
3.அதையே மீண்டும் செயலாக்குகின்றது.

அதைப் பார்த்துவிட்டு நாம் என்ன சொல்வோம்?

என் குழந்தையைப் பாருங்கள்…! டி,வி.யைப் பார்த்துவிட்டு அப்படியே… பாடுகின்றது… ஆடுகின்றது…! என்று நாம் புகழ் பாடுவோம். நம்மால் அது முடியுமா என்றால் முடியாது.

குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அது அங்கே இயக்குகின்றது.

“குழந்தைப் பருவம்” மாதிரித் தான் நாமும் இந்த அருள் வழியில் இப்பொழுது செல்கிறோம்.

ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அவர்கள் (ஞானிகள்) செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்வோம். 
2.அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கூர்மையாகப் பதிவாக்கினால் அது வரும்.

பதிவாக்காதபடி மற்றவர்களை எண்ணினால் என்ன ஆகின்றது?

அதை விட்டுவிட்டு “எங்கே நாம்…! எத்தனையோ புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்… அதில் உள்ளதை ஒன்றும் இவர் சொல்லவில்லை… இவர் (என்னமோ) புதிதாகச் சொல்கிறார்…!

நம்மால் ஒன்றும் பின்பற்ற முடியவில்லையே என்று இப்படித்தான் எண்ணிப் போய்விடுகின்றார்கள். இப்படிப் பெரும்பகுதியானவர்கள் தன்னைத்தான் தாழ்த்திடும் நிலையே தான் வளர்கின்றது.

நான் எதை எதையெல்லாம் எனக்குள் பதிவு செய்திருக்கின்றேனோ அதன் வழி தான் என் உணர்வுகள் செல்லும். அந்த உணர்வுகள் அதிகமாக எனக்குள் சேர்ந்துவிட்டது என்றால் அதனின் வழிக்கே தான் என்னை இழுத்துக் கொண்டு போகும்.

அதன் உணர்வுகளைக் காலி செய்து தான் பார்க்க முடியுமே தவிர ஆனால் காலி செய்தே பார்த்தாலும் கூட படித்தவர்களுக்கெல்லாம் அது தான் முன்னாடி நிற்கும்.

இவர் சொல்வதை எல்லாம் “அதை எப்படிப் பார்ப்பது?” என்ற எண்ணம் தான் வரும்?

பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகள் ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்புக்குச் செல்லுகின்றது. அப்பொழுது ஒன்றாம் வகுப்பில் படித்த பாடம் மாதிரி இது இல்லையே. இது அதைவிடப் பெரிதாக இருக்கின்றதே என்று எண்ணினால் எப்படிப் படிக்க முடியும்?ஆனால்
1.நாம் படிப்படியாகப் படித்துத்தான் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.
2.விஞ்ஞானியாக ஆனதும் அப்படித்தானே.
3.அந்த நிலையே வருவதில்லை.
4.தானும் பெறாதபடி மற்றவர்களையும் பெறவிடாது செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
5.இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்.

உங்கள் உயிர் கடவுள். உடல் ஆலயம். எண்ணும் எண்ணமே இறைவன்.

எதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை அணுவாக உருவாக்கும் கருவாக ஆக்கி உடலாக்கிக் கொண்டேயிருப்பதும் அதற்கு வேண்டிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து உணவாக எடுத்துக் கொடுத்து (சுவாசிக்கச் செய்து) வளர்க்கச் செய்வதும் தான் நம் உயிரின் வேலை.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பெறவேண்டும் என்ற ஆசையில் யாம் உபதேசிப்பதைப் பதிவாக்கினால் அதை உங்கள் உயிர் உங்களுக்குள் உருவாக்கும். நீங்களும் அருள் ஞானி ஆக முடியும்.

இதில் ஒன்றும் சிரமமில்லை.