Thursday, August 3, 2017

உடல்களைப் பாதுகாக்கத்தான் இன்றைய “விஞ்ஞானம்” முயல்கிறது ஆனால் உயிராத்மாவை ஒளியாக மாற்றச் செய்வது “மெய்ஞானம்”

தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும் ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவரைப் பார்க்கின்றீர்கள்.

அப்பொழுது உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன் உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் அது கலக்கின்றது.

சுவாசம் உயிரில் உராய்வதனால் ஆத்திர உணர்வின் எண்ணம் இயக்கி உங்களையறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும் சுவை குன்றியே இருக்கும்.

அதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது. உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால், இரவில் உறங்கும் பொழுது இரத்தம் தசைகளாக மாறும் சமயம் உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து, அதனால் நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

காற்றில் மிதந்து வந்த வேண்டாத வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து நெல்லிற்கு இட்ட உரத்தைக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லை என்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல்வலி தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.

அதனால் உடல் சோர்ந்து எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன.

நீங்கள் உலக நிலைகளை அறிந்துகொள்ளும் வண்ணம் டி.வி., பத்திரிக்கைகளைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்தனர். வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்தினர். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள் என்று பத்திரிக்கையில் படிக்க நேர்கின்றது.

அப்பொழுது உங்களையறியாது பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன.

அன்று இரவு நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும் வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும்
1.எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன்
2..உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு
3.உடல் சிலிர்த்து பய உணர்வலைகளைச் சுவாசித்து
4.மேலும் மேலும் பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.

இது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம் தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

தெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால் “ஆ…” என்று பயப்படுகின்றோம்.

திடீரென்று பார்க்கும்போது கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாக சுவாசித்துத் துரிதமாக இயங்குகின்றது.

அப்பொழுது உடல் நடுக்கமாகி உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேர்கின்றது.

ஆக பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு ஆத்திரத்துடன் பேசுவதும் அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன.

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள்.. உங்களைப் பார்த்து…, “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியது”, என்று ஆறுதல் கூறுவார்கள்.

ஆனால் நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன.

வயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து பயிராக முளைத்து வரும் நிலையில் எங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.

நீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்
1.இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்
2.தசைகளில் பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று
3.அதன் இயக்கத்தால் தசைகளில் அமிலங்கள் சுரந்து
4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு நரம்புகள் இயங்குவதால்
5.நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு
6.எலும்பினுள் “ஊனாக”வடித்துக் கொள்கின்றன.
7.இந்த ஊனைத்தான் ஞானிகள் “ஊழ்வினை”என்று பெயர் வைத்தார்கள்.

அவ்வாறு ஊனாக வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால் உடல் காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

உங்கள் உடல் ஈர்க்கும் அந்த உணர்வுகளை நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால் பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று  நோய்களாக உருப் பெறுகின்றது.

இரத்தக் கொதிப்பு தசைவாதம் குடல்வாதம் பக்கவாதம் கீல் வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

நோய்கள் உருப்பெற்று அதில் விளைந்த  நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும் உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டுப் உயிராத்மா பிரிந்து செல்கின்றது.

இவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

உடல்களில் பதிவாகி “உருப்பெற்ற நோய்களைத்தான்” விஞ்ஞானிகளால் போக்க முடியும்.

ஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்,
2.உணர்வுகளின் அணுசிசுக்களை மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர
1.அவர்களின் உடலை இயக்கும் உயிராத்மாவை
2.”ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்” விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள் மகரிஷிகள் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் பேராற்றல்களின் உணர்வலைகளின் உண்மைகளைக் கண்டறிந்து  அந்தப் பேராற்றல்களின் உணர்வலைகளைத் தங்கள் உடல்களில் சேர்த்து வளர்த்துக் கொண்டனர்.

அதனால் சந்தர்ப்பவசத்தால் தங்களுக்குள் வந்த தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளை மாய்த்துவிடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அந்த மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று
1.உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று
2.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற வேண்டுகின்றோம்.