வாழ்க்கையில் நல்லதையே செய்து கொண்டு எவருக்கும் தீங்கு
செய்யாமல் இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் எதிர்பாராது பயந்து விடுகிறோம்.
அச்சமயம் பய உணர்வலைகள் நம் உடலில் சேர்ந்து விடுகின்றது.
நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை வேதனையுடன்
சொல்லுகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் வேதனையுடன் சொன்ன உணர்வலைகள்
நம் உடலில் சேர்ந்து, நம்மையும் வேதனைப்படச் செய்துவிடுகின்றது. இவ்வாறு
1.நம் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே
2.பல துன்பங்கள் பலவித வேதனை உணர்வுகள் நம்மையறியாது சூழ்ந்து
கொண்டு
3.மன அமைதியைக் குலைக்கின்றது நோயை உருவாக்குகின்றது.
ஆகவே துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் துன்ப உணர்வுகளைப்
போக்கவே ஞானிகள் அன்று ஆலயங்களை அமைத்தார்கள்.
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் முதலில் விநாயகர் கோவிலுக்குச்
சென்று விநாயகரைப் பார்த்து ஓம் ஈஸ்வரா’ என்று உயிரை நினைத்து வணங்க வேண்டும்.
பின் வானை நோக்கிப் பார்த்து இவற்றையெல்லாம் அருளிய, மகரிஷிகளின்
அருளாசியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கவேண்டும்.
பின் கண்களை மூடி துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள்
ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வுடன் உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்.
கண்களைத் திறந்து, தீப ஆராதனை காட்டும் பொழுது கண்களைத்
திறந்து வழியறிந்து செயல்படும் ஞான நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும்.
அங்கிருக்கும் மலரைப் பார்த்து மலரின் நறுமணம் நாங்கள்
பெற அருள்வாய் ஈஸ்வரா என்றும் கனிகளைப் பார்த்து இக்கனிகளின் சுவை போன்று எங்கள் சொல்லும்
செயலும் சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா என்றும் எண்ணி ஏங்கவேண்டும்.
பின் இங்கு வருபவர் அனைவரும் மகரிஷிகளின் அருளாசி பெறவேண்டும்.
அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும்.
கோவிலுக்குச் செல்லும் பொழுது முதலில் விநாயகர் ஆலயத்திற்குச்
சென்று மேலே குறிப்பிட்டவாறு தியானிக்க வேண்டும். அடுத்து உள்ளே செல்லும் பொழுது,
1.கோபுர வாயிலுக்கு முன் வந்தவுடன்… “கோபுரத்தைப் பார்த்து”
2.என்னில் “உயர்வான எண்ணம்” பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கவேண்டும்.
பின் இதே உணர்வுடன் யாருடனும் பேசாமல் பிரகாரத்தைச் சுற்றி
வலம் வந்து சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் கொடிக்கம்பம் அல்லது தூபஸ்தூபி இருக்கும்
இடத்தில் ஒரு நிமிடம் நின்று “சன்னதியை” நேராகப் பார்க்க வேண்டும்.
இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற ஏக்க
உணர்வுடன் உங்கள் உயிரை நினைத்து வானை நோக்கிப் பார்க்கவேண்டும்.
வானை நோக்கிப் பார்க்கும் பொழுது இந்தத் தெய்வ குணத்தை
அருளிய துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன்
ஏங்கியவாறே கண்களை மூடி அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஒரு நிமிடம் தியானித்துவிட்டுக்
கண்களைத் திறந்து ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.
பிரகாரம் வலம் வரும் பொழுது இந்தத் தெய்வ குணமாக எங்கள்
சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் வலம் வந்து மூலஸ்தானம் வந்தவுடன்
“இதே உணர்வுடன் மூலவரைப் பார்த்துக் கொண்டிருங்கள்”.
தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது வழியறிந்து செயல்படும்
இந்த “ஜோதி நிலை” பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வுடன்
பாருங்கள்.
அப்போது மூலவருக்குச் சாத்தப்பட்டுள்ள மலர் அலங்காரம் தெரியும்
அச்சமயம் இந்த மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் ஏங்குங்கள்.
அங்கே படைத்துள்ள கனிகள் நமக்குத் தெரியும். அப்பொழுது
அந்தக் கனிகளைப் பார்க்கும் பொழுது, கனிகளின் சுவையைப் போன்று எங்கள் சொல்லும் செயலும்,
சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் எண்ணி ஏங்கி ஒரு நிமிடம் கண்களை மூடித் தியானியுங்கள்.
தெய்வச் சிலையைப் பார்க்கும்போது “இந்தத் தெய்வ நிலை” நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு நிமிடம் உடல்
முழுவதும் செலுத்த வேண்டும்.
இங்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ நிலை பெறவேண்டும்
ஈஸ்வரா என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
சன்னதியில் இருந்து வெளியில் வந்தபின் ஆலயத்தில் அமைதியான
இடத்தைப் பார்த்து ஓரமாக அமர்ந்து கொண்டு மேற்குறிப்பிட்டவாறு ஐந்து நிமிடம் கண்களை
மூடித் தியானிக்க வேண்டும்.
பின் கண்களைத் திறந்து இந்த ஆலயத்திற்கு வரும் மனிதர்களின்
உடல்களை ஆலயமாக எண்ணி அந்த உடல்களை இயக்கி ஆண்டு கொண்டிருக்கும் உயிரைக் கடவுளாக எண்ணி
1.இங்கு அருள் பெற வரும் உயிராத்மாக்கள் அனைவரும்
2.துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று
3.எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை
ஆலயங்களில் படரச் செய்யுங்கள்.
இந்த முறைப்படி ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு தியானிப்பதால்
ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்த அருள் சக்திகள் உங்கள் ஆத்மாவில் சேருகின்றன. அதனால் உங்கள்
ஆத்மா தெய்வ நிலை பெறுகின்றது.
நீங்கள் ஆலயத்தில் பத்து நிமிடம் தியானத்தில் அமர்ந்து
ஆலயத்திற்கு வரும் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வுடன்
படரச் செய்த மூச்சலைகளால் ஆலயத்திற்கு வரும் அனைவரும் அவர்கள் வாழ்வில் நலமும் வளமும்
பெற உதவி செய்தவர்களாவீர்கள்.
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்து வீட்டு முற்றத்தில் அமர்ந்து
நம் குடும்பத்தில் அனைவரும் தெய்வ குணம் பெறவேண்டும். நம்மிடம் வியாபார நிமித்தம் வருபவர்கள்
நலமும் வளமும் பெறவேண்டும். நாம் தொழில் செய்யும் இடங்கள் செழித்தோங்க வேண்டும் ஈஸ்வரா
என்று ஐந்து நிமிடம் தியானியுங்கள்.
தியானித்துவிட்டு கோவிலிலிருந்து கொண்டு வந்த திருநீறு
மலர்களை நீருள்ள சொம்பில் போட்டு மேற்கூறிய உணர்வுடன் அந்த நீரை “வீட்டில் உள்ள அனைத்து
இடங்களிலும் தெளித்துவிடுங்கள்”.
இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள தீய உணர்வலைகள் மறைந்து
நல்ல உணர்வலைகள் படரும்.
1.வீடு கோவிலாகிறது.
2.உங்கள் எண்ணம் தெய்வமாகின்றது.
3.உங்கள் உயிர் கடவுளாகிறது.