நீங்கள் எல்லோரும் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இருக்கும்
பொழுது
1.என்னைத் தாழ்த்தி
2.உங்களை உயர்த்துகின்றேன்.
ஆனால் நான் உங்களைத் தாழ்த்தி என்னை உயர்ந்தவனாகக் காட்டினேன்
என்றால் அகந்தை என்ற நிலை வரும். நான் என்ற ஆணவம் வந்தால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று குருநாதர்
தெளிவாக எமக்குக் காட்டினார்.
நாம் அனைவரும் குரு வழியில் சென்று நான் என்ற அகந்தை விடுத்து
1.அருள் உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்றும்
2.அனைவருடைய உயிரும் கடவுள் என்றும்
3.அந்த உடல்கள் அனைத்தும் ஆலயம் என்றும் நாம் மதித்து வாழ்தல்
வேண்டும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் வழி நடத்திச் செல்லப்படும்
பொழுது என்னைப் போற்றுவோர் பலர். சிலர் தூற்றவும் செய்வர்.
போற்றுவோரைக் கண்டு நான் அவருக்காக அதிகமாகச் செய்வதும்
தூற்றுவோரைக் கண்டால் வெறுப்படைவதும் அல்ல.
“போற்றுவதும் தூற்றுவதும் சமமே”.
போற்றலுக்குரிய நிலைகளை ஒருவரிடமிருந்து கேட்டபின் அவர்
உடலிலிருந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் பெறப்படும் பொழுது நான் கவலைப்படும் பொழுது
அந்தப் போற்றும் உணர்வுகள் எனக்குள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறும்.
ஆனால் என்னை ஒருவன் தூற்றிவிட்டான் என்ற உணர்வைச் சேர்த்து
விட்டால் என் உடலுக்குள் தூற்றும் உணர்ச்சிகள் அதிகமாகி நான் நல்லதைச் செய்யும் உணர்வுகள்
செயலிழக்கப்படும்.
இதைப் போன்ற நிலைகளில் குருநாதர் கொடுத்த அந்தப் பக்குவ
நிலைகளில் தான் நான் வழி நடத்திச் செல்கின்றேன்.
இன்றைய விஞ்ஞான உலகை வெல்லும் அஞ்ஞான வாழ்க்கையை அகற்றி
மெய்ஞான உணர்வுடன் ஒன்றி மெய்ஞான உலகுடன் உங்களை ஒன்றச் செய்து இனி பிறவியில்லா நிலை
என்ற நிலையை அடையச் செய்வதற்கே இதைச் சொல்கின்றேன்.
“ஏன்…?” என்று கேட்கலாம்.
நீங்கள் தான் அந்தப் பக்குவ நிலை பெற்றுவிட்டீர்கள் அல்லவா…!
நீங்கள் ஏன் எங்களுக்குச் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும் என்று…! கேட்கலாம்.
“நீங்கள் எல்லாம் உயர வேண்டும்” என்பதற்குத்தான் சொல்கிறேன்.
ஒரு நெல்லை எடுத்து விதைத்தோம் என்றால் அந்த நெல் (விதை)
அழிந்துவிடுகின்றது. அதன் சத்தை எடுத்துத் தன் இனத்தை அங்கே பெருக்குகின்றது.
நெல் (விதை) அழிந்துவிட்டது என்றால் உனக்கு எப்படிக் கிடைக்கும்?
என்று சொன்னால் முடியுமோ…!
அந்த விதையைப் பக்குவப்படுத்தும் பொழுது தான் மீண்டும்
பல நெல்லாக விளைகின்றது.
வித்துக்களை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்துகள் மறைந்து
விடுகின்றது. அதனின் சத்துகளை எடுத்துத் தன் இனத்தை வளர்க்கச் செய்கின்றது.
நெல்லை விளைய வைத்த பின் மகசூல் கொடுக்கின்றது. குவிந்த
பின் அனைவரும் சாப்பிடுகின்றனர்.
இதைப் போலத்தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கச்
செய்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்குள் அருள் ஞானம் விளைந்த பின்
1.எனக்கும் உயர்ந்த ஆகாரம் கிடைக்கின்றது.
2.உங்களுடன் பழகியவர்களுக்கும் அருள் ஞானம் கிடைக்கின்றது.
3.அருள் வழி அருள் ஞான வித்துகள் அங்கே வளரத் தொடங்கும்
சக்தி கிடைக்கின்றது.
நாம் அனைவரும் அருள் ஞானத்தைப் பெருக்கி இந்த உணர்வின்
சொல்லாக வரும் பொழுது அருள் ஞான வித்துக்களாகப் படர்கின்றது.
கேட்போர் உணர்வுகள் அனைத்திலும் பதிவாகின்றது. அதை நினைவு
கொள்ளும் பொழுது வளர்க்க முடிகின்றது.
கேட்ட பின் அதனுடைய நிலைகள் அவ்வளவு தான்…, “கேட்டது போதும்…!”
என்று இதைப் போற்றித் துதித்துவிட்டுச் சென்றால் ஞானத்தை வளர்க்க முடியாது என்பதைத்
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.