இந்த அருள் ஞானச்சக்கரத்தைப்
பார்த்தீர்கள் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள் இதிலிருந்து
வரும்.
1.நாளுக்கு நாள் அது வளர
ஆரம்பிக்கும்.
2.உங்கள் உணர்வுகளில் ஒரு தெளிவான
மணம் கிடைக்கும்.
இதனுடைய வரிசையில் வரப்படும் பொழுது
சில சமயங்களிலே பிரபஞ்சங்களும் தெரியலாம். “அந்த மகரிஷிகள் யார்?” என்ற நிலைகளும்
உங்களுக்குத் தெரியவரும்.
தெரிய வரும் என்று சொன்னவுடன்
“தெரியவில்லையே…!” என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள்.
நாம் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வை
மட்டும் செலுத்திக் கொண்டு வந்தால் போதும். ஏனெனில் அந்த உணர்வு உங்களுக்குள்
வளர்ச்சியாகும்.
ஒரு செடியை வைத்துவிட்டு உடனே பூ
பூக்கவில்லை… காய் காய்க்கவில்லை… என்றால் முடியுமோ?
எத்தனையோ ஆண்டுகள் பல உடல்கள் பெற்று
இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.
அந்த நினைவின் ஆற்றலும் ஈர்ப்பும்
வருவதற்காகவே இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது மூன்று வருடமாக பூஜை அறையிலே
வைத்து அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.
எங்கே போக வேண்டும் என்றாலும் கொஞ்ச
நேரம் சக்கரத்தின் முன் நின்று சக்கரத்தைப் பார்த்து…. “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை
எண்ணித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர
வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை
பண்ணிக் கொள்ளுங்கள்.
எங்கள் சொல்லும் செயலும் புனிதம்
பெறவேண்டும். எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மை பெறக் கூடிய சக்தியாக
வளரவேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று
எண்ணுங்கள்.
குழந்தைகளுக்கு நன்றாகப் படிப்பு
வரவேண்டும். நல்ல ஞாபக சக்தி வரவேண்டும் என்று எண்ண வேண்டும். குடும்பத்திலுள்ளோர்
அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று உடல் நலம் பெறவேண்டும்
என்று எண்ணுங்கள்.
தொழிலுக்குப் போகும் பொழுது என்
தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று
எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.
அந்தச் சக்கரத்தின் முன்னால்
தியானிப்பதற்குச் சௌகரியப்படும் இடத்தில் சக்கரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
உடகார்ந்து பார்ப்பதற்கோ நின்று பார்ப்பதற்கோ தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.
அதைப் பார்த்துவிட்டு உங்கள்
காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று இந்த உணர்வை மீண்டும் மீண்டும் வலுப் பெறச்
செய்து கொள்ளுங்கள்.
1.மன உறுதி கிடைக்கும்.
2.உங்கள் சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு
மகிழ்ச்சியை ஊட்டும்.
ஆகையினால் நம் குழந்தைகளும், இந்த
மாதிரிச் செய்து அதைக் கட்டாயாமாக்கிப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
இந்தச் சக்திகளை நீங்கள் அனைவரும்
பெற்று மகிழ்ந்து வாழ்ந்து பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து பேரின்பப் பெருவாழ்வு
வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.