இரக்க உணர்வு கொண்ட நிலைகளில் நமது ஆவலாலும்
ஆசையாலும் நல்லது செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.
அப்படி இந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்கவேண்டும்
என்ற நல்ல உணர்வு கொண்டவர்களுக்கு என்ன ஆகின்றது? தீமைகளிலிருந்து காத்துவிட்டாலும்
தீமையைத் தீமை என்று நுகர்ந்தோம் அல்லவா…, அப்பொழுது அந்தத்
1.(பிறிதொரு) தீய உணர்வுகள் அவர்கள் உடலுக்குள் சேர்ந்துவிடுகின்றது
2.அதே உணர்வுகள் மீண்டும் அவர் ஆன்மாவாக மாறிவிடுகிறது
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அவரின் உயிரான ஈசனுக்கு அவர்களையறியாமலேயே
5.தீய உணர்வுகளை அபிஷேகிக்கின்றனர்.
சுடு தண்ணீரை நம் மேலே ஊற்றினால் எப்படி இருக்கும்? மிளகாயைப்
போட்டு நீரில் காய்ச்சி அதைக் கலக்கி நம் மேல் ஊற்றினால் எப்படி எரியும்? எப்படி வேதனைப்படுவோம்?
இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்குள்
எதிர் நிலையாகும் பொழுது உடலில் எரிவது போல் உணர்ச்சிகள் இயக்கும்.
ஆக அந்த உடலை இயக்கும் உயிருக்கும் இந்த உணர்வான நிலைகள் நாம்
சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சலாகின்றது. அங்கே எரிச்சலாகும் பொழுது
1.உடல் முழுவதும் எரிச்சலும்
2.நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்,
3.உடலான சிவனுக்குள் எரிச்சல் ஊட்டும் நிலையாக அந்தச் சக்திகள்
மாறுகின்றது.
எரிச்சலை நீக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
நாம் சுவாசித்து, அதை நம் உடல் முழுவதும் படரச் செய்யவேண்டும். அதை நம் உடலில் உள்ள
ஒவ்வொரு அணுவிலும் படரச் செய்யவேண்டும்.
அதன் பின் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெறவேண்டும்
என்று நம் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அந்த உணர்வலைகளை மூச்சலைகளாகப் படரச் செய்ய
வேண்டும். அப்பொழுது
1.யாருடைய தீமையான உணர்வுகளும் நம் ஈர்ப்பிற்குள் வராது,
2.நம் ஆன்மா பரிசுத்தமடைகின்றது.
3.நம் ஆன்மா நலமானால் நம் உடலும் மகிழ்கின்றது.
4.நம் மனமும் மகிழ்ச்சி அடையும்.
நமது சரீமே சிவமாகின்றது. ஆலயங்களில் சிவனை வணங்குவது என்றால்
அங்கே நாம் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் என்று ஈசனுக்கு அபிஷேகம் செய்கின்றோம்.
மகரிஷிகள் வளர்த்த உயர்ந்த குணங்களையும் மகிழ்ச்சி பெறும் உணர்வின்
எண்ணங்களையும் நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் நல்ல வினையாகச் சேர்கின்றது.
1.நல் வினையின் நல் மணமாக,
2.வினைக்கு நாயகனாக
3.உடலின் ஆறாவது அறிவாக
4.அந்த ஆன்மாவிற்கு வினையாகச் சேர்கின்றது.
நாம் ஈசன் வீற்றிருக்கும் இந்த உடலான ஆலயத்திற்குள் அருள் உணர்வுகளை
ஒவ்வொரு நிமிடமும் அபிஷேகம் செய்து நம்மை அறியாமல் இயக்கும் சர்வ தீமைகளிலிருந்து விடுபட்டு
மன பலம் பெற்று மன வலிமை பெற்று உடல் நலம் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
எமது அருளாசிகள்.