ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 21, 2017

ஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றிக் கொடுக்கவில்லை என்றால் “அது இயக்காது” - ஞானத்தின் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்

இந்த அகண்ட அண்டத்தில் நம்மைப் போன்ற பிரபஞ்சங்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உணர்வுக்கோப்ப அங்கே மனித உருக்களில் மாற்றங்களும் உண்டு.

நமது பிரபஞ்சத்தில் எப்படி விஞ்ஞானப் பெருக்கங்கள் இருக்கின்றதோ இதைப் போல மெய்ஞானப் பெருக்கம் உள்ள பிரபஞ்சங்களும் உண்டு. அதையெல்லாம் நீங்களும் நுகரலாம். அறியலாம். பார்க்கலாம். என்னால் காண முடிகின்றது.

 வெள்ளக்கோவில் டாக்டர் கிருஷ்ணனுக்கு சில உண்மைகளைக் காணும்படி பரீட்சார்ந்தமாகக் கொடுத்தேன்.

அவர் என்ன பார்த்தார்?

1.நம் பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எதிலும் மனிதர்கள் இல்லை.
2.இந்தெந்தக் கோள்களில் இந்த அளவு நீர் இருக்கின்றது.
3.சில கோள்களில் உறை பனியாக இருக்கின்றது. அதெல்லாம் சிறிது காலத்தில் அழிந்துவிடுகின்றது.

இதையெல்லாம் அவருக்குத் தெளிவாகத் தெரியும்படி செய்தேன். எனக்கு மட்டும் தெரிந்தால் பத்தாது என்று அவருக்கும் காட்டினேன்.

ஆனால் அந்த மாதிரி எல்லாம் காட்டிய பின் என்ன ஆனது?

சுயநலத்தின் சொரூபங்கள் வந்துவிடுகின்றது. “நான் இருந்த இடத்திலே தேடுகிறேன்… நான் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்…” என்று இருந்துவிட்டார்.

ஆனால் குருவை மட்டும் தேடி வரமாட்டார்.

ஞானகுரு என்னை இருந்த இடத்திலே பெறச் செய்துவிட்டார். அதனால் “நான் குருவைத் தேடி எங்கேயும் செல்ல வேண்டியதில்லை”. குரு தான் சொல்லியிருக்கின்றார் அல்லவா…! நாம் இருந்த இடத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்று.

இப்படியும் சில பேர் உண்டு.

ஒரு பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன ஆகும்? வேலை செய்யுமோ?

சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கு மின்சாரம் எங்கே இருக்கின்றது என்று தேடி அதை ஏற்றுகின்றோம் அல்லவா.

சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எல்லாம் செலவழித்தால் பேட்டரி பலவீனமாகும். அதை உபயோகப்படுத்த மீண்டும் பேட்டரியைச் சார்ஜ் செய்துதான் ஆகவேண்டும்.

அதைப் போன்று அந்த அருள் உணர்வைத் தனக்குள் பெருக்குவதற்கு குருவைச் சந்தித்து உணர்வை உறவாடி அதிலுள்ள உண்மைகளைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அப்படி இல்லாமல்
1.குருவிடமிருந்து “எல்லாமே தெரிந்து கொண்டேன்…!”
2.அவரை எதற்காகப் பார்ப்பது?
3.குருவிடம் சொல்ல என்ன இருக்கிறது…? என்று சொன்னால் என்ன ஆகும்?

குரு கொடுத்த அந்த மெய் உணர்வுகள் அவருக்குள் இயக்கிய தன்மை தனக்குள் அதை மீண்டும் வலு பெறச் செய்யவில்லை என்றால்
1.ஆக மொத்தம் பலவீனமடையத்தான் செய்யும்.
2.போகும் பாதையில் வளர்ச்சியின் தன்மைகள் குன்றத்தான் செய்யும்.
3.இதை எல்லாம் நாம் தெரிந்துணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் அருள் ஞானிகளைப் பற்றிய அருள் ஞான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அதை எண்ணி எண்ணி அதற்கு ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லை என்றால் எது பதிவோ அதற்குத்தக்க நம்மைத் திசை திருப்பும். கிடைத்தும் பலன் இல்லாது போகும்.

யாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு மெய் உணர்வுகளை ஊட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணமே அந்த மெய் உணர்வுகள் உங்களுக்குள் “வலுக் கொண்டு ஓங்கி வளர வேண்டும்” என்பதற்குத்தான்.

அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.