குருநாதர் எமக்கு (ஞானகுரு) அருளிய அதே அருள் வழிப்படி உங்களுக்கும் அவர் உணர்த்திய பேருண்மைகளைத் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.
வாழ்க்கையில் நம்மையறியாது வரும் தீமையான உணர்வுகளை நீக்கிடும் அருள் சக்திகளை நம்முள் பெறுதல் வேண்டும்.
வயல்களில் களைகளை நீக்குவது போன்று நமது வாழ்க்கையில் வரும் விஷத் தன்மையான களைகளை
நீக்க வேண்டும்.
1.அப்படி விஷத் தன்மைகளை நீக்கத் தவறினால்
2.”துன்பமே வாழ்க்கை” என்ற நிலைகள் நம்முள் ஊடுருவி
3.தீமைகள் நமக்குள் வளர்ந்திடும் நிலை பெறுகின்றது.
4.ஆகவே மனிதர்கள் தம்மில் தீமைகளை நீக்கிடும் அருளாற்றலைப் பெறவேண்டும்.
துன்பத்தை நீக்கிப் பேரின்பத்தை உருவாக்கும் அருள் உணர்வுகளையும் நச்சுத் தன்மையைப்
பிளக்கும் அருள் உணர்வுகளையும் மகரிஷிகள் தமக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய ஆற்றல்கள் இப்புவியில் காற்று மண்டலத்தில் பரவிப் படர்ந்துள்ளது.
நாம் பல ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகத் தியானம் இருந்து, காற்றில் பரவிப் படர்ந்துள்ள அருள் உணர்வுகளைத்
தம்முள் கவர்ந்து வளர்த்து அதன் வழியில் மற்றவர்களையும் இணைத்திடல் வேண்டும்.
இப்புவியில் விஞ்ஞானிகளால் பரவியுள்ள நஞ்சுகளும் மனிதரை மனிதரே கொன்று குவிக்கச்
செய்யும் இரக்கமற்ற செயல்களைச் செயல்படுத்தும் உணர்வுகளும் எண்ண அலைகளும் ஒவ்வொரு மனித
உடலிலும் விளைந்து அது வெளிப்பட்டு இந்த காற்று மண்டலத்தில் நச்சுத்தன்மையாகப் படர்ந்துள்ளது.
மக்களை இந்த நச்சுத் தன்மையிலிருந்து மீட்பதற்கு அருள் ஞான உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து நஞ்சின் உணர்வுகள்
நம்முள் வளராது தடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் பெறும் அந்த அருள் ஞான உணர்வுகள்
1.நல்லதை எண்ணும் நல்ல உள்ளங்களில் வளரவேண்டும் என்று ஏங்கி
2.இந்த உணர்வை ஒலிபரப்புச் செய்யும்பொழுது
2.நாம் எடுத்த இந்த உணர்வுகள் காற்றிலே படர்ந்து
4.ஒவ்வொரு உள்ளத்திலும் விளையத் தொடங்கும்.
ஒரு நெல்லை மண்ணில் விதைத்தால் அது நெற் செடியாக விளைந்து அந்த செடியில் பல நெல் மணிகள் விளைகின்றன.
அப்படி விளைந்த பல நெல் மணிகளையும் மண்ணில் விதைத்தால் விதைத்த பல நெல் மணிகளும்
விளைந்து மலைபோல நெல் குவிகின்றது. அப்படி மலை போலக் குவிந்தால்தான் அவரவர் பசிக்கு அளவுக்குத் தக்கவாறு
உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.
1.நீ ஒரு நெல்லாக இருக்கின்றாய்
2.அந்த நெல்லின் தன்மையை பலவாக வளர்த்துக் கொண்டு
3.”சக்தி வாய்ந்த உணர்வின் ருசியை” ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் ஊட்டு
4.தீமைகளை நீக்கிய அருள்ஞான உணர்வுகளை “ஒலி பரப்பு செய்” என்று இதைச் செய்யும்படி குருநாதர் எமக்கு அருள் பணியாக இட்டார்.
குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து யாம் அவர் இட்ட பணிகளைச் “செம்மையாகச் செய்வோமா… செய்ய மாட்டோமா…?” என்று அறிவதற்கு எம்மைப் பல பரீட்சைகளுக்கு உட்படுத்தினார்.
ஒவ்வொரு நிலையிலும் யாம் பலருக்கு பல உதவிகளைச் செய்வோம். ஆனால் எம்மால் நன்மை
பெற்றவவர்களில் சிலர் எமக்குத் தீமை செய்ய முயல்வார்கள்.
குருநாதர் தீமைகளை அழித்திட எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தார். யாம் எண்ணத்தால் எண்ணினால் போதும், தீயவர்களுடைய
நிலைகள் செயலற்றதாகிவிடும். ஆனால்
1.பிறர் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவர்கள் நம்மை எண்ணும் போது
2.அவர்களுக்குள் “தீமைகள் செய்யும் எண்ணங்கள்தான் அழியவேண்டும்”
3.அவர்களுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் ஓங்கி வளர்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மலரவேண்டும் என்றுதான்
4.குருநாதர் எம்மைத் தெளிவாக்கி அருள் சக்தியினைக் கொடுத்தார்.
இப்படி ஆற்றல் மிக்க சக்தியினை எமக்கு குருநாதர் கொடுத்திருந்தாலும் எமக்குப் பரிசீலனை வரும் பொழுது அந்த நிலைகளில் கூர்ந்து கவனித்து
1.தீமை செய்பவர்களுடைய உணர்வுகளை எமக்குள் செலுத்தாதபடி,
2.அவர்கள் நலம் பெறவேண்டும்,
3.அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்,
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்ற நிலைகளைத்தான் குருநாதர் காண்பித்த அருள் வழியில் செய்து வருகின்றோம்.
இதன் வழியில்தான் நீங்களும் செயல்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு யாம் சொல்வது.
நாம் அனைவரும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து அருள் உணர்வின் ஆற்றலை நம்மில் பெருக்கி அதை நாம் மூச்சாக சொல்லாக வெளிப்படுத்த வேண்டும்.
இதை அறிந்து கொண்டவர்கள் எந்த நிமிடத்திலும் எங்கே சென்றாலும்
1.”எனக்குப் பிறிதொருவர் துன்பம் செய்தார்…
2.எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கின்றது” என்று எண்ணாதீர்கள்
3.அந்த வேதனையின் உணர்வை நம்மில் மாற்றவேண்டும்.
இதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எமக்குக் குருநாதர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்கும் தைரியத்துடன் ஏனென்றால் தைரியம் பெறவே இதைக் கொடுக்கின்றோம்.
எமது அருளும் குருநாதர் அருளும் உங்களுக்கு உறுதுணையாக
இருந்திடப் பிரார்த்திக்கின்றோம்.