ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2017

சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் உடலிலுள்ள உணர்வுகள் உந்தி சிந்தனையற்ற நிலையில் தீமையான செயல்களைச் செயல்படுத்தும் “தீய உணர்வுகளை…” நாம் மாய்க்க வேண்டும்

ஒரு சமயம் குருநாதர் சொன்னபடி திருப்பதியில் மேலே நாரதர் மன்றம் என்ற இடத்தில் அமர்ந்து என்னைத் (ஞானகுரு) தியானிக்கும்படி கூறியிருந்தார்.

தியானத்தில் அமர்ந்த சிறிது நேரத்தில் என் நினைவு எங்கெங்கோ சென்றது. மனைவி மக்கள் நினைவும் தன்னிச்சையாகச் செலவு செய்து கொண்டு நண்பர்களுடன் திரிந்து கொண்டிருந்த அந்த நினைவுகள் தான் வந்தது.

குருநாதரிடம் இப்படிச் சிக்கிக் கொண்டு காட்டில் அநாதையாக சரியான ஆகாரம் இல்லாமல் இப்படியெல்லாம் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே! என்ற எண்ணங்கள் வந்ததே தவிர “தியானம் இருக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்துவிட்டேன்.

ஆனால் மனது “படபடவென்று துடிக்க ஆரம்பித்துவிட்டது. துடிப்பை அமைதிப்படுத்த எழுந்து நடந்தேன். அச்சமயம் அங்கே குரங்குகள் கூட்டம் தென்பட்டது.

அதை வேடிக்கை பார்த்து மனதை அமைதிப்படுத்தலாம் என்று எண்ணிக் குரங்குகள் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு முரட்டுக் குரங்கு குரங்குக் கூட்டங்களை விரட்டிக் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது சின்னக் குட்டிகள் ஓடி வந்து தாய்க் குரங்கைத் தாவிக் கட்டிப்பிடித்துக் கொளவதும் தாய்க்குரங்கு குட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடுவதையும் பார்த்தேன்.

அதை பார்த்தவுடன் என் மனம் “அலைமோதிக்கொண்டு என் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் அதிகரித்து மயக்கம் வந்துவிட்டது. மரத்தடியில் அப்படியே சாய்ந்து விட்டேன்.

மயக்க நிலையில் என் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் காட்சியாகத் தெரிகின்றன. என் மூத்த பையன் “லாரிக்கு டயர் வாங்கவும் ரிப்பேர் செலவுக்குப் பணம் வேண்டும், எங்காவது பணம் வாங்கிக் கொடு…” என்று என் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

பணத்திற்கு நான் எங்கு போவேன்? என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருக்கின்றது.

பணம் வாங்கித் தருகிறாயா? இல்லையா?” என்று மிரட்டுகிறான் பையன்.

உன் அப்பாவிடம் போய்க் கேள் என்று சொன்னவுடன் வீட்டை அடமானம் வைத்துப் பணம் தருகிறாயா? இல்லையா? என்று மிரட்டுகிறான் பையன்.

அப்பொழுது என் மனைவி அழுது கொண்டே “கையிலிருக்கும் பணத்தையெல்லாம் தொலைத்து வயலையும் அடமானம் வைத்துத் தொலைத்துவிட்டாய்,

இனி வீட்டை அடமானம் வைத்து உனக்குக் கொடுத்துவிட்டு நாங்கள் எங்காவது விழுந்து “சாக வேண்டியதுதான் என்று சொல்லிச் சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த 2½ வயது பையனும் பெண் குழந்தைகளும் அழுது கொண்டே “அப்பா வரட்டும் சொல்லுகிறேன்என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

உடனே என் மனைவி கடைசிப் பையனைத் தூக்கிக் கொண்டு “குளம் குட்டையில் விழுந்து சாவோம்என்று சொல்லி வீட்டை விட்டு வெளியில் செல்கின்றார்கள்.

அச்சமயம் அக்கம் பக்கம் உள்ளவர்கள் என் மனைவியையும், குழந்தைகளையும் தடுத்து நிறுத்தி
1.என் பெயரைச் சொல்லி
2.“பாவிப்பயல்! இப்படிச் செய்துவிட்டு எங்கோ போய் விட்டானே…” என்று ஏசுகிறார்கள்.

இது காட்சியாகத் தெரிந்தவுடன் என் உடலில் உந்தப்பட்டு மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தேன்.

இது என்ன வாழ்க்கை!”என்ற வெறுப்பு மேலோங்கி தற்கொலை செய்து கொள்ளும் உணர்வுகள் உந்தப்பட்டு எழுந்து நீர் வீழ்ச்சியை நோக்கி நடக்கலானேன்.

அச்சமயம் மாலை 6.00 மணியிருக்கும். திடீர் என்று குருநாதர் காட்சி கொடுத்தார்.
1.“நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாய்
2.இப்பொழுது சாகப் போகிறேன் என்று சொல்கிறாயே…”என்று சொல்லி சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

உடனே என் கலக்கம் தீர்ந்தது. மனம் அமைதி அடைந்தது.

ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தேன். குருதேவர் காட்சி கொடுத்த நிலையிலேயே உபதேசிக்கலானார்.

சூரியன் தனக்குத் தானே வெப்பத்தை உருவாக்கிக் கொண்டு இயங்குகின்றது.

அதைப் போன்று சூரியனில் உதித்த ஒரு உயிரணு சூரியனால் பிரபஞ்சத்தில் வீசப்பட்டு சூரியனைப் போன்று தனக்குத் தானே வெப்பத்தை உருவாக்கும் துடிப்பு நிலை கொண்டு பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்க்கின்றது.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் அந்த உயிரணு பூமியால் ஈர்க்கப்பட்டு பூமியில் மிதந்து தாவர இனங்களில் வீழ்ந்து தாவர சத்தினை ஈர்த்து நுண்ணிய கிருமியாய் உடல் பெறுகின்றது.

சில நாட்களில் உடலில் வளர்ச்சிப் பெற்ற நுண்ணணுக்கள் உயிரில் ஆத்மாவாகச் சேர்ந்து கிருமியான உடல் மடிந்து விடுகின்றது. கிருமியின் உடலில் இயங்கும்போது உயிரில் ஆத்மாவாக சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்து மறுபிறப்பாக புழுவாக மறு உடல் பெறுகின்றது.

இவ்வாறே ஒவ்வொரு உடலிலும் உணவும் உணர்வும் எடுத்துக் கொண்டு ஜீவித்த நிலைகளுக்கொப்ப பூச்சியாக பாம்பாக பறவையாக, மிருகமாக, இவ்வாறு பல கோடி ஜென்மங்கள் பிறந்து இறந்து
1.மனித உடல் வரை உருவாகியது
2.”உயிரின் துடிப்பின் ஈர்ப்பு நிலையால்தான் என்பதை
3.முன்பு காட்சியாகக் காண்பித்து உணர்த்தியுள்ளேன் என்று கூறினார்.

உன் வாழ்க்கையில் குடும்பப் பற்றும் குழந்தைகளின்பால் உனக்கு உள்ள பாசத்தால் உன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் உந்தப்பட்டு எவ்வாறு உன் உடலில் செயல்படுகின்றன?

அதை நீ “அறிந்து உணரவே உன் உணர்வுகளை உந்தச் செய்து உன் குடும்பச் சூழ்நிலைகளைக் காட்சியாகக் காணச் செய்தேன். ஆனால் காட்சியாகக் கண்ட நிகழ்ச்சிகளினால்,
1.”உன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு
2.நீ சுவாசித்த மூச்சால் சிந்திக்கும் திறன் இழந்து உடல் சோர்வடைந்து,
3.”தற்கொலை…” செய்து கொள்ளும் எண்ணம் உருப்பெற்று,
4.உன் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தையும் மறந்து
5.உன் உடலையும் மாய்த்துவிடச் செயல்படுத்தியதல்லவா? “உன் சோர்வடைந்த உணர்வுகள் என்றார் குருநாதர்.

இதைப் போன்றே சுற்றுப்புறச் சூழ்நிலைகளினால் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
1.புலனறிவால் ஈர்க்கப்பட்ட உணர்வின் சுவாசத்தால்
2.”உடலில் உள்ள உணர்வுகள் உந்தப்பட்டு
3.தீய செயல்களைச் செயல்படுத்தச் செய்யும் தீய உணர்வுகளை மாய்த்திட
4.நான் உனக்கு “ஆத்ம சுத்திசெய்து கொள்ளும் ஆற்றல் பெறக் கற்றுக் கொடுத்தேன் அல்லவா
5.நீ முயன்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளூம் ஆற்றலை ஏன் பெறவில்லை? என்று கேட்டார்.

பின் தியானத்தில் அமர்ந்தேன். விடிவதற்குள் “ஆத்ம சுத்தி செய்து கொள்ளும் உணர்வின் ஆற்றலைப் பெறும்படிபல நிலைகளை உணர்த்திக் காட்டினார்.

குருநாதரிடம் அனுபவபூர்வமாக இவ்வாறு பெற்ற அருள் மகரிஷிகளின் ஆற்றல்களைத்தான் ஞான வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தகையை நிலையாக இருந்தாலும் அதிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்தீர்கள் என்றால் விடுபடும் ஆற்றல் கிடைக்கும்.

அதற்குண்டான மார்க்கங்களும் வரும். செய்து பாருங்கள்.