ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2017

நல்ல குணங்களைக் கொல்லும் தீமைகளிலிருந்து நம்மைக் காக்க வேண்டும் என்பதற்கே “கருப்பணச்சாமியைக் காட்டினார்கள் ஞானிகள்”

ஒருவர் எனக்கு இடையூறு செய்கிறார். வேதனைப்படுத்துகிறார். கொலை செய்ய வருகின்றார் என்று எண்ணும் பொழுது அச்சுறுத்தும் உணர்வுகள் வந்து “இரு அவனை நான் ஒரு கை பார்க்கின்றேன்” என்ற உணர்வுகள் வருகின்றது.

கருப்பணச்சாமியின் கையில் அரிவாளையும் கொடுத்து முன்னாடி மோப்ப நாயையும் வைத்துள்ளார்கள்.

காரணம் ஒருவர் நம்மைப் பார்த்துப் பழி தீர்ப்பேன் என்று சொன்ன உணர்வை நுகர்ந்த பின் நமக்குள் என்னவாகின்றது? நம்மிடத்தில் இருள் சூழ்கின்றது. வேதனை பெருகின்றது.

ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்... எனும் நிலையாக அவர் நம்மைப் பழி தீர்ப்பதற்கு முன்னால்
1.நாம் அவரைப் பழி தீர்க்க வேண்டும்
2.வெட்ட வேண்டும்... குத்த வேண்டும்... என்ற நிலை வருகின்றது.
3.சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லை. இதனின் உணர்வின் தன்மை உடலில் விளைகின்றது.
4.ஏதாவது ஒன்று என்றால் “தாக்குவதுதான்”.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்யவேண்டும்?

துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெறவேண்டும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அறியாமையிலிருந்து விடுபட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எங்கித் தியானிக்க வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் நஞ்சை வென்றது. உணர்வின் தன்மையை ஒளியாக்கும் திறன் பெற்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்வதால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் உயிரில் பட்டு இதனின் உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. உடல் முழுவதும் படர்கின்றது.

இதனின் உணர்வின் உணர்ச்சிகளை ஒளி அலைகளாக மாற்றுகின்றது. துருவ நட்சத்திரம் இருண்ட உலகிலிருந்து நம்மை மீட்கின்றது.
1.நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
2.அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
3.இப்படித்தான் ஞானிகள் நம்மைச் செய்யச் சொன்னார்கள்.

ஆனால் கருப்பணச்சாமிக்கு நாம் என்ன செய்கின்றோம்?

ஆட்டை வாங்கி உனக்குப் படையல் செய்கின்றேன்... “என்னை நீ காப்பாற்று...” என்று சொல்லி வணங்குகின்றார்கள்.

ஆட்டை அறுத்துக் கொலை செய்து சாப்பிட்டு கருப்பணச்சாமிக்குக் கொடுத்தால் அவன் என்னைக் காப்பாற்றுவான் என் மகனைக் காப்பாற்றுவான் என்று இருக்கின்றார்கள்.

இப்படி ஆட்டைப் பழி கொடுத்து வணங்கினால் என்னவாகும்? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது.

இது என்ன செய்யும் என்றால் நாம் தீமையின் நிலைகள் கொண்டு பிறரிடம் இதே செயலைச் செயல்படுத்தச் செய்யும்.
1.புற வாழ்க்கையில் இப்படி என்றால்
2.நமது அக வாழ்க்கையில் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது.
3.இதைக் காட்டுவதற்காகத்தான் கருப்பணச்சாமியை முச்சந்தியில் வைத்தார்கள்.

கருப்பணச்சாமிக்கு ஒரு பாட்டில் சாராயம் வைத்து ஆட்டுக்கறி வைத்து படையல் செய்து அருளாடி அவன் என்னைக் காப்பாற்றுவான் என்றால் அவன் எப்படிக் காப்பாற்றுவான்...!

தன் குடும்பத்தில் ஒரு துயரம் என்றால் கருப்பணச்சாமியிடம் போய்
1.என் மனைவி இப்படிச் செய்கிறாள் என்று கணவனும்
2.என் கணவர் இப்படிச் செய்கிறார் என்று மனைவியும் முறையிட்டு
3.“நீயே கேள்...!” என்று கணவன் மனைவிக்குள் சாபமிடும் நிலைகள் வருகின்றது.

இதனால் எத்தனை துயரங்கள் வருகின்றது?

கணவன் மனைவிக்குள் திருந்தி வாழ இடம் கொடுக்கின்றனரா...! இல்லை.

பாவி...! என்னை இப்படிக் கொடுமைப்படுத்துகின்றானே...! என்று புலம்பிச் சாபம் கொடுக்கின்றனர். ஏனென்றால் கருப்பணச்சாமி நம்மை மெச்சிக் காப்பாற்றுவார் என்று நினைக்கின்றனர்.

ஆட்டைக் கொலை செய்து இரத்த வாசனை கொண்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது பழிதீர்க்கும் உணர்வுகளே அங்கே வரும்.

எந்த ஆட்டைப் பலி கொடுத்தாரோ அந்த ஆட்டின் உயிரான்மா கொன்றவரின் உடலுக்குள் செல்கிறது. ஆட்டின் இறைச்சியைத் தின்றவரின் உயிரான்மா உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்கின்றது?

“நீ... வா இங்கே என்னைப் பழி தீர்த்தாயல்லவா....! வந்து ஆடாகப் பிறப்பு எடு” என்று ஆட்டின் ஈர்ப்புக்குள் செல்கின்றது.

இதைத்தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம்... “எமன் தண்டனை கொடுக்கின்றான்” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆட்டைப் பலி கொடுப்பதை அந்த இருள் சூழச் செய்யும் நிலையைச் செய்ததைக் கண்ணால் பார்க்கின்றோம். இது நமக்குள் “புத்திரன்” ஆகின்றது.

ஆட்டைப் பலி கொடுக்கும் பொழுது என்னென்ன உணர்வுகளை எடுத்தோமோ அதுவும் நமக்குள் புத்திரன் ஆகின்றது. இந்தக் குழந்தையை வளர்க்கின்றோம். இந்தக் குழந்தையை வளர்த்த பின் என்ன செய்கின்றோம்?

இதே உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமையை நீக்குவதற்கு மாறாக சித்திரபுத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் எனும் நிலையாக
1.“நீ ஆடாகப் பிறந்து வா...” என்று
2.நம் எண்ணம் எமனாகி அடுத்து ஆடாகப் பிறக்கச் செய்கின்றது.

யாம் உங்களை ஆட்டைச் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. கருப்பணச்சாமிக்கு ஆட்டைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் “உங்கள் நல்ல மனதைக் கொன்று போடும்...!” என்று தான் கூறுகின்றோம். கொல்லும் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க வேண்டுமல்லவா?

இப்படித் தடுப்பதற்குத்தான் குருநாதர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி அவன் வீற்றிருக்கும் உடலை ஆலயமாக மதி என்றார்.