ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2017

"எனக்கு நல்லதே நடக்க மாட்டேன் என்கிறது" என்ற பிடிவாதமான எண்ணத்திலிருப்பார்கள் – நல்லதை உருவாக்கும் வழி என்ன?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.

உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.

அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.

அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.

“ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் துன்பத்தை விளைய வைத்த உணர்ச்சிகளை அகற்றி
1.உங்களுக்குள் ஆற்றல்மிக்க சிந்தனையைக் கிளரும் நிலையை ஊட்டும்
2.அடுத்து உங்களுக்குள் ஒரு வலுவான எண்ணத்தை ஊட்டும்.

சங்கடங்களும் கஷ்டங்களும் வரும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி செய்து அந்தச் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதை உங்களுக்குள் பெருக்கும் சந்தர்ப்பமாக மாற்றிட முடியும். 

இதற்குப் பெயர் தான் “தியானம்” என்பது.