ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2017

உயிரின் ஆற்றலைப் பெற்று ஒளியான உலகை நாம் சிருஷ்டிக்க வேண்டும் – “காயத்ரி”

ஒவ்வொரு உயிரும் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு உணர்வின் சத்தையும் தன் உடலுக்குள் சேர்க்கப்பட்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் அடுத்த உடலின் அமைப்பே உருவாகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி நிலைகளில் தாவர இனங்களையும் உயிரினங்களையும் உட்கொண்டு அந்த உடலுக்கொப்ப எண்ணத்தின் நிலையும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நிலையும் வந்தது.

ஒவ்வொரு சரீரத்திலும் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்று தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து சுவாசித்து அதை வினையாக்கிக் கொள்கின்றது.

வினைகளாகக் கவர்ந்தது அனைத்தும் உடல்களில் அணுக்களாக விளைகின்றது. விளைந்த உணர்வின் சத்தை வடித்துத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்கின்றது.

உயிரின் ஈர்ப்பில் சேர்வது உயிராத்மா.

நமக்கு முன் காற்று மண்டலமாகத் தெரிவது அனைத்தும் பரமாத்மா. பரமான இந்த எல்லைக்குள் பரந்து கிடக்கும் இந்தச் சக்தியிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். புறத்தில் இருப்பது பரமாத்மா.

நாம் எதையெல்லாம் நினைக்கின்றோமோ அந்த உணர்வின் சக்தி பரமாத்மாவில் இருந்து ஈர்க்கும் பொழுது நம் உடலின் அருகில் வருகின்றது. அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (நம் காற்று மண்டலம்) வரும் பொழுது ஆத்மா.

சுவாசித்த பின் உயிரிலே மோதி உமிழ்நீராக மாறி நம் இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைந்த பின் அது ஜீவாத்மாவாகின்றது.

இயற்கையில் மனிதன் எண்ணும் எண்ணத்திற்குள் எவ்வளவு பெரிய ஆற்றல் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் நாம் எதையெல்லாம் நினைவு படுத்துகின்றோமோ அதைக் காற்றிலிருந்து சுவாசிக்க நேருகின்றது. சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படும் பொழுது
1.பொறிகளாக இயக்குகின்றது.
2.சொல்லாகச் செயலாக இயங்கச் செய்கின்றது.
3.உடலாக மாற்றிக் கொண்டயுள்ளது.


உடலில் விளைந்தது அனைத்தும் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உயிராத்மாவாகின்றது. அது தான் காயத்ரி.
1.அப்பொழுது முழுமையான நிலைகளைப் பெறுகின்றது.
2.அதாவது சிருஷ்டிக்கும் தன்மை.
3.விளைந்த நிலைகளுக்கொப்ப அடுத்து உரு பெறும் சக்தி பெறுகின்றது. காயத்ரி.

ஏனென்றால் உயிரணுவிற்குள் உயிர் சூரியனாக இயங்குகின்றது. சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே சிருஷ்டிக்கின்றது. அது போல் நம் உயிர் சூரியனாக இருந்து நாம் சுவாசிப்பதை எல்லாம் சிருஷ்டிக்கின்றது.

இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளி வரும் பேரருள் பேரொளி உணர்வுகள் நம் பூமியின் துருவப் பகுதி வழியாக வந்து கொண்டேயிருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் அலைகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது. துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த உணர்வலைகளை நம் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

மனிதன் என்ற முழுமையடைந்து அடுத்துப் பிறவியில்லா நிலையான அழியா ஒளியின் சரீரம் அடைய வேண்டும்.

1.சூரியன் உலகைச் சிருஷ்டிக்கின்றது.
2.உயிர் உடலைச் சிருஷ்டிக்கின்றது.
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் ஒளியான உலகை நாம் சிருஷ்டிக்க முடியும்.
4.இது தான் காயத்ரி.

அந்த நிலையை அடைந்தவர்கள் தான் மகரிஷிகள்.