ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2017

தியானம் செய்யும் பொழுது புருவ மத்தியை ஏன் நினைக்க வேண்டும்...?

ஒருவர் நம்மிடம் கோபம் வேதனை போன்ற உணர்வுடன் தாக்கிப் பேசும் பொழுது நம் நல்ல உணர்வுடன் அது சேர்ந்து கொள்கின்றது.

அப்படிச் சேர்ந்து கொண்டவுடன் அதைச் சரிக்கட்ட வேண்டும் என்ற நிலையில் அவர் உடலிலிருந்து (கோபமான நிலைகளில்) வந்தவுடன் “இரு நான் பார்க்கின்றேன்…” என்று சமப்படுத்தும் நிலைகளில் சண்டையிடுகின்றோம்.

அப்படித் தாக்கும் உணர்வு வரும் பொழுது நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம்.

காளி கோவிலுக்குச் சென்றால் நாம் புலியையா பலியிடுகின்றோம்…?

கோபப்படுவோரைப் பார்த்தால் காளி…! காளிக்கு முன்னாடி புலி. கோப உணர்வைச் சுவாசித்தால் நமக்குள் காளியாக மாறி இரு…! உன்னை நான் பார்க்கின்றேன் என்று ருத்ரதாண்டவம் ஆட வைக்கின்றது இந்த உடலான சிவம்.

நம் உடலுக்குள் போய் நல்ல குணங்களால் உருவான அணுக்களைக் கொல்லும் அணுக்களாக மாறுகின்றது. அதாவது
1.நம் உடலில் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம் என்று அர்த்தம்.
2.அதைக் காட்ட காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நல்ல குணங்கள் பலியானவுடன் ருத்ரதாண்டவம் ஆடுகின்றோம். இது போய் நம் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பிக்கின்றது.

நம்மைத் தாக்கியவரைக் கொல்ல வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இது சிவ தனுசு. இந்த வீரிய உணர்வு கொண்டு வலுவாகத் தாக்கப்படும் பொழுது வீழ்ச்சி அடைகின்றது.

அப்பொழுது இதை வெல்லக் கூடியது எது? அதைத்தான் அங்கே இராமாயணத்தில் சீதாராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று

1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் கோபம் உண்டாகும் நிலை அடங்குகின்றது.

நம் உடலிலுள்ள இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கலந்தவுடன் கோப உணர்வின் வீரியத் தன்மை அடங்குகின்றது.

பரசுராமன் சிவ தனுசை எடுத்தான் அதனால் தோல்வி அடைந்தான். இராமாயணத்தில் இவ்வளவு அழகாகக் கூறியிருக்கின்றார்கள்.

அருள் உணர்வுகளைப் புருவ மத்தி வழியாகச் சுவாசித்து உடலுக்குள் செலுத்துதல் வேண்டும். இது தான் விஷ்ணு தனுசு. இதைத்தான் இராமன் விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனைத் தோற்கடித்தான் என்பது.

மீண்டும் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி இனிப் “பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்…” என்பதையே இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

சகஜ வாழ்க்கையில்
1.மற்றவரைத் தாக்க
2.உடல் பெறும் உணர்வைக் கொண்டு தான் நாம் தாக்குகின்றோம்.

அதற்கு மாறாக பிறவி இல்லா நிலை அடைந்த
1.மெய் ஞானிகளின் உணர்வை தனுசாக ஆயுதமாக எடுத்துத் தாக்கும் பொழுது
2.அதனின் பலன் இருவருக்குமே ஒளியாக மாறும்
3.நல்ல சந்தர்ப்பமாக வருகின்றது.