இன்று எந்த ஜாதகக்காரரும் நம்மிடம் கேட்பது
உங்கள் நட்சத்திரம் எது?
பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தைச்
சொல்கிறோம். அதை வைத்து சில கணக்கீடுகளைச் சொல்வார்கள்.
இந்த இந்த நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஆகாது.
சில நட்சத்திரங்கள் இணை சேரும். கலவையாகும் பொழுது அந்த இராசிகள் இப்படி என்று
கூட்டிக் கழித்துப் பார்த்து இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று
கணிக்கின்றார்கள்.
ஆனால் என்ன தான் ஜாதகம் பார்த்தாலும் அவர்களால்
நடந்ததைத்தான் சொல்ல முடிகிறதே தவிர நடக்கப் போவதை யாராலும் கணிக்க முடியவில்லை.
கணித்துச் சொன்னாலும் அது ஆயிரத்தில் ஒன்று
நடந்தாலே பெரிதுதான். ஏனென்றால் ஞானிகள் மனிதனுக்கு அவ்வாறு கணிக்கவுமில்லை.
அப்படிச் சொல்லவுமில்லை.
ஞானிகள் வான இயல் சாஸ்திரத்தைக் கண்டார்கள்.
நட்சத்திரங்கள் கோள்கள் சூரியன் எல்லாவற்றின் இயக்கத்தையும் அறிந்தார்கள். அது
உண்மைதான்.
அதையெல்லாம் அறிந்து கொண்ட அவர்கள் இயற்கையின்
அந்த இயக்கத்துடன் ஒன்றி இயற்கையின் செயலாகச் சாதகப்படுத்துவதைத்தான் சாதகம் என்று
சொன்னார்கள். இன்று இவர்கள் சொல்லும் ஜாதகம் ஜோதிடம் போல் இல்லை.
இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை யார்
யாரெல்லாம் தங்களுக்குள் சேர்த்து உயிராத்மாவில் அதன் ஆற்றலை விளைவிக்கின்றார்களோ
அவர்களுக்கு எல்லாமே சாதகம் தான்.
இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளிக்
கற்றைகளையும் எடுத்துத் தனக்குள் விளைய வைத்துத்தான் அகஸ்தியர் துருவ மகரிஷியாகி
துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.
அவரைப் போன்று அவரைப் பின்பற்றி 27
நட்சத்திரங்களின் சக்தியை எடுத்தவர்கள் எல்லாமே இன்று அவரின் அணைப்பில் சப்தரிஷி
மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
27 நட்சத்திரங்களின் சக்தியைச் சாதாரண மனிதனால்
எடுக்க முடியாது. அப்படியே எண்ணி எடுத்தாலும் உடலுக்குள் கடுமையான விஷத்தன்மையாகி
உடலைக் கருக்கி விடும்.
குரு துணையில்லாமல் அதை எடுக்க முடியாது.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
காட்டிய அருள் வழியில் தாய் தந்தையைக் கடவுளாக எண்ணி உயிரைக் கடவுளாக மதித்து
ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி குரு அருளால் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி
எடுத்தல் நமக்குள் சிறுகச் சிறுக அந்தச் சக்தி கூடும்.
வாழ்க்கையில் எத்தகைய எதிர் நிலை வந்தாலும்
எல்லாமே நமக்கு நேர் நிலையாக “சாதகமாக” மாறும்.
27 நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று
எண்ண வேண்டியதில்லை. அகஸ்தியரை எண்ணி துருவ நட்சத்திரத்தை எண்ணி மகரிஷிகளை
எண்ணினால் குறிப்பாக விண்ணிலிருந்து புருவ மத்தி வழியாகச் சுவாசித்தால் அந்தச்
சக்தி எளிதில் கிட்டும்.
சாதகம் – சாதகம் பண்ணுகிறார் என்பதெல்லாம்
விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத்தான். இது தான் ஞானிகள் நமக்குச் சொன்ன “யோகம்..!”
நாமும் விண்ணிலே ஒளிச் சுடராக ஒரு மண்டலமாகத்
திகழலாம்.., படைக்கலாம். மனிதனின் வீரியத்தின் உண்மை இது. மகரிஷிகள் அடைந்த
பேரின்ப நிலை இது.