மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள்
தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி
உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.
அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும்
பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.
சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச்
சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது
சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.
ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது.
விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே
வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.
சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும்
பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகிவிட்டோம்.
நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச்
செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.
1.இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை.
2.உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை.
3.நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும்
என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ
4.அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.
பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும்.
அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம்
எண்ணங்கள் செல்லக்கூடாது.
1.மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து
எடுத்து
2.நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும்
3.(அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும்.
4.இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும். அந்த அருள்
ஆற்றல் எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வைக் கொண்டு வாருங்கள்.
மனித உணர்விற்குள் வரும் தீமைகளையும் துன்பங்களையும்
வேதனைகளையும் குறைப்பதற்கு தயவு செய்து ஒவ்வொரு நொடியிலும் அந்த ஞானிகளின் உணர்வை எடுத்துப்
பழகுங்கள்.
தீமைகள் வரும் பொழுது “ஈஸ்வரா…” என்று மேல் நோக்கிச்
சுவாசித்து விண்ணின் ஆற்றலைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆன்மாவிற்குள் தீமைகள்
புக முடியாது தடையாகும். செய்து பாருங்கள்.
தீமையை நீக்கும் சக்தியே நமக்குத் தேவை. உயிராத்மாவிற்குச்
சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து என்பது அது தான். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நாம்
அனைவரும் பெறவேண்டும்.
மனிதனுக்கு மட்டும் தான் அந்தத் தகுதி உண்டு.